எங்கள் பகுதியில் இளம் தம்பதி ஒரு வயது குழந்தையுடன் ஓலைவேய்ந்த சிறிய வீட்டில் வசித்துவந்தனர். இருவரும் பெற்றோரை இழந்து, ஆசிரமத்தில் வளர்ந்து பிறகு திருமணம் செய்துகொண்டனர். கணவர் முனியன், மனைவி தாரா இருவரும் 10ஆவது வரை மட்டுமே படித்திருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பைப் பெரிய கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கட்டிக்கொண்டு இருந்தார். அவரை அணுகிய இந்தத் தம்பதி, அவரிடம் தங்கள் வறுமை நிலையைக் கூறி தங்களுக்குக் காவலாளி வேலையைக் கொடுத்து, தங்கிக்கொள்ள இடமும் கொடுக்குமாறு கேட்டனர். கட்டிட கான்ட்ராக்டர் ஒப்புக்கொள்ள, கொட்டகையிலேயே தங்கி கட்டிட வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர்.
கட்டப்பட்டுக்கொண்டிருந்த குடியிருப்புக்கு அருகில் இருந்த வீடுகளில் பச்சிளம் குழந்தைகளைக் குளிப்பாட்டும் வேலையை தாராவும், அவர்களது நான்கு சக்கர - இருசக்கர வாகனங்களைக் கழுவித் துடைக்கும் வேலையை முனியனும் செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டதும் சொல்லியபடி முனியன் - தாராவுக்கு அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்தார் கட்டிட கான்ட்ராக்டர். அந்தக் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நீச்சல் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியும் முனியனுக்குக் கிடைத்தது.
குடியிருப்புக்குள் ஒரு கடையும் இந்தத் தம்பதிக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது. அதில் தண்ணீர் கேன் கடை வைத்து அந்தக் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் தினமும் தண்ணீர் கேன் விநியோகம் செய்துவந்தனர். ஆண்டுகள் உருண்டோட, தாரா - முனியன் மகன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றான். அவனுடைய மேற்படிப்புக்கும் குடியிருப்புவாசிகளே உதவுவதாக வாக்களித்துள்ளனர். அவன் படிக்கும் நேரம் தவிர மற்ற நேரத்தில் தண்ணீர் கேன் கடையில் பெற்றோருக்கு உதவியாக இருப்பான். அவனிடம் எதிர்காலத்தில் நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டதற்கு, “தண்ணீர் தாரா, தண்ணீர் முனியன் என்று அனைவரும் கூப்பிடும் அளவுக்கு எங்களுக்கு வாழ்வளித்த பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரையே பிரதானமாகக் கொண்ட பெரிய வாட்டர்பிளான்ட்கள் அமைத்து அதில் என் பெற்றோரை முதலாளியாக்குவேன்” என்றான். கோயில் அருகே இருக்கும் ‘அஞ்சனை பிளாட்ஸ்’ பகுதியில் ‘தண்ணீர் தாரா, தண்ணீர் முனியனை’ தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர்கள் இருவரும்தான் நான் பார்த்து வியந்தவர்கள். அதிகம் படிக்காத, உதவுவதற்கு உறவினர்கள் இல்லாமல், தண்ணீரை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்தவர்கள். மற்றவர்களும் இவர்களை முன்னுதாரணமாகவே பார்க்கின்றனர்.- எஸ். ராஜகுமாரி, போரூர், சென்னை.