பெண் இன்று

பெண்கள் அனைவரும் நல்லவர்களா? | உரையாடும் மழைத்துளி 37

தமயந்தி

தேனிலவுக்குச் சென்றபோது ஒரு பெண் தன் கணவனை, தன் காதலனோடு சேர்ந்து கொலை செய்த சம்பவத்தைப் பற்றிச் சில வாரங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதன் கோரத்தை நாம் வாசித்து அறிந்தபோது ஏற்பட்ட அதிர்வைக் காட்டிலும், இந்த வாரம் தமிழ்நாட்டில் ஒரு காதல் ஜோடியைப் பிரிப்பதற்காகப் புறச்சூழலில் எத்தனை அதிகார வர்க்கங்கள் தங்கள் முகங்களைக் காட்டியிருக்கின்றன என்பதை வாசித்தபோது அதிகமாகவே அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஏதோவொரு விதத்தில் மூன்றாம் நபராக உள்ளே வந்த முன்னாள் பெண் காவலர் ஒருவரும் கடத்தல் போன்ற விஷயங்களில் தலையிட்டது ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.

காதலுக்கு எதிர்ப்பு: பெண்கள் எல்லாரும் நல்லவர்கள், அவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள், அவர்கள் மீது எப்போதும் குற்றம் இழைக்கப்படுகிறது என்பது போன்ற பல்வேறு விதமான கருத்துகள் நம் சமூகத்தில் சொல்லப்பட்டுவருகின்றன. பொதுப்பார்வையில் இதுபோன்ற சம்பவங்களை முன்வைத்துப் பார்த்தால், எல்லாக் காலத்திலும் அது அப்படியாக இல்லை என்பது புலனாகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகிய இருவரும் காதலித்து, வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பெண்ணின் தந்தை தொழிலதிபர் என்பதால் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தனுஷின் 17 வயதுத் தம்பியைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் இந்தச் சமூகச் சூழலில் எத்தனை எதிர்வினைகளை அவள் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைச் சமீபத்திய இந்தச் சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டியது. இவ்வளவுக்கும் அந்தப் பெண் தனக்கு எந்தச் சொத்தும் வேண்டாம் என்றும் தன்னுடைய காதலனான கணவரோடுதான் தான் வாழ விரும்புவதாகவும் காவல்நிலையத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகும், விடாமல் துரத்திச் சென்று அவர்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் சிதைத்துச் சின்னாபின்னமாக்க முயன்றது மிகப்பெரிய துயரம். இருந்தபோதும் அந்தப் பெண் மனஉறுதியுடன் தான் எடுத்த முடிவிலிருந்து இப்போதும் பிறழாமல் நிற்பது மிகப்பெரிய வரம். இதற்கு முன் திவ்யா எப்படி நீதிமன்றத்தில் பிறழ்ந்தார் என்பதை வரலாறுஎன்றைக்கும் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.

குற்றத்தில் பால் பேதமில்லை: சமூக அழுத்தத்தின் காரணமாக ஒரு பெண் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்தும் முடிவில் இருந்தும் மாறுவது பெரும்பாலும் நடக்கக்கூடிய விஷயம்தான். ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தில் ஒரு பெண் தன் காதலனையே காட்டிக்கொடுத்தாள் என்பது மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது - பேசப்பட்டது. பெண்கள் அத்தனை பேரும் அத்தகைய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று சொல்வது சால்ஜாப்புக்காக வேண்டுமானால் சரியாக இருக்கக்கூடுமே அன்றி, அது ஒரு காலமும் நியாயமாக இருக்க முடியாது.

திருவள்ளூர் சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டிருக்கும் முன்னாள் பெண் காவலர் போலியான சான்றிதழ்களைக் கொடுத்துத்தான் காவல்துறைக்கு வந்ததாக அவருடைய முன்னாள் கணவர் குற்றம்சாட்டியதன் மூலமாக வேலையை இழந்தார். தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழ்வதுதான் மனித இயல்பு. அதற்குப் பிறகும் அந்தக் காவலர் தன்னைத் திருத்திக்கொள்ளாமல் மறுபடியும் இன்னொரு குற்றத்துக்குத் துணைபோவதுதான் துயரமான விஷயம். இதில் பாலினம் சார்ந்து எந்தவிதமான சார்புகளோ நியாயப்படுத்தலோ இருக்கவே இயலாது. பெண் என்றாலும் குற்றம் குற்றமே என்று நக்கீரனைப் போலத்தான் நாமும் சொல்ல வேண்டியிருக்கிறது.

சுதந்திரமும் குற்றமும் ஒன்றல்ல: ஒரு பெண் தான் தேர்ந் தெடுக்கும் வாழ்க்கையில் நிலைதவறாமல் பற்றிக்கொண்டு வாழ்கிறார் என்கிறபோது, அதிகார வர்க்கங்கள் எப்படி அதைச் சிதைக்க முற்படுகின்றன என்பதையும் இந்தச் சம்பவம் நமக்குக் காட்டிக்கொடுக்கிறது. இந்தச் சம்பவத்தில் மிகப்பெரிய ஆறுதல் என்னவெனில், அதிகாரத்தில் இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது மட்டுமே. அது மட்டுமல்ல... இந்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டபோது தமிழக அரசு, ‘குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பதை ஊர்ஜிதப்படுத்தியதில்தான், யாராக இருந்தாலும் நீதி தோற்காது என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

பெண்களுக்கான சுதந்திரத்தையும் பெண்கள் குற்றம் இழைப்பதையும் அதற்கான கருவிகளாக மாறுவதையும் இரு வேறு விஷயங்களாக நாம் அணுக வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக்கொண்டு பெண்கள் சுதந்திரமாக இருக்கவே கூடாது என்று நினைப்பதும் செயல்படுவதும் மிகப்பெரிய குற்றமாகிவிடும். (உரையாடுவோம்)

SCROLL FOR NEXT