குமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்தான் எங்கள் ஊர். எங்கு பார்த்தாலும் ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும்தான். செருப்பு அணிந்திருந்தால் அவர்கள்தான் பணக்காரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏழ்மை இருந்தது. ஆனாலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் ஓர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்கியிருந்தார்கள்.
ஊருக்குத் தெற்கே என் மாமா ஒருவர் அரிசி ஆலை வைத்திருந்தார். என் அம்மா அரிசி வியாபாரம் செய்பவர். தினந்தோறும் அவித்து, காய வைத்த நெல்லைச் தலைச் சுமடாகச் சுமந்து ஆலைக்குக் கொண்டு செல்வார். ஆறாம் வகுப்பு மாணவியான நானும் பல நாட்கள் என் அம்மாவுடன் நெல் சுமந்து செல்வதுண்டு. அங்கு தினத்தந்தி வாங்குவார்கள். தலை சுமடை இறக்கி வைத்ததும் ஓடிச் சென்று நாளிதழைப் படிப்பேன். அதன் இரண்டாம் பக்கத்தில் பிரசுரமாகும் ‘கன்னித்தீவு’ படக்கதைதான் என் வாசிப்பின் ஆரம்பம்.
அதன் பிறகு ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் அறிவியல் அசிரியை திருமணமாகி எங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடிவந்தார். அவரது வீட்டில் தினமலர் வாங்குவார்கள். என் வாசிப்பின் அடுத்த கட்டம் ‘சிறுவர் மல’ருக்கு நகர்ந்தது. அதன் பிறகு என் அக்காவின் தயவால் ராணிமுத்து, தேவி போன்ற வார இதழ்கள் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அவற்றில் பிரசுரமாகும் சிறுகதைகள், தொடர்கள், துணுக்குகள், கேள்வி பதில்கள் என ஒரு வரி விடாமல் வாசித்துவிடுவேன். ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களை வெட்டி பாட புத்தகத்தில் வைத்த அனுபவமும் உண்டு. மேல்நிலைப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தபோது கல்லுரியில் படித்துக் கொண்டிருந்த என் அண்ணன் மூலம் ராஜேஷ்குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள்.
துப்பறிவாளர் பரத்துக்கு நானே அழகிய வடிவம் கொடுத்து கற்பனை நாயகனாக ரசித்த காலம் அது. இப்படியே போய்க்கொண்டிருந்த என் வாசிப்பு, இலக்கியம் சார்ந்த அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த அந்த இனிய நாட்கள் என் பள்ளிப் பருவம் முடிந்த பின் ஆரம்பமானது.
1992இல் எங்கள் ஊருக்கு வந்த கத்தோலிக்க அருட்பணியாளர் அகஸ்டின்தான் நூலகம் வருவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர். காரங்காடு கிளை நூலகத்தில்தான் பாலகுமாரன், தி.ஜா, சிவசங்கரி, அனுராதா ரமணன், கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி எனப் பல இலக்கிய ஆளுமைகளை வாசித்தேன். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வைரமுத்து போன்றோரின் கவிதைத் தொகுப்புகளை மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்தபோது, “ஸ்கூல்ல பரீட்சைக்கு இப்படிப் படிச்சிருந்தா மார்க்காவது கூட கிடச்சிருக்கும்” என அம்மா சத்தம் போடுவது இப்போதும் காதில் கேட்பதுபோல் உள்ளது.
திருமணமாகி திருநெல்வேலிக்கு வந்தபின் ஒவ்வொரு வருடமும் என் எதிர்பார்ப்பாக இருப்பது பொருநை புத்தகத் திருவிழாதான். பாடப்புத்தகத்தைத் தாண்டிய உலகையும் என் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என் வாசிப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. புதிய புத்தகங்கள் வாங்கும்போது அதன் அட்டையை ஒரு குழந்தையை வருடுவதுபோல் வருடிக் கொடுப்பதில் எனக்கு அலாதி இன்பம்.- லா. லத்தீஸ், திருநெல்வேலி.