பெண் இன்று

மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த நெல்லை வாசகியர்! | நெல்லை மகளிர் திருவிழா

அ.அருள்தாசன்

இந்து தமிழ் திசை நாளிதழின் ‘பெண் இன்று’ சிறப்புப் பக்கம் சார்பில் 13 ஜூலை அன்று திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வாசகியரின் உற்சாகம் கரைபுரண்டது.

திருமணத்துக்குப் பிறகும் சாதனை: விழாவில் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா பேசும்போது, “பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பழமை வாய்ந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 1957ஆம் ஆண்டிலிருந்து பெண் தீயணைப்பு அலுவலர் பணியாற்றவில்லை. தற்போது முதல் முறையாக எனது பெயர் மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நம்மை நம்பி எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் அதைத் திறம்படச் செய்ய முடியும் என்பதைப் பெண்கள் நிரூபிக்க வேண்டும். நமக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும். நான் திருமணம் முடிந்து 5 வயதில் மகன் இருக்கும்போதுதான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்து வெற்றிபெற்றேன். திருமணம் ஆகிவிட்டால் படிக்க முடியாது என்பது உண்மையல்ல. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்” என்று கூறினார்.

ஆரோக்கியம் முக்கியம்: திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தி. கோமளவல்லி பேசும்போது, “இந்தச் சமூகத்தில் நமக்கு அதிகக் கடமைகள் இருக்கின்றன. மாணவிகள் நிறைய படித்துப் பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டும். கல்வி நமது உரிமை. அதைப் பெற்றோர்கூடத் தடுக்க முடியாது. பாலியல் தொல்லைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்துப் பதின்மவயதுப் பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். கல்வியும் சட்டமும் பெண்களுக்குக் கவசம். சட்ட திட்டங்களைக் குறித்துப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் நேர்மையாக இருக்க வேண்டும். தவறுகளைத் தைரியமாக எடுத்துக்கூற வேண்டும். இவற்றோடு ஆரோக்கியம் மிகவும் முக்கியம்” என்று கூறியதோடு உணவே மருந்தாகும் வழிகளையும் விளக்கினார்.

பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், ஃபேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு வாசகியருக்கு பம்பர் பரிசும், ஒரு வாசகிக்கு மாடித்தோட்டம் அமைக்கப் பயன்படும் பொருட்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார்.

திறமைக்கு விருது: தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெ. ரெனால்ட், திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வப் பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று தற்போது கல்வித்துறையில் பணியாற்றும் டி. ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் உஜாலாலிக்விட் டிடர்ஜென்ட் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது வழங்கப்பட்டது.

இளம் நடனத்தாரகை: கடலூர் செம்மண்டலம் கிராமத்தை சேர்ந்த சங்கர் - பார்வதி தம்பதியின் மகள் மோகன சங்கரி (12) பரதம், கரகம், சிலம்பம் எனப் பல்வேறு நடனங்களை அரங்கேற்றி வாசகியரை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு ‘இளம் நடனத்தாரகை’ விருது வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவியர், செல்போன் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மௌன நாடகத்தை நிகழ்த்தினர்.

உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. பிரஸ்டா விமன்ஸ் வியர், லலிதா ஜூவல்லரி, ஒபே தி ரூல்ஸ் யூடியூப் சேனல், சத்யா ஏஜென்சீஸ், செல்வராணி பட்டு, ஜவுளி ரெடிமேட்ஸ், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், டோம்ஸ் ஸ்டேஷனரி, ராஜேஸ் எலெக்ட்ரிக்கல்ஸ், பிளாசம் அக்ரிடெக், மலாஸ் பழப்பொருட்கள், வென்யூ பார்ட்னர் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, டீ பார்ட்னர் வாஹ் பக்ரி, டிவி பார்ட்னர் மயூரி டிவி உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என வாசகியர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT