சிந்தனை: லேடீஸ் நைட் என்னும் விபரீத வலை

By இந்துஜா ரகுநாதன்

கடந்த சில மாதங்களாக எல்லா தினசரிகளிலும் கண்ணில் பட்ட ஒரு விளம்பரம் கவனத்தை ஈர்த்த்து. “லேடீஸ் நைட்” அதாவது பெண்களின் இரவு என்று பொருள்படும் அந்த விளம்பரம் பெரும்பாலும் வார நாட்களான செவ்வாய், புதன்கிழமைகளில் மட்டுமே தென்படும். பிரபல ஓட்டல்கள், பப்களில் ‘லேடீஸ் நைட்’ என்று நடத்தபடுவதைக் குறிக்கும் விளம்பரம் அது. இதைப் பார்க்கையில் பெண்களுக்காகப் பிரத்யேகமாக பப்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்றே தோன்றியது. குடிப்பழக்கம் ஆண், பெண் என இரு பாலாருக்குமே தீய பழக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே பிரச்சினை அதுவல்ல. “லேடீஸ் நைட்” என்று நடத்தப்படுவது பெண்களுக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.

லேடீஸ் நைட் என்றால் என்ன?

பொதுவாக பப், டிஸ்கோதேக் களுக்கு வார இறுதி நாட்களான் வெள்ளி, சனி இரவுகளில் தான் பெரும்பாலோர் போவது வழக்கம். அங்கு ஜோடியாகத்தான் செல்ல வேண்டும். நுழைவுக் கட்டணமாகச் சுமார் ரூபாய் 500 முதல் 5000வரை ஓட்டலுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் என்ற பெயரைக் கொண்டதால், ஆண்களின் தொந்தரவு இல்லாமல் ஓட்டலில் தோழிகளுடன் பொழுதைக் கழிக்கலாம் என்பது பொருள் இல்லை. பெண்களோடு ஆண்களுக்கும் வழக்கம்போல அனுமதி உண்டு. ஆனால் லேடீஸ் நைட் அன்று பெண்களுக்கு அனுமதி இலவசம். இதுதான் இந்நாளின் சிறப்பு. வார நாட்களான செவ்வாய், புதன் கிழமைகளில் மட்டுமே நடத்தப்படும் ‘லேடீஸ் நைட்’டில் பெண்களுக்கு அனுமதியோடு, அளவில்லா மதுபானம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக மது அருந்த முடிவதால் லேடிஸ் நைட்டிற்கு நகரங்களில் அமோக வரவேற்பு. இது இரவு 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நீள்வதால் பணியிலிருந்து திரும்பும் பல பெண்களுக்கு இங்கு செல்ல வசதியாக உள்ளது. சில ஓட்டல்கள் மதுவுடன், இலவசமாக உணவு வகைளையும் வழங்குவது கூடுதல் சிறப்பு அம்சம். மொத்தத்தில் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என்று எல்லா நகரங்களிலும் பிரபலமாகி வரும் ‘லேடீஸ் நைட்’ பப்புக்குப் பெண்களை வரவழைக்க எல்லா வித யுக்திகளும் கையாளப் படுகின்றன.

ஓட்டல்களின் வியாபார யுக்தி

பெண்களை மட்டும் இலவசமாக அனுமதித்துவிட்டுப் பல சலுகைகளையும் தந்துவிட்டால், ஓட்டலை மூடிக்கொண்டுதான் போக வேண்டும். வார இறுதி நாட்களில், வாரம் முழுவதின் பணிச்சுமையை மறந்து, புத்துணர்வு பெற நினைக்கும் ஆண்களும் பெண்களும் பப்களில் குவிந்துவிடுவது வாடிக்கைதான். அதேபோல் வார நாட்களிலும் ஓட்டல்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்துக் கொண்டுவந்த ஒன்றுதான் இந்த ‘லேடீஸ் நைட்’. வார நாட்களில் வர்த்தக ரீதியாக நஷ்டத்தில் இருந்த பப்களில், இலவச அனுமதியும், மதுவும் வழங்கிப் பெண்களை அதிக அளவு வரவழைத்துவிட்டால், அந்த இடத்தில் ஆண்கள் தன்னாலே குவிந்துவிடுவார்கள் என்ற வியாபார நோக்கமே இதில் அடங்கியுள்ளது. பெண்கள் ஒரு குழுவாக வந்து, பல மணி நேரம் செலவிடுவதால் ஆண்களும் நண்பர்களுடன் கூடி வந்து அளவில்லாமல் குடித்து மகிழ அஞ்சுவதில்லை. மேலும், மனைவியுடன் வரும் கணவர்களுக்கும், ஒருவருக்கு மட்டும் செலவு செய்தால் போதும் என்பதாலும் இந்த நாட்களை அதிகம் விரும்புகின்றனர். இதில் இரு தரப்பினருக்கும் லாபம். வார நாட்களில் ஈயாடி இருந்த பப்களும், ஓட்டல்களும், வார இறுதி போல் தற்போது நிரம்பி வழிவதன் ரகசியம் இதுதான்.

லேடீஸ் நைட்டுக்கு உலக அளவில் தடை

உலகம் முழுதும் ‘லேடீஸ் நைட்’ பிரபலம் என்றாலும், அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டும் இலவச மது என்பது இன வேற்றுமையை ஊக்கப்படுத்துவதாக உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஹைதராபாதிலும் ‘லேடீஸ் நைட்’ பப்களில் திடீரெனத் தடை செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக இதுவும் வழிவகுப்பதாகக் கூறி சுங்கத்துறை இந்தத் தடையை விதித்தது. இந்திய சுங்கச் சட்டத்தின் கீழ் மதுபான விற்பனையை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படும் எந்தவித நடவடிக்கையும் தடை செய்யப்பட்டதாகும். ஹைதராபாதில் இந்தத் தடையை அமல்படுத்தியபோது, பெண்களும் பெண்கள் அமைப்புகளும் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பெண்கள் ஒரு பகடைக்காய்

பெண்கள் மீதான வன்முறை, அதை எதிர்த்து போராட்டங்கள் ஆகியவை ஒரு புறம் இருக்க, சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பெண்களையும், பொருளாதார நோக்கிற்காக இப்படிப் பகடைகாயாகப் பயன்படுத்துவது வேதனையான விஷயம். தெரிந்தோ, தெரியாமலோ இதற்குப் பெண்களும் உடந்தையாகிவிடுகின்றனர். இன்றைய நவீன யுகப் பெண்களும் வர்த்தக நோக்கின் காரணமாக ஆண்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அடிமைப்பட்டுப் போய்விட்டதைக் கூர்ந்து பார்த்தால் உணரலாம். சமஉரிமைக்குக் குரல் கொடுக்கும் இச்சமயத்தில், பெண்களுக்கு மட்டும் சில சலுகைகள் எதற்கு என்ற விவாதமும் எழத்தான் செய்கிறது. ‘லேடீஸ் நைட்’டைத் தடை செய்தபோது தம் சுயஉரிமைக்காகக் குரல் கொடுத்த பெண்கள், இவ்வாறு வர்த்தகப் பொருளாகப் பெண்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தும் போராட வேண்டும். இது போன்ற கீழ்த்தனமான செயலுக்குத் துணைபோவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு பெண் அற்ப சலுகைகளுக்காகத் தன் அடையாளத்தை இழக்க ஒருபோதும் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

47 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்