ரிதன்யா - இந்தப் பெண்ணின் பெயர்தான் கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு பெயர். தற்கொலைக்கு முயன்று வாகனத்துக்குள் பிணமாகக் கிடந்தவரை மீட்டபோதுதான் அவருக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகியிருக்கிற விஷயமும், திருமண வாழ்வில் வரதட்சணை வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததால் தாங்க முடியாத துயரத்தினால் வாழ்வை முடித்துக்கொண்டதும் தெரியவந்தது. காரில் இருந்து அவரை மீட்பதற்குள் அவருடைய அம்மா கதறிய கதறல் நம் காதுகளில் காலம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கும் அவலக் குரல் என்றாலும், இப்படியான அவலக் குரல்கள் நமக்குப் புதியன அல்ல.
வரதட்சணைக் கொடுமை காரணமாக 2021ஆம் ஆண்டு கேரளத்தில் விஸ்மயா என்கிற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப வன்முறையும் வரதட்சணை கொடுமையுமே விஸ்மயாவின் மரணத்துக்குக் காரணம் என அவருடைய பெற்றோர் புகாரளிக்க, விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அது மட்டுமல்லாமல் விஸ்மயாவின் பெற்றோரையும் குறிப்பிட்டு, எந்தப் பெண் குழந்தையும் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் ஆபத்து என்று சொன்னால் உடனடியாகப் பெற்றோர் அதைக் காதுகொடுத்துக் கேட்டு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
நம் தமிழ்ச் சமூகத்தின் ஆகப் பெரிய கேடு ஒரு பெண் ஆளாகி வரும்போது அவளுக்குத் திருமணம் மட்டும்தான் இலக்கு என்கிற போதையை ஏற்படுத்திய படியே இருப்பது. அதேபோல் கணவன் என்பவன் ஒரு துணையே தவிர, அவனே வாழ்க்கையாகிவிட முடியாது என்கிற உண்மையை அவளிடம் கூறாமல் மறைத்துவிடுவது அதற்கடுத்த குற்றம். இப்படியாக வளரும் பெண் குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தாங்க முடியாமல் அதைப் பிறந்த வீட்டில் சொன்னால், அங்கும் பெரும்பாலும் ‘நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.
சகித்துக்கொண்டு வாழு ‘அட்ஜஸ்ட் செய்து கொண்டு போ’ என்பது என்ன? உடல் ரீதியாக அவ்வளவு வன்முறைகளை எதிர்கொண்ட போதும் என் பெற்றோரும் அப்படித்தான் அமைதியாக இருந்தார்கள். சமூக அழுத்தங்களும் அதன்காரணமாக அவர்களுடைய பிம்பத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும் தங்கள் பெண்ணின் எதிர்காலத்தையும் மனநலத்தையும்விடவும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தன. அவர்கள் சமூகத்தின் ஒழுக்கவிழுமியங்களால் பாதிக்கப் பட்டவர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள். சாதி, சனம், சமூகம், குழந்தை என்று ஆயிரம் காரணங்கள் சொல்லி ஒரு பெண்ணை அவளுக்குப் பிடிக்காத திருமண பந்தத்தில் இருப்பதற்கு நிர்பந்திப்பது, பெரும்பாலோரது பிறந்த வீட்டுப் பழக்கமாக இருக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா நன்றாகப் படிக்கக்கூடிய பெண் என்றும் அவர் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடைய தொழிலில் பலரை நிர்வகிக்கக்கூடிய திறன் படைத்தவர் என்றும் சொல்கிறார்கள். வரதட்சணை நிறைய கேட்டார்கள் அல்லது தன்னுடைய கணவர் உடல்ரீதியாகத் துன்புறுத்தினார் என்றால் அதைக் காரணம் காட்டி, தன் பெற்றோரிடம் பேசி அவர் அந்தத் திருமண பந்தத்தை விட்டு வெளியேறித் தன் தொழிலில் இன்னும் அக்கறை செலுத்தி இருக்கலாம். ஆனால், அதை அவர் ஏன் செய்யவில்லை என்று நாம் யோசித்துப் பார்த்தால் எல்லாக் காலத்திலும், ‘இவ்வளவு செலவழித்து என்னைக் கல்யாணம் செய்துகொடுத்தார்களே... அதை நான் ஒன்றுமில்லாமல் செய்துவிடக் கூடாது’ என்கிற எண்ணமே முதலாவது காரணமாக இருக்கலாம். இரண்டாவது - பிரச்சினைகள் தெரிந்தாலும் தனது பெண்ணின் வாழ்க்கை சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில், ‘இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போ’ என்று அந்தப் பெண்ணின் தந்தையும் தாயும் சொல்லும்போது, அதை நம்பும் ஒரு மனநிலைகூட அந்தப் பெண்ணிடம் இருந்திருக்கலாம்.
திணிக்கப்படும் அறிவுரைகள்: இந்த வழக்கில் எந்த அளவுக்கு அந்த மணமகனும் மாமியாரும் மாமனாரும் ரிதன்யாவின் மரணத்திற்குக் காரணமோ அதே அளவுக்கு அவருடைய தந்தையும் ஓரளவுக்குத் தாயும் காரணமாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. ‘என் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்துவிட்டுப் போனது, எனக்குப் பெருமையாக இருக்கிறது’ என்று மகளைப் பறிகொடுத்த நேரத்திலும் ஒரு தந்தை பேசுவார் என்றால், ரிதன்யாவை வளர்க்கும் விதத்தில் அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்று விவாகரத்துகள் பெருகிவரும் சூழலில் திருமணம் என்கிற மாயபோதை தரும் சமூக உறவைப் பலரும் கேள்வி கேட்கும் இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. என்றாலும் இன்னமும் திருமணம் என்பது ஏதோ ஒரு சமூக அழுத்தம் எனப் பல குடும்பங்களில் நினைத்துகொண்டு, அவர்கள் குடும்பங்களில் பிறந்து வெளியே கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு சிறு உதவியைக்கூடச் செய்யாமல், அதைச் சகித்துக்கொண்டு வாழும்படி அறிவுறுத்து கிறார்கள்.
‘ஒருவனுக்கு ஒருத்தி என்று என் மகள் போனது பெருமைதான்’ என்கிற வார்த்தை அவ்வளவு துயரத்திலும் ஒரு தகப்பனுக்கு வந்து விழுகிறது என்றால், அவர் வளர்க்கும் பொழுதும் ரிதன்யாவின் திருமணத்தின்பொழுதும் ரிதன்யாவுக்கு எத்தகைய அறிவுரைகளைப் போதித்திருப்பார் என்று தோன்றாமல் இல்லை. 70 லட்சத்திற்கு காரும் அதற்கு மேலும் பணமும் நகையும் கொடுத்தும் திருப்தி வராத ஒரு குடும்பம், ஒரு பெண்ணை மனுஷியாக எப்படிப் பாவிக்கும்? எப்படி அவளை வாழவிடும்?
நீதியின் நிலை: 2021இல் கேரளத்தில் விஸ்மயா இறந்த போது காட்டில் பற்றி எரியும் ஜுவாலைபோல அவரது மரணம் பேசப்பட்டது. அதேபோல்தான் இன்றும் ரிதன்யாவைப் பற்றி நம்மில் பலர் பேசிக்கொண்டிருக்கின்றோம். இன்னும் சில காலத்தில் வேறு ஒரு பெண் ரிதன்யாவின் இடத்தை நிச்சயமாக இடம் மாற்றுவார். அவ்வளவு நாட்கள் ஏன்... ரிதன்யா இறந்த சில நாட்களிலேயே திருவள்ளூரை அடுத்த பொன்னேரியில் கல்யாணம் ஆகி நான்கே நாட்களில் ஒரு பெண் ஒரு சவரன் நகை குறைந்த காரணத்தால் புகுந்த வீட்டினரால் துன்புறுத்தப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவற்றுக்குப் பிறகும் இந்தத் திருமணங்களில், இந்த அமைப்பில் மாற்றங்கள் வரவில்லை என்றால், பெண்களின் உயிர்கள் கிள்ளுக்கீரையாகத்தான் கருதப்படு கின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இதில் மிகவும் ஆச்சரியமான, அதிர்ச்சி கரமான விஷயம் என்னவெனில் விஸ்மயாவின் கணவர் கிரண் குமாருக்கு அளிக்கப்பட்டிருந்த 10 வருடச் சிறைதண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன் அவருக்குப் பிணை வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தீர்ப்பளித்ததே. விஸ்மயாவின் தற்கொலைக்குக் காரணமான கிரண் குமார் இன்று வெளியே இருக்கிறார். இது ஒன்று போதாதா நம் சமூகத்தில் பெண்களுக்கு என்ன நீதி கிடைத்துவிடும் என்கிற அவல நிலையை உணர்த்த?
(உரையாடுவோம்)