விவாதக் களம்: உடைத்தெறிவோம் கற்பிதச் சங்கிலியை

By செய்திப்பிரிவு

தன்னை ‘பாலியல் தொழிலாளி’ என்று அழைத்துத் துன்புறுத்திய கணவனைக் கொன்ற மனைவியின் செயல் திட்டமிட்ட கொலைச் செயல் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து பிப்ரவரி 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதியிருந்தோம். பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியைக் காயப்படுத்த நடத்தை சார்ந்த குற்றச்சாட்டுக்களைக் கையில் எடுப்பது எதனால் எனக் கேட்டிருந்தோம். தவிர, ஆணுக்கும் பெண்ணுக்கும் நடத்தை சார்ந்த குற்றச்சாட்டுக்களைக் கையாள்வதில் இருக்கும் போதாமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. கற்பிதச் சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமே தீர்வாக அமையும் எனப் பலர் எழுதியிருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு… 

 

நான் ஒரு குடும்பத்தின் தலைவன், தலைவி என்று மார்தட்டிக்கொள்வது மட்டுமே தம்பதியினருக்கு உயர்ச்சி இல்லை. அதை எப்படி வழிநடத்துகிறோம் என்பதற்கு அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் கொடுக்கும் மதிப்பீட்டில்தான் உள்ளது அவர்களது உயர்வு. ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்பதறியாமல் பேசும் வசைச் சொற்களின்போது எதிராளி படும் வேதனையால் அவரவர் வேதனை துடைக்கப்படுகிறது என்று பலரும் தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

குழந்தைகளின் முன்பு வசைபாடுவது பேசுபவரின் மதிப்பைத்தான் குறைக்கும். பிற்காலத்தில் அவர்களது வாழ்க்கையையே புரட்டிப்போடும் சக்திவாய்ந்த கருவியாகக்கூட அது  மாறிவிடக்கூடும்.  பெண்களின் நடத்தையைக் கருவியாகப் பயன்படுத்தினால் அந்தப் பெண் தன் கணவனுக்குக் கொடுத்த தண்டனையும் உச்ச நீதிமன்றம் அப்பெண்ணுக்குக் கொடுத்த தண்டனையும் வரவேற்கத்தக்கவையே.

-ச. அரசமதி, தேனி.

 

உயிரற்ற ஒரு பொருளுக்கு உள்ள மதிப்புகூடப் பெண்ணுக்கு இல்லை என்பது கசப்பான உண்மை. உச்ச நிலைக்கு உயரும் பெண்களை எப்போதுமே  இந்தச் சமூகம் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகிறது. அவர்களது உழைப்பும் நேர்மையும் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. பணி இடத்திலும் பொது வாழ்விலும் முன்னேறும் பெண் களின் இயக்கத்தை முடக்கச் சமூகம் எடுக்கும் ஆயுதமே நடத்தை குறித்த கற்பிதங்கள்.

படித்தவர்கள், நாகரிகம் தெரிந்தவர்கள், கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பவர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள்  நிறைந்த இந்தச் சமுதாயம்தான் பெண்களை இழிவுபடுத்துவதிலும் முதலிடம் வகிக்கிறது. தெருச் சண்டையோ சமூக வலைத்தளச் சண்டையோ ஒரு ஆணை திட்டும்போதுகூட அவனது அன்னையையோ சகோதரியையோ மனைவியையோ மகளையோ தான் இகழ்கிறார்கள். பெண் என்பவள் தெய்வீக வடிவு, கடவுள், இயற்கை என்றெல்லாம் புனிதப்படுத்தும் இந்தப் புண்ணிய நாட்டில்தான் அதே பெண்ணைக் கேவலப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.

கற்பு குறித்த கற்பிதங்களை இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அது வகுத்து வைத்திருக்கும் லட்சுமணக் கோட்டைத் தாண்டுபவர்கள் சுலபமாக நடத்தையில் களங்கப்படுத்தப்படுகிறார்கள். அந்தக் கற்பும் பெண்ணை முடக்கிப் போடுவதாகவே இருக்கிறது. அந்த வரையறைக்குள் அடங்கும் பெண்கள் புனிதம் அடைகிறார்கள். எதிர்க் கேள்வி கேட்பவர்கள் களங்கப்படுத்தப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் உடைக்கும் வலிமை பெண்ணுக்கு உண்டாக வேண்டும். இத்தகைய அர்த்தமற்ற பேச்சுக்களைத் தூசாக நினைத்துத் தட்டிவிட்டுச் செல்லும் துணிச்சல் எல்லாப் பெண்களுக்கும் கைவர வேண்டும்.

- தேஜஸ், காளப்பட்டி.

 

காலங்காலமாகப் பெண்களை எதிர்க்க, ஆண்கள் சுலபமாகக் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம், பெண்ணை ‘நடத்தை கெட்டவள்’ என்று கூசாமல் சொல்வதுதான். தங்கள் இயலாமையை மறைக்கவும் இம்மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் எண்ணமெல்லாம் இவ்வாறு சொன்னால் பெண்களை அடக்கிவிடலாம் என்பதுதான்.

இத்தகைய பேச்சு எல்லைமீறிப் போகும்போது ஒரு சில பெண்கள் கணவனைக் கொலை செய்யும் மனநிலைக்குக்கூடத் தள்ளப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. தற்காலத்தில் இவ்வாறு பெண்களை இழிவுபடுத்துவது படித்தவர்கள் மத்தியிலும் அதிகமாகிவிட்டது என்பதற்குச் சமூக வலைத்தளங்களே சாட்சி. 

கணவன், மனைவிக்கு இடையே இருந்த இத்தகைய கேவல வசைகள் பொதுவெளியில் பெண் அரசியல்வாதிகள், நடிகைகள், பெண் பத்திரிகையாளர்கள் என அனைவர் மீதும் சகட்டுமேனிக்கு வீசப்படுகிறது.  எல்லோரையும் வாய்க்கு வந்தபடி பேசும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? பெண்கள் அனைவரும் இணைந்து போராடித்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

- பி. லலிதா, திருச்சி.

 

கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்தாலும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அது மனத்தில் இருந்துகொண்டே உறுத்தும். மனைவியைத் தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டுவது சாதாரணமாகிவிட்டது. இதன் விளைவுகள் மோசமானவையாக இருக்கும். பெண்கள் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதற்காக ஆண்கள் அதிகம் பேசக் கூடாது. பொறுமைக்கும்  எல்லையுண்டு.

- பொன்.குமார், சேலம்.

 

நம் சமூகத்தின் ஒழுக்கம் சார்ந்த கற்பிதச் சங்கிலிகளில் முக்கியமானது கற்பு.  ஆனால், அது பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. ஆண் தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒருநாளும் பயப்பட வேண்டியதில்லை.  ஏனெனில், சமூகத்தின் பார்வையில் ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டுமே இடப்பட்ட கட்டளை. அவள் என்றைக்கும் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டும் இரவு எட்டு மணிக்கு வேலை முடித்து வரும்போதும் ‘கற்பு’, ‘கற்பு’ என்று பயந்தே ஆக வேண்டும் எனவும் சமூகம் நிர்பந்திக்கிறது.

உண்மை என்னவென்றால் அவள் உடலால் பாதிப்புக்குள்ளாவது ஒரு ஆணின் ஒழுக்கமற்ற செயலால். மனத்தால் பாதிக்கப்படுவது ஒரு ஆணின் அர்த்தமற்ற, நியாயமற்ற, நாகரிகமற்ற பேதைச் சொற்களால். ‘பாலியல் தொழிலாளி’ என்று நாக்கு கூசாமல் தன் மனைவியைப் பார்த்துச் சொல்பவன் வஞ்சனையும் இயலாமையும் கொண்ட ஆணாகத்தான் இருப்பான்.  அவன் எண்ணம் முழுவதும் மனைவியைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே இருந்திருக்கும். 

அது முடியாமல் போனதால் வார்த்தைகளால் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறான். இனி வரும் காலத்தில் பெண் என்றால் அவளை உடல் சார்ந்து சித்தரிப்பதையும் கட்டுப்பாடுகள் விதிப்பதையும் நிறுத்திக்கொண்டு, அவளின் தனித்தன்மையையும் அறிவையும் சித்தரிக்க ஆரம்பித்தால்தான் கற்பிதச் சங்கிலிகளை அறுத்தெறிய முடியும்.

- சு.கார்கி, புதுச்சேரி.

 

வாழ்க்கைத் துணை யாக இருப்பினும் அவரவருக்கான சுதந்திரத்தில் மற்றொருவர் விலங்கிடுவது தவறு. இறுதி வரை உடன்வரும் பந்தமாயினும் விருப்பு வெறுப்புகள் அனைத்தும் அவரவர்க்குரியது. ஆயினும், மனைவி மட்டும் கணவருக் காகவும் அவரின் குடும்பத்தினருக்காகவும் தன்னை மாற்றிக் கொண்டு வாழும்படி  ஆளாக்கப்படுகிறார்கள். இதை மாற்ற முயற்சி எடுக்கும்போதே அவளின் ஒழுக்கம் சார்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. உடலளவிலும் மனதளவிலும் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே திருமண பந்தம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.

-  இ. கலைக்கோவன், தமிழாசிரியர், செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.

 

கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன் படுத்தினால் பெண்கள் அடங்கிப்போய் விடுவார்கள் என்பது ஆண்களின் வக்கிரத்தனத்தின் வெளிப்பாடுதான். நான் சரியானவள் என்பதை மற்றவருக்கோ கணவருக்கோ நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனப் பெண்கள் முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆண்கள் மாறுவார்கள். கணவரின் சொல்லுக்கும் செயலுக்கும் உடன்படுவதே நல்ல மனைவியின் அடையாளம் எனும் கற்பிதச் சங்கிலிக்கு இனிவரும் தலைமுறையினர் உடன்பட மாட்டார்கள்.

- பார்வதி கோவிந்தராஜன், திருத்துறைப்பூண்டி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE