பெண் இன்று

தன்னையே செதுக்கும் பெண் | பெண் எழுத்து

மலர்வதி

‘காட்டுக்குட்டி’ நாவல் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழலை, அவர்களை இச்சமூகம் எவ்வாறு உருவாக்குகிறது, எந்த அளவுக்குப் பாவிப் பட்டியலில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதை வைத்து 2017இல் நான் எழுதியது. இந்நாவல் வெளிவந்தபோது, ‘இது அவள் அனுபவம்’ என்கிற ஒற்றை வரியால் நான் தாக்கப்பட்டது வெகுவான அதிர்ச்சியைத் தந்தது. ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற பிரிவினைகளில் நிற்பதை நானும் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால், ஆண்களின் எழுத்துக்கு வைக்கப்படாத விமர்சனத்தைப் பெண் எழுத்துக்கு வைத்துவிடுகிறார்கள். ஆண்கள் மட்டும் மெஞ்ஞானத் தூண்டலில் எழுதுவது போன்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையிலிருந்து மட்டும் எழுதுவது போன்றும் ஒரு அடையாளப்படுத்தலைப் பொதுவாக வைத்துவிடுகிறார்கள்.

ஞானத்தின் கண்கள் பெண் படைப்பாளிகளுக்கு இருக்கிறது. சக உயிர்களைத் தன் உயிர் போலவும் சக மனிதர்களின் துன்பத்தை, போராட்டங்களை, வாழ்க்கையின் இடுக்கண்களைத் தன் வாழ்க்கை போலவும் பாவிக்கும் உயிர் நேயம் இருக்கிறது. ஆனால், பெண்கள் எழுதுவதை எல்லாம் ‘இது சொந்த அனுபவம்’ என்கிற ஒரு பின்னடைவுக்குள் போட்டுவிடுகிறார்கள். அதற்காகத் துயரப்பட்டு எழுத்தைச் சுருக்கிக்கொள்ள முடியாது அல்லவா! எனது ‘தூப்புக்காரி’ நாவல் வெளிவந்த காலக்கட்டத்தில் அதன் மீதான விமர்சனங்கள் அதிக அளவில் பேசப்பட்டபோது மெத்தப்படித்த ஒருவர் வீடு தேடி வந்தார். “உண்மையாகவே அந்த நாவலை நீங்கதான் எழுதினீங்களா இல்ல வேற யாராவது...” என்று இழுத்தவர் நான் எழுதிய கையெழுத்துப் பிரதியைப் பார்க்காமல் நகரவே இல்லை.

பெண் வடிக்கும் சித்திரம்: பெண்ணால் காத்திரமான படைப்புகளை எழுத முடியாது, அப்படி எழுதினால் அது அவள் அனுபவமாக மட்டுமே இருக்க முடியும் என்பது பொதுவான பார்வையாக இருக்கிறது. அப்படியே இருந்துவிட்டுப் போனாலும் சங்கடமெல்லாம் இல்லை. பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை, பெண்ணாகிய அவளின் புனிதப் பக்கங்களைப் பெண் படைப்பாளியாகிய நான்தானே எழுத முடியும்? இருட்டுக்குள் அவளைத் தேடுகிறவர்கள் பகலில் பாவியெனத் தூற்றும் அவள் பக்கங்களை இந்தச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும் அல்லவா!

“நீங்க எழுத்தாளரென்பதால் பாலியலை இயல்பாகக் கடந்துபோவீர்கள் அல்லவா? அதிலே தடைபட்டு நிற்காமல் வெகு சுலபமாகத் தாண்டிப்போவீர்கள் அல்லவா?” - இப்படியான கேள்விகளால் அணுகுகிறவர்களை உதறவேண்டியிருக்கிறது. சுதந்திரமாகக் கருத்துகளை முன்வைப்பதால், பெண்ணை வெளிப்படையாக எழுதுவதால் எவரையும் இலகுவாகக் கடந்துபோகக் கூடியவள், அதனால் ‘நானும்’ என்று முனைப்புக் காட்டுகிறவர்களைத் தட்டியெறிய வேண்டியிருக்கிறது.

பொதுவெளியில் இயங்குவது பெண்ணுக்கு மாபெரும் போராட்டமாகவே இருந்தாலும், அங்கே வரவேண்டிய அவசியம் இருக்கிறது. சமூக வெளிக்கு வந்தவர்கள் என்றால் அவர்கள் ‘அப்படித்தான்’ என்கிற அழுத்தமான புள்ளியைச் சிலர் வைத்துவிடுகிறார்கள். எங்களுக்கென்றும் ஒரு உலகம் இருக்கிறது. எங்களையும் மற்றவர்களைப் போலவே ஒரு பெற்றோர்தான் ஈன்றார்கள். ஒரு குடும்பம் வளர்த்தது. அறநெறியோடுதான் வளர்க்கப்பட்டோம். சமூகப் பீடத்தில் வந்துவிட்டதால் பொதுப் பொருள்போல் ஆளாளுக்கு விமர்சனங்கள் எழுதிப்போவது முள்கீரிட வலியை ஏற்படுத்தினாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லி, எழுத வேண்டியதை எழுதித்தானே ஆக வேண்டும்.

ஏனெனில், என்னை நான்தானே எழுத முடியும். வெளியில் இருந்து எழுதுகிறவர்களுக்கு நான் (பெண்) என்றால் வெறும் ஒரு கற்பனை... வெறும் ரசனை... வெறும் அழகியல். ஆனால், நான் என் எழுதுகோலை நிமிர்த்தும்போதுதான் என் உடலை, அதன் பேராற்றலை, காதலை, நான் என் சமூகத்திடம் எதைத் தேடுகிறேன் என்பதை எழுத முடியும். வெளியே இருந்து வருபவையெல்லாம் பெண் எழுத்து ஆகாது. பெண் தன்னை எழுதுவதே அவளுக்கான எழுத்து என்பதால் அவள் எழுதுவாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

SCROLL FOR NEXT