பெண் இன்று

மகப்பேறு என்பது வளர்ச்சிக்குத் தடையல்ல | என் பாதையில் 

Guest Author

இன்று நாம் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்றவை குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதே வேளையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண், தன் குடும்ப வாழ்க்கையையும் அலுவலகப் பொறுப்புகளையும் சமநிலையில் காக்கப் போராடிக்கொண்டிருப்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

பல ஆண்டுகளாகக் கடமை உணர்வோடு வேலை செய்த ஒரு பெண், மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பியவுடன் அலுவலகத்தில் எதிர்நோக்கும் சூழ்நிலை எப்படி இருக்கிறது? அந்த ஆண்டில் மூன்று மாதங்களே வேலைக்கு வந்திருக்கிறார் என்பதற்காகச் செயல்திறன் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்படுவது எவ்வளவு அநியாயம். மூன்று மாதங்களில் ஏன் நீங்கள் திறமையாகச் செயல்படவில்லை என்று மேலதிகாரிகள் கேட்கிறார்கள்.

இது எளிதான கேள்வி அல்ல; நியாயமானதும் அல்ல. காரணம், ஒருவரின் வாழ்க்கை என்பது திட்டவட்டமான கணிதச் சூத்திரமல்ல. பச்சிளங் குழந்தையைப் பார்த்துக்கொள்வதோடு, 60 கி.மீ. தொலைவில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று வருவது எளிதானதா? இது போன்ற மன அழுத்தங்களால் எத்தனையோ பெண்கள் தங்களைத் திறமையானவர்களாக நிரூபிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து வேதனையோடு விலகுவதையும் பார்க்கிறோம்.

அந்தப் பெண் தன்னுடைய நிலையை விளக்கிய பிறகும் அதுதான் நிறுவனத்தின் கொள்கை முடிவு என்று சொல்லிப் பணியில் இருந்து விலக அழுத்தம் தரப்படுவது மிகவும் வேதனையானது. நிர்வாகக் கோணத்தில் பார்த்தால் இது திட்டமிட்ட நடவடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், சமூகநிலை, மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் இது சரிதானா என்கிற கேள்வியும் எழுகிறது. அதேநேரம், பெண்கள் வளரக் கூடாது என்கிற பிற்போக்கு மனப்பான்மை இன்னும்கூடச் சில இடங்களில் இருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

பணிச் சூழல் பெண்களுக்கு ஏற்றபடி எப்போது மாறுமோ? பெண்ணின் உடலியல் மாற்றங்கள் சார்ந்த புரிதலைக் கொண்ட, பணியிடங்களில் பெண்களையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக நாம் எப்பொழுது விழிப்படையப் போகிறோம்? அரசுப் பணியோ தனியார் வேலையோ எதுவாக இருந்தாலும் வேலை குறித்த அச்சமில்லாமல் பெண்கள் பணிபுரியும் வகையில் உரிய கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். நிறுவனங்கள் மனிதாபிமானத்தோடும் நியாயத்தோடும் செயல்படுவதற்கு அரசு வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு திறமையான பெண்ணும் சுவர் ஓரத்தில் அமைதியாக வைக்கப்படும் அலங்காரப் பொருளாகவே மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. - கலா மோகன், திண்டுக்கல்.

SCROLL FOR NEXT