பெண் இன்று

தந்தையுமானவர் | ஆயிரத்தில் ஒருவர்

Guest Author

‘எனக்குத் தாய், தந்தை எல்லாமே என் அம்மா கலாவதிதான்’ – எனது வாழ்க்கையை நினைவுகூரும்போது என் மனதில் தோன்றும் சொற்கள் இவைதான். எனக்கு 13 வயதானபோது தந்தையை இழந்தேன். அந்தத் தருணத்திலிருந்து வெளி உலகை எதிர்கொள்ளும் பொறுப்பு என் அம்மாவின் தோள்களில் விழுந்தது. அம்மா, கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர். கணவனை மட்டுமே நம்பியிருந்த வாழ்க்கை, ஒரே இரவில் மாறியது. ஆனாலும், தளராமல் தன் பிள்ளைகளுக்காகத் துணிவுடன் போராடத் தொடங்கினார்.

பெரிய படிப்பு இல்லாமல், வைராக்கியத்தை மட்டுமே துணைக்கு வைத்துக்கொண்டு எங்களை வளர்த்தார். எங்களைப் படிக்க வைப்பதற்காக எளிய வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தினார். நான் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் உறவினர்கள், “ஒரு வருடம் வீட்டில் வைத்திருந்து பிறகு திருமணம் செய்து விடுங்கள்” எனக் கூறினார்கள். ஆனால் என் அம்மாவோ, “படிக்கிற பிள்ளை படிக்கட்டும்” என்று உறுதியாக நின்றார். அதன் பலனாக, நான் இளங்கலை கணிதம் பயின்றேன். பின்னர் நான் போட்டித் தேர்வுக்குத் தயாரானபோதும், தோல்வி அச்சமின்றித் தொடர்ந்து ஊக்கம் அளித்தார் அம்மா. இறுதியில், வெற்றியுடன் வேலைவாய்ப்பைப் பெற்றேன்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் என் அம்மாவும் அண்ணனும் முன்னின்று எனக்குத் திருமணம் செய்துவைத்தனர். இன்று எனக்கும் இரண்டு பிள்ளைகள். ஆனால், இன்றும் என் அம்மாவின் நினைவு வந்தாலே பெருமையும் பாசமும் மனதில் பெருகுகின்றன. யாரையும் குற்றம்சாட்டாத மனம், எளிமையான தோற்றம், பிறருக்குத் தீங்கு நினையாத உள்ளம் ஆகியவை அவரது சிறப்பியல்புகள். இல்லாத நிலையிலிருந்து எங்களை உயர்த்தியவர் அவர். குடும்பத்தையே அரவணைத்து செல்பவர். எங்களுக்குத் தந்தையுமாகவும் இருந்துகொண்டிருக்கிற ஆயிரத்தில் ஒருவர்.- எம்.பிருந்தா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

SCROLL FOR NEXT