எங்களுக்கு மிகவும் நெருக்கமான அவர் திருநெல்வேலியில் படித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். புகுந்த வீடு தஞ்சை. அவருடைய கணவர், ‘ஷாப் கடை’ என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும் ‘ஜெனரல் மெர்ச்சன்ட்’ வியாபாரத்தை மிகச் சிறப்பாக நடத்திவந்தார். வீடும் நிலபுலனும் ஆள்படையும் நிரம்ப இருந்தன. அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு, கையில் இருந்த எல்லாவற்றையும் இழந்து வந்தாரை வாழவைக்கும் சென்னைக்குக் குடும்பத்துடன் அவர் இடம்பெயர்ந்தார். சென்னைக்குச் சென்றால்தான் தன் பிள்ளைகளுக்கு வாழ்வு என்கிற பெரிய முடிவைக் கையில் ஒன்றும் இல்லாமல் மன தைரியத்துடன் எடுத்தார்.
முதலில் மிரளவைத்த சென்னை படிப்படியாகப் பழகிப்போனது. அவர் தன் குழந்தைகளுக்குச் சொன்னதெல்லாம், ‘படித்து அவரவர் காலில் நிற்க வேண்டும்’ என்பதுதான். அவருடைய கணவர் கடும் உழைப்புக்கு அஞ்சாதவர். அவரும் பல வழிகளில் வியாபாரம் செய்து பணம் ஈட்டினார். இருப்பினும் யோசிக்காமல் செலவு செய்யும் நிலையில் இல்லை. அவர்களுடைய பிள்ளைகள் படித்து, வேலைக்குச் சென்றனர். நால்வருக்கும் திருமணம் ஆனது. காலம் உருண்டோடியது. பேரப்பிள்ளைகளையும் அவர் பேரன்போடு வளர்த்தார். நாளடைவில் அவரது ஆரோக்கியம் பாதிப்படைந்தது. அவரது இயல்பு வாழ்க்கை சிறிதுசிறிதாகச் சுருங்கி வீட்டுக்குள் அடைந்துபோனது.
காலில் தொடங்கி இதயம், நுரையீரல் என்று படிப்படியாக நோயுற்றார். ஆனால், அவர் மனம் கலங்கியோ, அழுது புலம்பியோ, சோர்ந்து போய் நின்றோ யாரும் பார்த்ததில்லை. எப்போது பார்த்தாலும் பளிச்செனத் தெரிவார். பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி கட்டங்களை நிரப்புவது, இசை கேட்பது, படிப்பது என்று எந்தவொரு சிறு செயலையும் ஆர்வத்துடன் செய்வார். அவர் எதற்கும் ஆசைப்பட்டதில்லை. அவர் நேசித்ததெல்லாம் மனிதர்களை மட்டுமே. தன் வேலையைத் தானே செய்துகொள்வார். நாங்கள் யாராவது சோர்ந்துபோய் அவரிடம் வந்தால், நிறைய பேச மாட்டார். ‘எல்லாம் சரியாகப் போய்விடும்’ என்கிற ஒரு வரி எங்களுக்கு அப்படியோர் ஊக்கச்சக்தியாக இருக்கும்.
அவர் எங்களை விட்டுச்சென்றதை மருத்துவரின் வழியாகக்கேட்டபோது, நம்ப முடியாமல் நிலை குலைந்து போனேன். அவருக்கு மருத்துவம் பார்த்த நுரையீரல் நிபுணர் செய்தி கேள்விப்பட்டு அந்த இரவில் ஓடோடி வந்து கண் கலங்கி என் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னார். அது அவருக்கும் அந்த மருத்துவருக்கும் இடையே இருந்த அன்பை எனக்குப் புலப்படுத்தியது. அவரது விருப்பப்படியே அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டன. இறந்தும் கொடுப்பவர் ஆனார் எங்கள் அம்மா செண்பகலட்சுமி.- கார்த்தியாயினி, சென்னை.