ஏப்ரல் 28: ஹார்ப்பர் லீ பிறந்தநாள்: “என் படைப்பைப் பற்றிப் பேசுங்கள்!”

By ஸ்நேகா

“என் நாவல் இவ்வளவு பெரிய வெற்றியை அடையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. விமர்சகர்களால் விரைவாகக் கருணைக் கொலை செய்யப்படும் என்றுதான் நினைத்தேன். அதே நேரத்தில் கொஞ்சம் பேருக்கு இந்த நாவல் பிடிக்கும் என்றும் நம்பினேன்” என்று தன் நாவலான ‘டு கில் எ மாக்கிங்பேர்ட்’ குறித்துப் பேட்டி ஒன்றில் சொன்னார் ஹார்ப்பர் லீ.
1960ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல், அடுத்த ஆண்டே புலிட்சர் விருதை வென்றது. 62 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் நான்கு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது!
யார் இந்த ஹார்ப்பர் லீ?
1926ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலபாமா பகுதியில் பிறந்தார் ஹார்ப்பர் லீ. அந்தக் காலகட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதைக் கண்டார். அமெரிக்கரான ஹார்ப்பர் லீயின் அப்பா, வழக்கறிஞராக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு நியாயம் கேட்டு வாதாடிக்கொண்டிருந்தார். அதனால், ஹார்ப்பர் லீக்கு மனிதர்களிடையே இனரீதியாகப் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்க்கும் மனநிலை வந்துவிட்டது. படிக்கும்போதே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரின் எழுத்துத் திறனைக் கண்ட நண்பர்கள் பணியிலிருந்து விலகி, புத்தகம் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
இரண்டரை ஆண்டுகளில் ‘டு கில் எ மாக்கிங்பேர்ட்’ என்கிற நாவலை எழுதி முடித்தார் ஹார்ப்பர் லீ. புதிய எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தைக் கொண்டுவருவதில் பலருக்கும் தயக்கம் இருந்தது. எழுதி சில ஆண்டுகளுக்குப் பிறகே புத்தகம் வெளிவந்தது.


நாவலில் என்ன இருக்கிறது?
அமெரிக்கரான அட்டிகஸ் ஃபின்ச் வழக்கறிஞராக இருக்கிறார். தாய் இல்லாத மகள் ஸ்கெளட், மகன் ஜெம்முடன் வாழ்ந்துவருகிறார். ஆறு வயது ஸ்கெளட் தன் அனுபவங்களைக் கூறுவது போல எழுதப்பட்டிருக்கிற இந்த நாவலில், இனப்பாகுபாடு காரணமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தீவிரமான ஒரு பிரச்சினை குறித்து இந்த நாவல் பேசினாலும் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட விதத்தில் படிப்பவர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டுவிடுகிறது. ‘அட்டிகஸ்’ என்கிற மனிதர் மீது அளவற்ற பிரியத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
நாவல் வெளிவந்து ஓராண்டுக்குள் பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவல் வெளிவந்த இரண்டாவது ஆண்டு, திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது.
புகழும் பணமும் ஹார்ப்பர் லீயைத் தேடி வந்தாலும் அவர் அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நாவல் வெளிவந்து நான்கு ஆண்களுக்குப் பிறகு அவர் வெளியுலகத்துக்குத் தன்னைக் காட்டிக்கொள்வதில் ஆர்வம் செலுத்தவில்லை.


“நான் யார், என்ன செய்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? என்னைப் பற்றிப் பேசுவதைவிட என் நாவல் குறித்துப் பேசுவதையே விரும்புகிறேன். இனப்பாகுபாடு காரணமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒடுக்கப்படும் வரை இது அனைவருக்குமான அமெரிக்காவாக இருக்க முடியாது. நாவலில் வரும் அட்டிகஸின் குரல்தான் என் அப்பாவின் குரல். என் அப்பாவின் குரல்தான் என்னுடைய குரல். அதனால், அட்டிகஸைப் பற்றிப் பேசுங்கள். இனப்பாகுபாட்டைக் களையுங்கள்” என்றார் ஹார்ப்பர் லீ.
அமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இந்த நாவல் சேர்க்கப்பட்டது. சர்ச்சைகளையும் சந்தித்தது. பின்னர் பரவலான வரவேற்பைப் பெற்றது.
முதல் புத்தகம் வெளிவந்து 55 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கோ செட் எ வாட்ச்மேன்’ என்கிற இரண்டாவது நாவல், 2015ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் முதல் நாவலில் வரும் ஸ்கெளட் 26 வயது இளம் பெண்ணாக வருகிறார். 2016ஆம் ஆண்டு 89 வயதில் ஹார்ப்பர் லீ மறைந்தார்.
உலகம் முழுவதும் இனப்பாகுபாடு அகலும் வரை ‘டு கில் எ மாக்கிங்பேர்ட்’ நாவலின் தேவை இருந்துகொண்டிருக்கும். ஹார்ப்பர் லீயின் 95வது பிறந்தநாள் இன்று!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

56 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்