பெண் இன்று

மகப்பேறு விடுப்பு பெண்களின் அடிப்படை உரிமை | பெண்கள் 360

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருபவர் ரஞ்சிதா. மூன்றாம் முறையாகக் கருவுற்றிருக்கும் இவர், மகப்பேறு விடுப்புக்காக விண்ணப்பித்திருந்தார். முதல் இரண்டு குழந்தைகளுக்குத்தான் மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும் என்று கூறிய மாவட்ட கூடுதல் நீதிமன்றம், ரஞ்சிதாவின் கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஞ்சிதா மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேம்ந்த் சந்தன்கௌடர் அடங்கிய அமர்வு, ‘பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு என்பது பிரசவத்துக்கும் முன்னும் பின்னும் அவர்கள் அனுபவிக்கும் வலிக்கும் வேதனைக்கும் ஆதரவாக உடன்நிற்பது’ எனக் குறிப்பிட்டனர். முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்தான் மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும் என்பது எந்தவிதமான அடிப்படையும் அற்றது எனக் கூறி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் மூன்றாவது கர்ப்பத்தின்போது மகப்பேறு விடுப்பு கோரிய வழக்கில் முக்கியமான தீர்ப்பை 2025 மே 23 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. முதல் இரண்டு பிரசவங்களுக்கு வழங்கப்படும் சலுகை, மூன்றாவது பிரசவத்துக்கு மறுக்கப்படுவதை அது கண்டித்தது. மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் மகப்பேறு நலன் – இனப்பெருக்க உரிமை சார்ந்த அடிப்படையான அம்சம் என்பதை வலியுறுத்தியது. சர்வதேச மனித உரிமைகளான ஆரோக்கியம், அந்தரங்கம், பாகுபாடற்ற தன்மை, கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு என்கிற முன்மாதிரி தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் வழங்கியது.

திருநர் மாணவர்களுக்கான விடுதி: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் திருநர் சமூகத்தினருக்கான விடுதி தொடங்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னோடி முயற்சி இது.

விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த திருநர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வாசலை இதுபோன்ற செயல்பாடுகள் அதிகரிக்கும் எனக் கூறிய கேரள சமூக நீதித் துறை அமைச்சர் பிந்து, “திருநர் சமூகத்தினர் சமூகத்தில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டுவரும் வேளையில் சமூகத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. பெரும்பாலான குடும்பங்களே திருநர்களைக் கைவிட்டுவிடுகின்றனர். அவர்களது வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதில் சமூகத்தின் பங்கு முக்கியமானது. கேரளத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் திருநர் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் அது மேலும் அதிகரிக்கக்கூடும்” என்றார்.

முன்னுதாரண நீதிபதி: சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம், பாரம்பரியக் கட்டிடத்தில் செயல்பட்டுவருகிறது. முதல் தளத்தில் உள்ள நீதிமன்ற அறைக்கு மாற்றுத் திறனாளிகளால் வர இயலாத சூழலில் அவர்களுக்காகக் கீழ்த்தளத்துக்கு வந்து வழக்குகளை விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார் முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி. நீதிமன்ற வளாகக் கட்டமைப்புக் குறைபாடு, மாற்றுத்திறனாளிகள் நீதிபெறுவதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்காக அவர் இதைச் செய்துவருகிறார். நீதிபதியின் பரிவுணர்வும் மனித நேயமும் பாராட்டப்பட வேண்டிய அதேநேரம், அனைவரும் பயன்படுத்த உகந்த வகையில் நீதிமன்றக் கட்டமைப்பு மாற்றப் படுவதுதான் இதற்குத் தீர்வாக அமையும்.

நீதித்துறையில் பெண்களுக்கு இடமில்லையா? - உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர் நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. அண்மையில் நீதிபதிகள் அலோக் ஆராதே, விபுப்மனுபாய் பஞ்சோலி ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்தக் கருத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பதவி மூப்புப் பட்டியலில் 57ஆவது இடத்தில் இருக்கும் பஞ்சோலியின் நியமனம், மூத்த பெண் நீதிபதிகள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஒரே பெண் நீதிபதியாக பி.வி. நாகரத்னா பதவி வகித்துவரும் நிலையில், மூத்த பெண் நீதிபதிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கும் கடுமை யான கண்டனங்கள் எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT