பெண் இன்று

பர்வதமலையாக உயர்ந்து நிற்கும் பாட்டி! | ஆயிரத்தில் ஒருவர்

Guest Author

பள்ளிப் பருவத்தில், ‘என்னடீ, உனக்குச் சுத்த கர்னாடகமா பேரு வச்சிருக்காங்க’ என்று தோழிகள் கேலி செய்வதுண்டு. அதில் எனக்கு வருத்தம். அப்பாவிடம் விசாரித்தபோது தன்னுடைய பாட்டி பர்வதத்தம்மாள் பெயரைத்தான் எனக்கு வைத்திருப்பதாகச் சொன்னார். ‘யார் அந்தப் பாட்டி? அவங்க பேரை எனக்கு எதுக்கு வைக்கணும்?’ என்று சற்று கோபமாகவே கேட்டபோதுதான் அவரைப் பற்றிச் சொன்னார்.

என் அப்பாவின் அம்மாவழிப் பாட்டி பர்வதத்தம்மாளுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்த மூன்று வருடத்திற்குள் கணவர் இறந்துவிட்டார். சொந்த ஊருக்குக் கைக்குழந்தையுடன் திரும்பினார். பாட்டிக்கு மூன்று அண்ணன்கள். வசதியும் செல்வாக்குமாக வாழ்ந்தவர்கள். கைம்பெண்ணாக வீட்டுக்கு வந்த தங்கையைத் தங்களுடன் இருக்குமாறு சொல்கிறார்கள். மறுத்துவிட்டுத் தனக்கு ஒரு வீடு தருமாறு கேட்டு, அதில் தன் மகளுடன் வசித்தார்.

கணவருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட்டு அதில் கிடைக்கும் நெல்லை அரிசியாக்கி விற்பனை செய்தார். பசுக்களை வளர்த்து விற்று, அந்த வருமானத்தில் பெண்ணை வளர்த்துத் திருமணமும் நடத்திவைத்தார். அண்ணன்கள் உதவ முன்வந்த போது உறுதியாக மறுத்துவிட்டார்.

பெண்ணை கட்டிக் கொடுத்த பிறகும்கூடத் தீபாவளி என்றால் 16 வகையான பலகாரங்கள் செய்துகொண்டு வந்து கொடுப்பார். செல்லமாக வளர்ந்த ஒரே பெண், அடுப்படியில் கஷ்டப் படக் கூடாதே என்று அவ்வளவு பலகாரங் களையும் செய்வார். பேரன், பேத்தி அனைவருக்கும் புத்தாடை வாங்கி வருவார். பொங்கல் என்றால் மா, பலா, வாழையென முக்கனியோடு பொங்கல் சீர் தடபுடலாக வந்து சேரும்.

காலம் வேகமாகக் கடக்க, பாட்டி முதுமையிலும் நோயிலும் வாடினார். ஊரில் இருப்பவர்கள் மகள் வீட்டில் போய் இரு என்று சொல்ல, ஒரே மகள் மறுத்துவிட்டார். அதைவிடக் கொடுமை, அம்மா இறந்துவிட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை ஊரும் உறவும் எடுத்துக்கொள்ளுமோ என்று நினைத்த மகள், அவற்றை அள்ளிச் சென்றுவிட்டார். அப்போதும் பாட்டி பர்வதத்தம்மாள் மகளை ஒரு வார்த்தைகூடத் திட்டாமல், சபிக்காமல் அனுமதித்தார். எந்த ஆதரவும் இல்லாமல் தனி மனுஷியாக வாழ்வோடு போராடி வென்றார்.
‘படிப்பறிவோ, வேலையோ, விழிப்புணர்வோ இல்லாத அந்தக் காலத்திலேயே தன்னந்தனியாக வாழ்ந்து காட்டிய பர்வதத்தம்மாள் உனக்கொரு முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென்றுதான் அவர் பெயரை சூட்டியிருக்கிறேன்’ என்று அப்பா சொல்ல, எனக்குச் சிலிர்த்தது.

கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் எனக்கு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் நினைக்கும்போது திகைப்பும் திகிலும் தோன்றும். பாட்டியை நினைத்தால் தன்னம்பிக்கை தானாகப் பிறக்கும். பர்வதம் என்கிற பெயருக்காக இன்று பெருமைப்படுகிறேன். - அ.யாழினி பர்வதம், சென்னை.

SCROLL FOR NEXT