பெண் இன்று

வியக்க வைத்த வீரப்பெண் | பெண்கள் 360 

செய்திப்பிரிவு

பொதுவாகப் பெண்கள் கரப்பான்பூச்சி, பல்லி போன்றவற்றைப் பார்த்தே பயந்து நடுங்குவார்கள் என்றொரு கற்பிதம் இருக்கிறது. சில திரைப்படங்களில் நாயகிகள்கூடப் பல்லியைப் பார்த்து பயந்து நடுங்குகிறவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கேரளத்தைச் சேர்ந்த தீயணைப்புத் துறை அலுவலர் ரோஷிணி, இதுபோன்ற கற்பிதங்களைத் தன் துணிச்சலான செயலால் எள்ளி நகையாடியிருக்கிறார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஓடையின் கரையில் இருந்த 14 – 15 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தைச் சில நிமிடங்களிலேயே லாகவமாக அவர் மீட்ட காணொளி பலராலும் பார்க்கப்பட்டது. அவரது வீரத்தை வியந்தும் போதுமான பாதுகாப்புக் கருவிகள் இல்லாததைக் கண்டித்தும் சமூக ஊடகங்களில் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். தீயணைப்புத் துறையில் எட்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் இதுவரை 800க்கும் மேற்பட்ட நஞ்சுள்ள, நஞ்சற்ற பாம்புகளைப் பிடித்திருக்கிறார். கேரளத்தின் தெற்குப் பகுதியில் ராஜநாகங்கள் குறைவு என்பதால் இதுதான் தனது முதல் ராஜநாக மீட்பு என ரோஷிணி தெரிவித்திருக்கிறார்.

தொடரும் கொடுமை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தாணேவில் உள்ள ஒரு பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் பரிசோதனை நடைபெற்றதாக எழுந்த புகார் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பள்ளிக் கழிவறையின் சுவரில் ரத்தக்கறை இருந்ததால் யார் அதைச் செய்திருப்பார்கள் என்பதற்காக இந்தப் பரிசோதனை நடைபெற் றிருக்கிறது. இது தொடர்பாக மாணவியரின் பெற்றோர் பள்ளியின் முன் போராட்டம் நடத்தி யதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரும் ஒரு உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்கு ஆசிரியர்கள், இரண்டு அறங்காவலர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர் உள்பட இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான் கொடுமை.

SCROLL FOR NEXT