பெண் இன்று

விண்வெளி நாயகி | பெண்கள் 360

செய்திப்பிரிவு

அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றிருக்கும் நால்வரில் ஒருவரான பெகிவிட்சன், அமெரிக்காவின் மிகச் சிறந்த விண்வெளி வீராங்கனை. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 38 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இவர், மனிதர்களை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் இரண்டாவது திட்டத்துக்குத் (அக்ஸியம் 2) தலைவராகச் செயல்பட்டவர்.

நாசாவில் பணியாற்றியபோது மூன்று நெடும்பயணங்களை விண்வெளிக்கு மேற்கொண்டதுடன் மிக அதிக நாட்கள் (665) விண்வெளியில் இருந்தவர் என்கிற சாதனையைப் படைத் தார். அக்ஸியம் 2 திட்டப் பயணத்துக்குப் பிறகு 675 நாட்கள் விண்வெளியில் இருந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர், உலகின் முதல் விண்வெளி வீராங்கனை என்கிற சாதனைகளை பெகி விட்சன் படைத்தார்.

நாசாவின் விண்வெளி வீரர்கள் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பை வகித்திருக்கும் இவர், அதன் விண்வெளி வீரர்கள் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அக்ஸியம் 2 திட்டத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்றதன் மூலம் தனியார் விண்வெளித் திட்டத்துக்குத் தலைமை வகித்த முதல் பெண் என்கிற பெருமையை பெகி விட்சன் பெற்றார். சர்வதேச விண்வெளி நிலைய திட்டத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றதோடு இரண்டு முறை தலைமைப் பொறுப்பு வகித்தவர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார். நாசாவில் விண்வெளி வீரராக இணைந்த, ராணுவப் பொறுப்பில் அல்லாத முதல் பெண் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.

நாசாவில் பணியாற்றியபோது இவர் தனது இரண்டாம், மூன்றாம் விண்வெளிப் பயணத்தின்போது நிலைய கமாண்டராகப் பணியாற்றினார். தனது மூன்று விண்வெளிப் பயணங்களில் பத்து விண்வெளி நடைகளை மேற்கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டார். உயிரியல்,உயிரித் தொழில்நுட்பம், இயற்பியல், புவியியல் உள்ளிட்ட துறைகளில் ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். 2018இல் நாசாவில் இருந்து ஓய்வுபெற்ற பெகி விட்சன் தற்போது அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆண் குழந்தை ஆசையால் பறிக்கப்பட்ட உயிர்கள்: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் உமாதேவி (25). ஐந்து மாத கர்ப்பிணியான இவரைத் திருப்பதியில் இருக்கும் ஸ்கேனிங் மையத்துக்கு இவருடைய கணவர் சில நாட்களுக்கு முன் அழைத்துச் சென்றார். உமாதேவியின் கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று ஸ்கேனிங் மையத்தில் சொல்லப்பட்டது. உமாதேவிக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்ததால் கருவைக் கலைத்துவிடும்படி அவரது புகுந்த வீட்டினர் கட்டாயப்படுத்தினர். கருவைக் கலைக்க மறுத்ததால் உமாதேவியை அவருடைய கணவரும் புகுந்த வீட்டினரும் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து உமாதேவி, அவருடைய ஒன்றரை வயது குழந்தை இருவரும் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். பிரேத பரிசோதனையில் உமாதேவியின் கருவில் இருந்த குழந்தை ஆண் என்று தெரியவந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவது சட்டப்படி குற்றம் என்கிற நிலையில் சட்டவிரோத ஸ்கேனிங் மையத்தின் செயலால் இரண்டு உயிர்கள் பறிபோனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உமாதேவியின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் கருக்கொலை - சிசுக்கொலையைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனையளிக்கின்றன. அரசு இன்னும் தீவிரத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.

SCROLL FOR NEXT