சமீப காலமாக இணையத்திலும் தற்கொலை வழக்குகளிலும் மிக அதிகமாக பேசப்படும் விஷயம் திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் வன்முறை. திருமணம் என்பதே ஒரு பெண்ணோடு உறவு கொள்வதற்கான ஒரு அனுமதிச் சீட்டாகப் பார்க்கப்படும் சூழலில், ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அல்லது பெண்ணின் உடலுக்கு அதிக வேதனையைத் தரும் செயல்களில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான விஷயமாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் உடல் எங்கும் காயங்கள் இருந்ததாகவும் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரது கணவர் அவரிடம் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது போன்றவை அதீதமாகப் பேசப்படும் விஷயமாக இதுவரை இருந்ததில்லை. திருமணம் செய்துகொண்டால் கணவன் ஒரு பெண்ணின் உடலை எப்படியானாலும் ஆட்கொள்ளலாம் என்கிற ஆணாதிக்கச் சிந்தனைதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
உறவினரின் ‘கேள்வி’- யார் என்றே தெரியாத ஒரு நபருடன் திருமணமான முதல் நாள் அன்றே ஒரே அறைக்குள் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மிகுந்த மனச்சிக்கலை ஏற்படுத்தக்கூடியது. அதுவும் அந்த முதலிரவு சிறப்பானதாக நடந்ததா என்று அறிந்துகொள்ள ஒரு கோஷ்டி உறவினர் என்கிற பெயரில் வெளியே நின்றபடி இருக்கும். காலையில் கதவைத் திறந்ததும் அந்தப் பெண்ணிடம் ஆயிரமாயிரம் விதமாகப் புனையப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். அவை எல்லாவற்றையும் அவள் வெட்கத்தோடு எதிர்கொள்வதுதான் ஆகச் சிறந்த துயரம்.
ஆனால், அப்படிக் கேட்பது சற்றும் நாகரிகமற்ற செயலென்று பலருக்கும் தெரியாது. அதே போலப் பெண்ணின் உடல் குறித்த உரிமை அவளிடம் மட்டுமே இருக்கிறது என்பது அந்தக் கணவனுக்கும் தெரியாது. நினைத்த பொழுதெல்லாம் ஓர் ஆணின் காம வேட்கைக்கு ஆளாக வேண்டியிருப்பதே, பெரும்பாலும் பல பெண்களின் துயரம் நிறைந்த வாழ்க்கை.
யார் மீது குற்றம்? - சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணின் தந்தை ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தபோது, தன் மகள் கால்களைச் சரியாக வைத்து நடக்க முடியாத விதத்தில் நடந்து வந்ததாகச் சொன்னார். அந்தப் பெண் உடல்ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டதாக ஒரு யூடியூப் சேனல் தெரிவிக்கிறது. எப்போது தன்னிடம் சொல்ல முடியாத ஒரு வதை தன் மகளுக்கு நிகழ்ந்திருக்கிறது என ஒரு தந்தைக்குத் தோன்றியதோ, அக்கணமே அவளைத் தன்னுடன் வைத்துக்கொண்டிருக்க வேண்டாமா? அவளுக்கு என்ன பிரச்சினை என்று அவரால் கேட்க முடியாவிட்டால்கூட, வேறு யாரையாவது வைத்துப் பேசி இருக்க வேண்டாமா? இப்படித் தங்கள் குழந்தைகளைக் கைவிடுகிற குடும்பங்கள் குற்றவாளி இல்லையா?
வியக்க வைத்த தம்பதி: உடல் சார்ந்த தாம்பத்திய உறவு ஒன்றே திருமண வாழ்க்கைக்கு அல்லது இணையர்களாக இருவர் வாழ்வதற்கு மிக முக்கியமான அடித்தளம் என்கிற பழமையான நம்பிக்கை இங்கு தீவிரமாக இருக்கிறது. நான் அறிந்த ஒரு தம்பதி, உடல் ரீதியாக பெண்ணுக்குப் பெரும் பிரச்சினைகள் இருந்த காரணத்தால், தங்களுக்குள் உடல் ரீதியான உறவு நிகழவில்லை என்று ஒரு முறை என்னிடம் மனம் திறந்து சொன்னார்கள். அவர்களை வெளியே பார்க்கும்போது மனமொத்த தம்பதியாகத் தென்படுவார்கள். மனம் சாராத - உடலை மட்டும் முதன்மையாக வைத்துக் கணிக்கப்படும் திருமண உறவுகள் மத்தியில், இந்தத் தம்பதி எனக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தவே செய்தார்கள்.
உடலை முதன்மையாகக் கருதாத உறவுகள் குறித்து நான் எழுதும் பொழுது எனக்கு மிக அதிகமான எதிர்வினைகள் வருகின்றன. அதேபோல் பெண்களை மனுஷியாக நடத்த வேண்டும் என்று எழுதும்பொழுது, ‘கணவனுக்கு அடங்கிப்போகிறவர்தானே நல்ல பெண்’ என்று தங்களுடைய எதிர்வாதத்தை முன்வைப்பதன் மூலம் பெண்ணுக்குத் தனியாக மனதே கிடையாது என்று அவர்கள் தரப்பு நியாயத்தை எனக்குப் புரியவைக்க முயற்சி செய்வார்கள். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் தாங்கள் உடலாகப் பார்க்கப்படுவது பெரிய குற்றம் என்கிற புரிதல் இல்லாமல் இருக்கிறது. இந்தப் புரிதல் ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போதுதான் அவள் தன்னுடைய உடலை ஓர் ஆணோ அல்லது வேறு யாரோ அவளுடைய அனுமதிக்குப் பிறகுதான் தொட வேண்டும் என்கிற எண்ணமே உருவாகும். அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தினால் அவளது உடல் உயிரற்ற ஒரு பொம்மை என்கிற புரிதலுடன் அவள் கணவனால் அணுகப்பட்டால், அதற்கு என்ன மதிப்பு?
கசப்பான உண்மைகள்: அதிகமாகப் பேசப்படாத திருமணம் சார்ந்த பாலியல் வன்முறைகளுக்கு ஆளானவள் என்கிற முறையில், நெடும் தயக்கத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்து இதை நான் பகிர்கிறேன். அதிலிருந்து மீண்டு வந்து நமக்கான ஒரு வாழ்வை உருவாக்கிக்கொள்ளும்வரை, இந்தச் சமூகம் நமக்கு ஏற்படுத்தும் அழுத்தங்கள் அளவில்லாதவை. அந்த அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்வது என்பது ஒரு முறை மரணித்துப் பிறகு உயிர்த்தெழுவதற்குச் சமம். ஆனால், தாங்கள் செய்வது என்னவென்று அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என்கிற விவிலியக் கூற்றின்படி சமூகம், தான் என்னவிதமான அழுத்தங்களை ஒரு பெண்ணுக்குத் தந்திருக்கிறது - தருகிறது என்று தெரியாமலேயே அப்பெண்ணைப் பல்வேறு மன ரணங்களுக்கு ஆட்படுத்துகிறது.
இந்தக் கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வரும் என்று இப்போதே என்னால் முன்தீர்மானிக்க முடிகிறது. பாலியல் சுதந்திரத்தையும் பாலியல் வன்முறையற்ற ஓர் உறவு நிலையையும் அவர்கள் விமர்சித்து என்னைக் குற்றவாளி கூண்டில் ஏற்றுவார்கள். தயவுசெய்து ஏற்றுங்கள். ஏனெனில், அப்போதுதான் எங்கள் நியாயங்களை ஒரு பொதுச் சபையில் நாங்கள் குரல் எடுத்துப் பேச முடியும். வழக்கில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நாங்கள் சொல்லிய கசப்பான உண்மைகள் வரலாற்றில் இடம்பெறும்.
(உரையாடுவோம்)