பெண்கள் எழுதிய அனைத்தும் ஆப்கானிஸ்தான் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தாலிபான் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. பெண்கள் எழுதிய 679 தலைப்புகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடங்கள் அனைத்தும் மனித உரிமைகள், பெண்ணுரிமைகள், அயல்நாட்டு அரசியல் கொள்கைகள், அரசமைப்புச் சட்டம், இஸ்லாமிய அரசியல் குழுக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை. இவை இஸ்லாமிய ஷரியத் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் இவற்றை நீக்குவதாகப் பாடத்திட்ட ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மத அறிஞர்களும் நிபுணர்களும் அடங்கிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்குப் பதிலாகச் சேர்க்கப்படும் பாடங்கள், இஸ்லாமியச் சட்டத்துக்கு எதிராக இருக்கக் கூடாது எனவும் ஆப்கானிஸ்தானின் உயர் கல்வித் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆப்கனில் தாலிபான் தலைமையிலான அரசு அமைந்தபோது 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது என எந்த இஸ்லாமியச் சட்டத்திலும் வலியுறுத்தப்படவில்லை. பெண் கல்வியாளர்களையும் எழுத்தாளர்களையும் கொண்ட மரபு இஸ்லாமியர் களுக்கு உண்டு. உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தை மொராக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவியர் ஒரு இஸ்லாமியப் பெண்தான். ஆனால், தாலிபான்கள் மதச் சட்டங்களைக் காரணம்காட்டிப் பெண்களை ஒடுக்குவதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
ஆப்கனில் மத அடிப்படைவாதக் கருத்துகளுக்கு எதிரான கொள்கை கொண்ட நூற்றுக்கணக்கான பேராசியர்களின் வேலை பறிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்பட்டுவந்த பாடங்களில் 18 பாடங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆறு பாடங்கள், பாலினச் சமத்துவம், வளர்ச்சி எனப் பெண்களை மையமாகக் கொண்டவை. மேலும் 201 பாடங்கள் பரிசீலனையில் உள்ளன. பெண்கள் அரசு, தனியார் பல்கலைக் கழகங்களில் பயில்வதற்குத் தாலிபன் அரசு தடை வித்திருப்பதை சௌதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எதிர்த்துள்ளன.
தேசியப் பெருமிதம்: ஆசியாவின் முதல் பெண் மின்சார ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்த மாதம் இறுதியில் பணி நிறைவு பெறவிருப்பதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1989இல் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தார். உதவி ரயில் ஓட்டுரநராகப் பணியைத் தொடங்கிய இவர், 36 ஆண்டுகளாகப் பணியாற்றிவகிறார். பெண்கள் கனரக வாகனங்களை இயக்குவதையே பெரும் சாதனையாகப் பார்த்த நாட்களில் மின்சார ரயிலின் ஓட்டுநராகப் பொறுப்பேற்று, பாலினப் பாகுபாட்டை உடைத்தெறிந்தார்.
மின் பொறியியலில் டிப்ளமோ பட்டத்தை முடித்துவிட்டுப் பணியில் சேர்ந்தார். ஆணாதிக்கம் நிறைந்த துறையில் படிப்படியாக சுரேகா முன்னேறினார். 1996இல் சரக்கு ரயில் ஒட்டுநராகவும் பிறகு விரைவு, அதிவிரைவு ரயில் ஓட்டுநராகவும் முன்னேறினார். ‘சுரேகா யாதவ், புதிய தடத்தைப் பதித்தவர். தடைகளைத் தகர்த்து, ஏராளமான பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். எந்தக் கனவும் அடைய முடியாதது அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது பயணம், இந்திய ரயில்வேயில் பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு சான்றாக என்றைக்கும் திகழும்’ என மத்திய ரயில்வே ‘எக்ஸ்’ தளத்தில் சுரேகாவைப் பாராட்டியுள்ளது.