பெண் இன்று

நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை தேவை!

Guest Author

திருப்பூர் ரிதன்யா, திருவள்ளூர் பொன் னேரியைச் சேர்ந்த லோகேஷ்வரி, திருவண்ணாமலை கீழ்பெண் ணாத்தூர் உமாதேவி எனப் பெண்களின் தொடர் தற்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளன. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த மூன்று பெண்களும் திருமணமானவர்கள்; இவர்களது மரணம் திருமணம் - அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பானது.
பெண்களின் தற்கொலை தொடர்பாக 2003 -2004இல் உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலகம் முழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்கு முயன்று மருத்துவனமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 340 பேரை அந்த ஆய்வுக்காகச் சந்தித்துப் பேசினேன். வெளிநாடுகளில் பெண்கள் திருமண உறவைப் பாதுகாப்பு அளிப்பதாகக் கருதும் நிலையில் இந்தியாவில் அப்படி அல்ல என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

பொதுவாகவே தற்கொலைகளை, சம்பந்தப்பட்ட நபரின் மனநலப் பிரச்சினையாக மட்டுமே சுருக்கிவிடும் போக்கும் மக்கள் மத்தியில் இருக்கிறது. மன அழுத்தம், மனச் சோர்வு உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், 2019இல் 18 – 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி 7 சதவீதத்தினர் மட்டுமே மனநலப் பிரச்சினைகளால் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.

சமூகத்தின் ஆதரவு: பிரெஞ்சு சமூகவியலாளரான எமில் டர்கிம், ‘தற்கொலை செய்துகொள்ளும் மக்களின் சதவீதத்தை வைத்துத்தான் ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அளவிடப்படுகிறது’ என்றார். அதனால், எந்தவொரு தற்கொலையும் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; நம் சமூக ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்ககூடிய பொதுப் பிரச்சினை. வரதட்சிணை மரணங்கள் நிகழ இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, நம் சமூகக் கட்டமைப்பில் இருக்கிற சிக்கல். நம் தமிழ்ச் சமூகத்தில் திருமணமான ஒரு பெண், மாமியார் வீட்டுக்குச் சென்று வாழ வேண்டும், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பிறந்த வீட்டில் வந்து தங்கிவிடக் கூடாது என்கிற சமூக நிர்பந்தம் அனைவர் மீதும் சுமத்தப்படுகிறது. திருமணமான ஒரு பெண், பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டால் இந்தச் சமூகம் என்ன நினைக்கும் என்பதற்குப் பயந்தே பெரும்பாலான குடும்பங்கள் ‘பேச்சுவார்த்தை’ நடத்துகின்றன. பெண்களைப் பொறுத்துப் போகச் சொல்கின்றன. இதில் கிராமம் - நகரம், படித்தவர் - படிக்காதவர் என்கிற வேறுபாடெல்லாம் இல்லை.

எல்லாப் பெண்களுக்குமே திருமண வாழ்க்கை சார்ந்த கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். ஆனால், எதார்த்தத்தில் அது நிகழாதபோது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர். அந்த நேரத்தில்தான் சமூகத்தின் ஆதரவு பெண்களுக்குத் தேவைப்படுகிறது. குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், சமூகம் என யாராவது ஒருவராவது அந்த ஆதரவை அளிக்கத் தவறும்போதுதான் பெண்கள் வேறொரு முடிவை நோக்கி வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகின்றனர். அதனால், நம்மைச் சுற்றி நிகழும் தற்கொலைக்களுக்கு ஏதோவொரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம். உயிருக்கு மிஞ்சியதுதான் எல்லாமே; உயிரோடு இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற நம்பிக் கையைச் சமூகம் பெண்களுக்கு அளிக்க வேண்டும்.

வரதட்சிணை மரணங்களுக்கான இரண்டாவது காரணம், சமூகப் பொருளாதார நிலை. நம் நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக்கொண்டிருந்தாலும் அந்த வளர்ச்சி சமமானதாக இல்லை. இந்தச் சமமற்ற வளர்ச்சி, சமூகத்தில் எதிரொலிக்கும். அனைவருக்கும் வேலை, பணம் இல்லாத நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோரின் நெருக்கடிகள் அதிகரித்திருக்கின்றன. இப்படியொரு சூழலில் கடன் வாங்கித் திருமணங்களை நடத்த வேண்டிய நிலையில்தான் பெரும்பாலான குடும்பங்கள் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நடத்தப்படும் திருமணங்களும் அதைத் தொடரும் வளைகாப்பு, பிள்ளைப்பேறு போன்ற சடங்குகளும் பணம் - நகைகள் மீது கட்டி எழுப்பப்படும்போது பெண்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். இந்தப் பொருளாதாரச் சிக்கல்தான் திருமணம் தொடர்பான மரணங்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.

நல்லன நான்கு: அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், மனிதர்களுக்கு நான்கு விதமான சுதந்திரம் வேண்டும் என்பார். பெண்களுக்கும் அது பொருந்தும். ஒன்று, பேச்சு சுதந்திரம். புகுந்த வீட்டில் கணவர், மாமியாரிடமோ தன் பிறந்த வீட்டிலோ சமூகத்திடமோ எதையும் தடையற்றுப் பேசும் சுதந்திரம் பெண்ணுக்கு வேண்டும். இரண்டாவது, தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றவோ கடவுளை வழிபடவோ சுதந்திரம். பொதுவெளியில் வெளிப்படையாக வழிபட முடியாதபோதோ, தன் மத அடையாளமே சுமையாகிப்போகும்போதோ ஒரு பெண் நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார். மூன்றாவது, தேவைகளில் இருந்து விடுதலை. உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் வழங்கப்படாத நிலை ஒரு பெண்ணைப் பெரிதாகப் பாதிக்கும். நான்காவது, அச்சத்தில் இருந்து விடுதலை. பாலினப் பாகுபாடு, குடும்ப வன்முறை, பணியிடப் பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும் பெண்கள் விடுதலை பெற வேண்டும். இந்த நான்குவிதமான விடுதலையும் பெண்ணுக்குக் கிடைக்கிறபோது வாழ்க்கை மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும்; தற்கொலை எண்ணம் தவிர்க்கப்படும்.

சமூக மாற்றம் தேவை: இன்றைய சமூக ஊடக யுகத்தில் ஒருவரை இன்னொருவர் நேரில் பார்ப்பதும், கண் பார்த்து உரையாடுவதும் குறைந்துவிட்டது. செல்போனில் எமோடிகான்களைப் பகிர்ந்து கொள்வதைவிட, நேரில் பார்த்து நம் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது எதிரில் இருக்கிறவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஒருவரை ஆற்றுப்படுத்துவது அந்த நேரத்துக்குப் பிரச்சினையைத் தள்ளிப்போடுமே தவிர, அதுவே சிக்கலைத் தீர்த்துவிடாது.

நோயைத் தீர்ப்பதோடு நோய் வருவதற்கான காரணிகளையும் கண்டறிந்து தீர்க்க வேண்டும். அதுபோலத்தான் பெண்களுக்கு மனச்சோர்வையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் சமூகக் காரணிகளைச் சீராக்க வேண்டும். பெண்களுக்குப் பள்ளிக்கூடங்களில் இருந்தே கல்வியோடு சட்ட விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அவசியமும் அரசின் பொறுப்பும். பெண்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான துணிவோடு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்டரீதியான வழிமுறைகளையும் கல்வி வழங்க வேண்டும். தனிமனிதர்களோடு சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும். அழகு, நிறம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் மீது திணிக்கப்படும் சமூக நிர்பந்தங்களையும் கற்பிதங்களையும் களைவதற்கான முன்னெடுப்புகள் அவசியம். இவைதான் பெண்களின் வளமான எதிர் காலத்தை உறுதிப்படுத்தும். -

சுபைதா சுல்தானா, மனநல மருத்துவர்,
சிபிடி தெரபிஸ்ட் (CBT - Cognitive Behaviour Therapy - எண்ணம் மற்றும் செயல்மாற்றும் சிகிச்சை).

SCROLL FOR NEXT