ரக்‌ஷா பந்தன்: கீழ்ப்படிதலின் சின்னமா?

By டி.எம்.கிருஷ்ணா

உணர்வுரீதியில் இந்த தேசத்தை ஒரு இந்து தேசமாக நமது அரசு நகர்த்திச் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. உதிரிக் குழுக்கள் என்று சொல்லப்படுபவர்கள் காதைத் துளைக்கும் விதத்தில் கூச்சலை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாம் தவிர்த்துவிட்டாலும் அரசின் உறுதியான நகர்வுகளைப் பார்க்கும்போது இந்த நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. தேசிய அளவிலான ஆராய்ச்சி, கல்வி, கலாச்சார நிறுவனங்கள் போன்றவற்றுக்குச் செய்யப்படும் நியமனங்கள், யோகாவை முன்னிறுத்திய மாபெரும் கொண்டாட்டம், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சம்ஸ்கிருதத்துக்கான இணைச் செயலர் என்ற பதவியை உருவாக்கிய அபத்தம் எல்லாம் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

யோகாவும் சம்ஸ்கிருதமும் கலாச்சார அடையாளங்கள்தானே தவிர மதரீதியான கருத்தாக்கங்கள் அல்ல என்று வாதிடலாம்; அப்படி வாதிட்டால் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடச் செய்யலாம். ஆனால், இந்த இந்தியத் தன்மையின் தொன்மையான அடையாளங்களை மையப்படுத்தி நடந்துகொண்டிருக்கும் விவாதங்கள், திணிப்புகள், தேச வெறி போன்றவையெல்லாம் இந்தியா குறித்தல்ல, நிச்சயமாக ‘இந்து இந்தியா’ குறித்துதான் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு நமக்குக் கண் தெரியாமலில்லை.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் இவர்களுடைய அபகரிப்பு நோக்கத்துக்கு அடுத்த பலி ரக்‌ஷா பந்தன் என்பதுதான். இந்த ஆண்டு ஆகஸ்டு 29 அன்று ரக்‌ஷா பந்தன் வரவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே ‘நமது சகோதரிகளுக்கு’ சமூகப் பாதுகாப்பு நலன்களை வழங்க வேண்டும் என்பது குறித்து நமது பிரதமர் ஏற்கெனவே அறைகூவல் விடுத்திருக்கிறார். ரக்‌ஷா பந்தன் என்பது மதம் சாராத நிகழ்வு என்றும், முகலாயப் பேரரசர்களுக்கு ராஜபுத்திர அரசிகள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றும், அது மதச்சார்பற்றது என்பதால் அனைவராலும் பின்பற்றப்படுகிறது என்றும் சொல்லும் குரல்கள் என் காதுகளில் விழுகின்றன. கிறிஸ்தவர்களின் ‘வாலண்டைன் தின’த்துக்கு (காதலர் தினம்) போட்டியாக இந்து மதத்தின் மதச்சார்பின்மையைக் கொண்டாடும் விதத்தில் இது பயன்படுத்தப்படுகிறது என்பது எனக்குத் தெரியும்; என்றாலும் இந்த விழாவின் மதச்சார்பற்ற அம்சங்களுக்கெதிராக நான் வாதிடப்போவதில்லை. இந்த விஷயத்தில் (அதாவது ரக் ஷா பந்தன் விஷயத்தில்) சில முல்லாக்களும் தங்கள் எதிராளிகளான இந்துத்துவர்களுடன் கைகோத்துக்கொள்வதுதான் வேடிக்கை. சரி நான் விஷயத்துக்கு வருகிறேன்.

ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் அன்பின் அடையாள மாகவும் மதம், சாதி போன்ற பிளவுகளை இணைக்கு பாலமாகவும் ராக்கியைப் பலரும் கருதுகிறார்கள். பாலுணர்வு சாராத வகையில் ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்வதற்குச் சமூகம் அளித்திருக்கும் ஒரு வகை ஒப்புதலாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், இதன் கட்டமைப்பில், சரியாகச் சொல்லப்போனால், ராக்கி கட்டுவதில் ஆண்-பெண் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதை நாம் அடையாளம் காண வேண்டும். தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஒரு ஆணிடம் ஒரு பெண் கேட்பதன் அடையாளம்தான் ராக்கி. ஆண்களின் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த வனாந்தரத்தில் பெண்ணுக்குப் பக்கபலமாக ஒரு ‘சகோதரன்’ இல்லையென்றால் தன்னால் பாதுகாப்பாக வாழ்க்கை நடத்த முடியாது என்ற முடிவுக்கு அந்த ‘சகோதரி’ வருகிறார். சமூகத்தில் ஆணின் பலத்தையும் அதிகாரத்தையும் அவள் கொண்டாடுகிறாள்; அந்த ஆண் தனது சிறகுக்குக் கீழே அந்தப் பெண்ணை வைத்திருந்து அவளை எந்தத் தீங்கும் அணுகாதபடி பாதுகாக்குமாறு அந்தப் பெண் வேண்டிக்கொள்கிறாள். ஆக, ராக்கியின் வடிவத்தில் இருப்பது ஒரு ‘கண்ணி’தான்’. ‘கண்ணி’ என்பது மிகவும் கடுமையான வார்த்தையாக இருக்குமென்றால் ‘தாழ்ப்பாள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஒரு ஆணுடன் கொண்டிருக்கும் உறவின் அடிப்படையில்தான் பெண் என்பவள் பார்க்கப்படுகிறாள்; அது மட்டுமல்லாமல் அந்த ஆணைச் சார்ந்தவளாகவும் அவனுக்கு அடங்கியவளாகவும்தான் அந்தப் பெண் பார்க்கப்படுகிறாள். இதில் உள்ளர்த்தம் என்னவென்றால் பெண்தான் ‘பலவீனமான பாலினம்’; அவளுடைய மேம்பாடு என்பது ஆணின் ஆதரவாலும் அங்கீகாரத்தாலும் மட்டுமே ஏற்படுகிறது.

முகலாய மன்னருக்கு ராஜபுத்திர அரசி ராக்கி அனுப்புவதென்பது சரணடைவதன் அடையாளம்; அவரை ‘பெரிய அண்ண’னாக ஏற்றுக்கொண்டு, தனது நாட்டை அழிக்காமல் காத்தருள வேண்டும் என்று இறைஞ்சுவதன் அடையாளம். ரக்‌ஷா பந்தன் என்பது பந்தத்தின் விழாதான், ஆனால், சமமானவர்களுக்கு இடையேயான பந்தமல்ல அது. நான் சொல்வது சற்றுக் கடுமையானதாக தொனிக்கலாம். ஆனால், இந்த விழாவின் அடிநாதமாகக் கருதப்படும் ‘அன்பு’ ஒட்டுமொத்தமாக சமத்துவமே இல்லாத அன்பாகத்தான் தோன்றுகிறதல்லவா?

நிச்சயமாக, இது ஒரு இந்தியத் தன்மைதான். பெண்களை, ‘தாய்மார்கள்’, ‘சகோதரிகள்’ அல்லது ‘மனைவியர்’ என்று மட்டும்தானே குறிப்பிடுவோம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது மரியாதையான விஷயமாகத் தெரியலாம்; ஆனால், பெண்கள் மீது நாம் ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த அடையாளங்களெல்லாம் நமக்குத் துணைபுரிகின்றன என்பதை நாம் உணர வேண்டும். சமூகரீதியிலும் பொதுவெளியிலும் பாலினம் என்பது வெட்கக்கேடான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே, பெண்களை நாம் மதிக்க வேண்டும் என்றால் அவர்களிடம் உள்ள அந்தப் பாலின அடையாளம் களைந்தெறியப்பட வேண்டும். அப்படியென்றால் அவள் ஒரு தாயாகவோ தங்கையாகவோ மனைவியாகவோ இருந்தாக வேண்டும். ஒரு சகோதரனாகவோ மகனாகவோ கணவனாகவோ அந்த ஆண் பாதுகாப்பு தருகிறான். ‘பாதுகாப்பு’ என்பது பெரும்பாலும் ‘அடைத்துவைத்தல்’ என்பதற்கு மாற்றுச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக, ஒரு சகோதரியாகவோ தாயாகவோ மனைவியாகவோ இல்லாத சுதந்திரமான பெண் என்பவள் நம்பத் தகாதவள், திமிர் பிடித்தவள், நடத்தை கெட்டவள் என்றெல்லாம் சித்தரிக்கப்படுகிறாள். சுதந்திரமான பெண்ணைக் குறிக்க, பெரும்பாலும் ‘ஊர்மேய்பவள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தாய்/ சகோதரி/ மனைவி என்ற சமன்பாட்டைப் பெண்கள் மீறுவதால்தான் ஆண்களில் காமுகர்கள் உருவாகிறார்கள் என்றுகூட ஆண்கள் வாதிடுவார்கள். ஆண் என்றாலே வேறு மாதிரிதான்; அவனுடைய ஆண்மை என்பது அதிகாரம், சக்தி, மரியாதை ஆகியவற்றின் அடையாளம். அவன் பலம் மிக்கவனாகத்தான் இருந்தாக வேண்டும்; அவன்தான் பாதுகாவலன் ஆயிற்றே!

இந்த மாபெரும் பின்னணியில் வைத்துதான் ரக்‌ஷா பந்தனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் ரக்‌ஷா பந்தன் என்பது அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் கயிறு கட்டுதல், சகோதரரின் நெற்றியில் திலகமிடுதல், அவருக்கு இனிப்பு வழங்கி அவரது அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவை மட்டுமல்ல என்பது நமக்குப் புரியும். ராக்கி என்பது அன்பின் கயிறு அல்ல; கீழ்ப்படிதலின் முடிச்சு.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரும் ரக்‌ஷா பந்தனைப் பற்றிய எனது மதிப்பீடு மிகவும் கடுமையானது என்று நினைக்கக்கூடும். இது கோணல் புத்தி என்றும், அழகான ஒரு நிகழ்வைப் பெண்ணியக் கூச்சல் மூலமாக நான் சிதைக்கிறேன் என்றும் சிலர் சொல்லக்கூடும். ஆனால், இந்த விழா குறித்து மதிப்பிடும்போது தங்கள் சொந்த அனுபவங்களையும் நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்க்கும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ‘உங்களை’ என்று நான் கேட்பது ஆண், பெண் ஆகிய இரு தரப்புகளையும்தான்.

- கட்டுரையாளர்
கர்நாடக சங்கீதக் கலைஞர், சமூக -அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: tmkrishnaoffice@gmail.com
© ‘தி இந்து’ (ஆங்கிலம்)
தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

9 mins ago

க்ரைம்

15 mins ago

க்ரைம்

24 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்