பெண் இன்று

அன்பை நிரூபிக்கும் வழிகள் | உரையாடும் மழைத்துளி 42

தமயந்தி

சென்ற வாரம் செய்தித் தாள்களைத் திருப்பிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஹரியாணாவில் உள்ள குருகிராமில் இளம்பெண் ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் தன் கணவனிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். இருவரும் மொட்டைமாடியில் இருக்கும்போது, “நான் இங்கிருந்து வழுக்கி விழுந்துவிடுகிறேன். நீ என்னைக் காப்பாற்றுகிறாயா இல்லையா என்று நான் பார்க்கப் போகிறேன்” என்றார். அன்பின் பொருட்டு அந்தப் பெண் இப்படியொரு திட்டம் வகுத்ததுதான் மிகவும் துயரமான விஷயம். ஏனெனில், அவருடைய கணவரால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற இயலவில்லை.

கணவன் தன்னைக் காப்பாற்றி னால்தான் அவருக்குத் தன் மீது அன்பு இருப்பதாக அந்தப் பெண்ணிடம் யார் சொன்னார்கள்? எந்த மாதிரியான சமூகச் சூழ்நிலை, அன்பிற்கான அளவுகோலாகத் தன்னைக் காப்பாற்றும் கணவனின் வடிவை அவரை எதிர்பார்க்க வைத்தது என்பது எனக்குப் புரியவில்லை. இங்கு காதல் அல்லது திருமணம் என்பதே அளவீட்டு அடிப்படையில் நிகழ்ந்துகொண்டி ருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் இன்றைய தேதியில் நம் சமூகத்தில் காதலின் நிலை.

கதாநாயகர்கள்: எந்த மனநிலையில் அந்தப் பெண் தன் கணவரிடம் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருக்கும் முடியும்? அவர் ஒருவேளை தன்னுடைய காதலன் ‘மௌனராகம்’ படத்தின் கதாநாயகன் கார்த்திக் போல இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ. போய்க்கொண்டிருக்கும் ஒரு பேருந்தை நிறுத்தி, அதன் முன்னால் தன் இருசக்கர வாகனத்தைத் தடையாகப் போட்டுவிட்டு, பேருந்தின் உள்ளே ஏறி அந்தப் பெண்ணை ஆச்சரியப்படுத்தும் காதல் எல்லாம் வாழ்க்கையில் சாத்தியமே இல்லை.

அதனாலேயே அப்படியான ஒரு காதலை திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்குத் தன்னிச்சையான மன எழுச்சி ஏற்படுகிறது. அந்தத் தன்னிச்சையான மன எழுச்சி திரையரங்கை விட்டு வெளியே வரும்போது கலைந்தும் போகிறது. காரணம் அங்கு ஒரு பெண்ணா, ஆணோ யதார்த்த சூழ்நிலை - பொருளாதாரச் சூழ்நிலையின் கூறுகளை முன்வைத்தே ஒரு உறவைப் பேணி வளர்க்க முடிகிறது. அதன் பொருட்டு 40 வயதுக்கு மேல் ஆகும்போது நமக்குத் திருமண வாழ்க்கையில் தேவை ‘மௌன ராகம்’ கார்த்திக். பெரும்பாலான பெண்களுக்கு நல்ல துணைவன் என்றால் அது மோகனைப் போன்றவர்தான் என்பதும் புரிபடுகிறது.

மணமுறிவும் இயல்பே: ஒருபக்கம் ஆணவக்கொலை, மறுபக்கம் அதிகரித்துவரும் விவாகரத்துகள் என்று காதலின் தடுமாற்றம் இந்தக் காலக்கட்டத்தில் நம்மிடையே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணவக் கொலைகள் மிகவும் தவறானவை; அவை இந்தச் சமூகத்தில் ஒருபோதும் நிகழக் கூடாது என்பதைத் தீர்மானமாக முன்வைக்கும் அதேநேரத்தில் விவா கரத்துகளை நாம் எதார்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியமான விஷயம். ஏனெனில், கருத்துச் சிக்கல்கள் அல்லது உறவுச் சிக்கல்கள் இருக்கும் இருவர் ஒரே கூரையின்கீழ் வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம்.

அதற்காக, அவர்கள் இருவரின் மனமும் குழந்தைகளைக் காரணம்காட்டி உறவின் கீறலைச் செப்பனிடுவது என்பது சில நேரத்தில் சரிவராது. சுற்றியுள்ளவர்கள் அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்தச் சூழலில் விவாகரத்து செய்து கொண்டவர்களுக்கு மனரீதியான ஆறுதலாகவும் அல்லது அந்த விவாகரத்தில் உடன்பாடு இல்லை என்றாலும் அந்த முரண்பாட்டை நட்புரீதியாகச் சொல்லி அவர்களுடன் பயணிப்பதே புத்திசாலித்தனமான செயல். ஆனால், சமூகத்தில் இன்று அப்படி விவாகரத்து செய்தவர்களை இழிவாகப் பேசக்கூடிய நிலைமைதான் இன்றும் இருக்கிறது.

புரிதலே வாழ்க்கை: உலகத்தில் இருக்கக்கூடிய மிகச் சிக்கலான உறவு என்று மறுபடி மறுபடி நிரூபித்துக் கொண்டிருப்பது கணவன் - மனைவிக்கான உறவு மட்டுமே. எப்போதுமே சந்தித்தே இருக்காத இரண்டு ஆத்மாக்கள் திருமணம் என்கிற பந்தத்தில் சேர்ந்த பிறகு இங்கு நடப்பதெல்லாம் பெரும் நாடகமே. யார் யாரை வீழ்த்த, யார் யாரை அடக்க என்று ஒரு மகா யுத்தம் மனதளவில் கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் இருவரின் குடும்பங்களும் பெரும்பாலான அளவுக்குத் தங்களுடைய மகனையோ மகளையோ தங்களிடம் வைத்துக்கொள்ளும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்படிச் செய்யும்போது அடுத்த நபர் மீதான புலம்பல்களும் குறைபாடுகளும் குற்றங்களும் அதிகப்படியாகச் சொல்லப்படுகின்றன. இது அந்தக் கணவன் - மனைவி உறவை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று அவர்கள் ஒரு கணம்கூடச் சிந்திப்பதே இல்லை.

இதில் தெளிவு உள்ள கணவன் - மனைவி மட்டுமே தாம்பத்திய வாழ்க்கையை நிம்மதியாக வாழ்கிறார்கள். ‘யார் என்ன சொன்னால் என்ன.. நீயும் நானும் சேர்ந்து பயணிப்பதே இந்த வாழ்க்கை. நீ என் வாழ்க்கைத்துணை. உனது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நான் பங்கெடுப்பது போல என்னுடைய சந்தோஷத்திலும் துக்கத்திலும் நீ பங்கு பெறுவதே நம் வாழ்வின் அதிசிறந்த விஷயம்’ எனக் கருதி ஒரு நீண்டகாலத் திருமண வாழ்வில் அவர்கள் தொடர்கிறார்கள். ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த உறவு முறையில் கீறல் விழும்போது, ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் அன்பில் சந்தேகமும் குற்றச்சாட்டுகளும் எட்டிப் பார்க்கின்றன.

‘என்னைக் காப்பாற்றுவதன் மூலம் உன் அன்பை நிரூபி’ என்று சொல்லி மேலிருந்து கீழே குதித்துக் கணவனால் காப்பாற்ற முடியாத நிலையில் இறந்துபோன அந்தப் பெண், ‘நான் சப்பாத்தி செய்கிறேன்; நீ குருமா செய். நாம் இருவரும் மேலே சென்று மொட்டை மாடியில் சாப்பிட்டுவிட்டு வரலாம்’ என்று சொல்லி அந்தப் பொழுதை இனிமையாக்கி இருக்கலாம். வாழ்க்கை என்பது மிகவும் சுலபமான ஒரு விளையாட்டு. அதைப் புரிந்துகொள்வதே நமது முன் இருக்கக்கூடிய சவால்.

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT