பாரம்பரிய உணவு வகைகள், பானங்கள் என்று பட்டையைக் கிளப்புகிறார் ரெனால்ட். பாளையங்கோட்டை மேடை காவல் நிலையப் பகுதியில் ‘நெல்லை கைப்பக்குவம்’ என்கிற பெயரில் சிற்றுண்டிக் கடை நடத்திவருகிறார் ரெனால்ட். நவதானிய – பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் வகையில் இவர் தயாரிக்கும் உணவுப் பொருட்களுக்கு ரசிகர்கள் அதிகம். இவரது கைப்பக்குவத்தைப் பாராட்டாதவர்கள் குறைவு.
மக்களிடையே ஆரோக்கிய உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் வேளையில், அதையே தன் வெற்றிக்கான அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டார் ரெனாலாட். இவரது சிற்றுண்டிக் கடையில் நாள் தவறாது பிற்பகல் தொடங்கி இரவு வரையிலும் விதம் விதமான உணவு வகைகள் சுடச்சுடத் தயாராகிவிடும். குதிரைவாலி வெஜ் கட்லெட், சிறுதானிய பிரவுனி, சிறுதானிய லட்டு, சிறுதானிய முறுக்கு, எண் மூலிகை காபி, கம்புப் பால், தினைப் பாயசம், முருங்கை சூப், தட்டாம்பயறு வடை, சீனிக்கிழங்கு பணியாரம், மாப்பிள்ளை சம்பா தோசை எனப் பலகாரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவையெல்லாம் 10 ரூபாயில் தொடங்கி 40 ரூபாய் வரை சாமானியரும் வாங்கக்கூடிய விலையில்தான் கிடைக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த ரெனால்ட், 2017ஆம் ஆண்டில் இமயம் என்கிற மகளிர் குழுவைத் தொடங்கினார். அருந்தானியங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதை லாபகரமான தொழிலாக மாற்றியிருக்கிறார். 2018 முதல் பாரம்பரிய உணவுப் பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் உற்பத்தியைத் தொடங்கினார். தொடக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்களை எல்லாம் புறந்தள்ளி, முழுவீச்சில் முன்னேறினார். தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சிகளில் தனது கைப்பக்குவத்தில் தயாரான பொருட்களைச் சந்தைப்படுத்திவருகிறார்.
உடலுக்குக் கேடுவிளைவிக்காத பாரம்பரிய உணவுப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதுடன், இணையம் வாயிலாக அமேசான், ஃபிளிப்கார்ட், மீஷோ போன்ற தளங்களின் வழியாகவும் விற்பனை செய்துவருகிறார். ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற செயலிகள் வழியாகவும் உணவு விநியோகித்துவருகிறார். இவரோடு சில பெண்கள் கைகோத்துப் பாரம்பரிய உணவுப் படையலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தியிருப்பதுடன், சமூகத்திலும் நல்ல தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
சிறுதானியச் சிற்றுண்டி உணவகம் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்கிற கேள்விக்குத் தன் அனுபவத்தையே பதிலாகச் சொல்கிறார் ரெனால்ட். “பெண்களுக்கே உரித்தான பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றேன். உணவுப் பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதுதான் பாரம்பரிய உணவுப் பொருட்கள் பக்கம் என்னை இழுத்துச் சென்றது. மரபு உணவுக்கு மாறிய பின் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கிய அனுபவத்தை என்னோடு இருப்பவர்களுக்கும் உணர்த்தும் நோக்கத்தில் மனநிறைவுடன் தொடங்கியதுதான் இந்தச் சிறுதானிய சிற்றுண்டிக் கடை” என்றார்.
தனது அனுபவங்களைப் பல்வேறு மேடைகளில் எடுத்துக்கூறி, பெண்களைத் தொழில்முனைவோராக்கும் பணியையும் செய்துவருகிறார். திருநெல்வேலி மாவட்ட மகளிர் திட்டம் சார்பிலும் பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் விருதுகளைப் பெற்றுள்ளார். 300 பேர் கொண்ட ‘வாட்ஸ் அப்’ குழுவை உருவாக்கி, தினமும் உணவுப் பண்டங்களின் பட்டியலை அனுப்பி விற்பனை வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். சில பொருட்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருமானம் ஈட்டிவருகிறார்.