இன்றைக்கு நமது இரண்டாவது உயிரைப் போல அலைந்துகொண்டிருப்பது நம்முடைய அலைபேசி. நம் நிழல் போல வரும் உயிர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர, கைபேசி நம்மிடம் ஒரு நிமிடம் இல்லையென்றால்கூட நம் மனம் பதற்றப்பட்டுவிடுகிறது. நாம் பெற்ற குழந்தை தொலைந்துபோனது போலப் பதற்றத்தோடு அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருப்போம். அந்த கைபேசிதான் இன்று நம்முடைய பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு மிக முக்கியமான காரணம் என்பதை ஒப்புக்கொண்டால்கூட, அது இல்லாமல் ஒரு நொடிகூட நம்மால் இயல்பாக இருக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம்.
கட்டமைக்கப்படும் பிம்பம்: திருமணத்தை மீறிய உறவுகளுக்கு இந்த கைபேசிதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது வெறுமனே திருமணத்தை மீறிய உறவுகளுக்கு மட்டுமல்ல, மனதில் பொய்யான விஷயங்களைக் கட்டமைத்துக்கொள்வதற்கும் அதுவே வழிவகுக்கிறது. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் இன்ஃப்ளுயன்சர்கள் (செல்வாக்குச் செலுத்துபவர்கள்) என்று சிலர் இருக்கிறார்கள். யாருடைய சமூக ஊடகப் பக்கங்களை அதிகமானோர் பின்தொடர்கிறார்களோ அவர்களை இன்ஃப்ளூயன்சர் என்று அழைக்கிறோம். அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நடப்பதுபோன்ற தோரணையுடன் சில சம்பவங்களையும் நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதன் மூலமாகத் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறார்கள். அந்தச் சம்பவங்களை மிக மிக நுட்பமான, நுண்ணியக் காட்சியமைப்பின் மூலம் நம் மனதிற்குள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள்தான் சிறந்த கணவன் - மனைவி, தங்களுக்குப் பிரச்சினைகளே இல்லாத இரண்டு குழந்தைகள் என்பது போல அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் காட்ட காட்ட, நமக்கும் அந்த வாழ்க்கையின் மேல் மிகப்பெரிய ஏக்கம் ஏற்படுகிறது.
பிரச்சினையற்ற வாழ்க்கை: தினம் தினம் காலையில் ஒரு வீட்டின் கதவைத் திறப்பது முதல் இரவு கதவு அடைக்கப்படுவது வரை நமக்கு ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் மனரீதியாக, பணரீதியாக ஏற்படவே செய்கின்றன. ஆனால், இது போன்ற ரீல்ஸ் பார்க்கும்போது நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை வேறு யாரோ வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்கிற எண்ணம் பெரும்பாலும் பெண்களுக்குள் ஏற்படுவதை உணர்ந்து இருக்கிறேன். நான் இது குறித்துச் சில பெண்களிடம் பேசியபோது அவர்களில் பலரும், இன்ஃப்ளூயன்சர் தம்பதி வெளியிடும் ரீல்ஸைப் பார்க்கும்போது தங்களது மனம் மிகப் பெரிய ஆசுவாசத்தை உணர்கிறது என்றும் அடுத்த ஜென்மத்திலாவது அந்த ரீல்ஸில் வருவது போலத் தங்களுக்கு ஒரு கணவன் வரவேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் இவ்வளவு நாட்களாகத் தங்களது மனம் கவர்ந்தவர்களாகவும் எடுத்துக்காட்டாகவும் இருந்ததாகச் சொல்லிய சில தம்பதியர், காவல் நிலையங்களில் ஒருவரின் மேல் மற்றொருவர் புகார் சொல்லிக் கொண்ட செய்தியையும் அண்மையில் நாளிதழ்களில் காண முடிந்தது.
ஏமாற்று வேலை: எல்லா உறவுகளிலும் மகிழ்ச்சி இருப்பது போல உறவு நிலைச் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது பலவீனம் என்று மனதளவில் கருதி நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பெரும்பாலான சமூக ஊடகப் பிரபலங்கள் தங்களுடைய பதிவுகளில் வெளிக்கொண்டு வருகிறார்கள். அதைப் பார்க்கும் பெண்கள், அதை மட்டுமே அந்தப் பிரபலங்களின் வாழ்க்கை முறைமையாக நினைத்துக்கொண்டு, தங்கள் மனதில் பல்வேறு விதமான ஏக்கங்களைத் தேக்கிக்கொண்டு, அவற்றைத் தங்களுடைய குடும்பப் பின்னணியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளில் பிரதிபலிக்கிறார்கள். அப்படிப் பிரதிபலிக்கும் உணர்வு பெரும்பாலும் அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய குடும்பங்களில் பிரச்சினைகளை மேலும் பெரிதாக்குகின்றன. இவையெல்லாம் நேரடியாக நிகழும் வன்முறைகள் அல்ல; நிச்சயமாக இவை அனைத்துமே ஏக்கங்களோடும் தேவைகளோடும் வாழும் பெண்களின் மனதில் ஏற்படுத்தும் மறைமுக வன்முறை.
ஓர் ஊரில் பாயும் நதியைப் பார்க்கும்போது அது அந்தந்த ஊரின் கழிவை எல்லாம் சேர்த்துப் பின்னகர்ந்து ஓடிக்கொண்டிருப்பது போலத் தோன்றும். அந்தக் கழிவுகள் ஆங்காங்கே கரையோரமாக ஒதுங்கிய பிறகு நதி மெல்ல அடுத்த ஊருக்குள் நுழைகிறது. நம் மனம் நதி போல அல்ல என்பதுதான் இங்கு அதிர்ச்சிகரமான விஷயம். அது எப்போதுமே சிறப்பானதையும் மிக மோசமானதையும் தன் மனதின் அடித்தளத்தில் கசடுகளாகச் சுமந்துகொண்டிருக்கிறது. சிறப்பானவை எப்போது
கசடாக மாறுகின்றன?: எப்போதுமே நம் மனம் சிறப்பான விஷயங் களோடு நம்முடைய போதாமையை முன்வைத்து எடை போட்டபடியே இருக்கும். நமக்கு அதுபோல ஒரு சிறப்பான வாழ்வு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் சில நேரம் நம் எதார்த்த வாழ்க்கையில் மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். என்றாலும், நாம் சிறப்பானவை என்று கருதும் விஷயங்கள் எல்லாமே சிறப்பானவை அல்ல என்று புரிந்துகொள்ளும்போது நம்முடைய வாழ்க்கையும் சிறப்பானதாகத் தோன்றும்.
சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் சமீபத்தில் தன் கணவர் மீது வழக்குத் தொடுத்தபோது, அதுவரை அவர்கள்தான் சிறந்த தம்பதி என்று நினைத்துக்கொண்டிருந்த ஒரு பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அக்கா பார்த்தீங்களா... இதைவிட என் புருஷன் எவ்வளவோ நல்லவர்” என்றாள். இதுதான் வாழ்க்கை!
(உரையாடுவோம்)