பெண் இன்று

கருப்பை நீக்கம்: பின்னிருக்கும் அரசியல் | உரையாடும் மழைத்துளி 36

தமயந்தி

பெண்களின் உடல் அரசியலில் மிக முக்கியமான கூறு, அவர்களது கருப்பை குறித்த அரசியல் புரிந்துணர்வு. ஓர் உடல் உறுப்பில் அரசியல் எப்படிக் கலக்கும் என்கிற கேள்வியை மிகச் சாதாரணமாக யாரும் முன்வைத்துவிடக்கூடும். என்றாலும், பெண்களின் அவயங்களில் கருப்பை மிக அதிகமாகச் சுரண்டப்படும் மானுட உறுப்பாக இருப்பதை நாம் மறுக்கவே இயலாது. திருமணம் என்கிற பெயரால் பெண்ணின் விருப்பமின்றி நடக்கக்கூடிய தாம்பத்திய உறவும், அதனால் அவள் கர்ப்பமடைவதும் இந்தச் சுரண்டலில் அடக்கம்.

எந்த வாரம் எந்தத் திரைப்படம் ஜெயித்தது அல்லது தோற்றது என்பதை அகில இந்திய ரீதியாகத் தெரிந்துகொள்ளத் துடிக்கும் ஒரு சாமானிய இந்தியருக்கு, மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 848 பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள் என்னும் செய்தி பெரும்பாலும் தெரிந்திருக்க இயலாது. ஏன் அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றினார்கள் என்பதற்குச் சொல்லப்படும் காரணம் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியது. அவர்கள் அனைவருமே பக்கத்து ஊர்களில் இருக்கக்கூடிய கரும்புத் தோட்டங்களில் வேலை செய்கிறவர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு அந்தந்த ஊர்களுக்குச் சென்று வேலை செய்யும் நிலையில் இருப்பதால், தாங்கள் கர்ப்பமாகிவிடக் கூடாது என்கிற காரணத்தாலேயே அவர்கள் கருப்பையை நீக்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கருப்பை நீக்கிய பெண்களில் 477 பேர் 35 வயதைத் தாண்டாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருப்பமில்லாத ஒப்புதல்: இந்தியாவில் நெருக்கடி நிலைக் காலக் கட்டமான 1976இல் ‘கட்டாய ஆண் விந்துநாளம் நீக்குத’லுக்குக் காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகள், காவலர்கள் கிட்டத்தட்ட 11,000 பேர் ஆட்படுத்தப்பட்டார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. அந்தச் சிகிச்சை முறைமை சரியாக இல்லாமல் சில காவலர்கள் தொற்று ஏற்பட்டு இறந்துபோனதாகவும் செய்திகள் உண்டு. மகாராஷ்டிரத்தில் பெண்களுக்கு நிகழ்ந் திருக்கக்கூடிய இந்தக் கருப்பை நீக்குதல் முறைமைக்குப் பெரும்பாலும் அந்தப் பெண்களின் பொருளாதார நிலைதான் காரணமாக இருந்திருக்கக்கூடும். உழைக்கும்
அடிமைகளாகக் கரும்புத் தோட்டத்தில் அவர்கள் வேலை பார்க்கும் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கர்ப்பமாவது முதலாளிகளுக்கு அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதில் மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதன் காரணமாகத்தான் இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தலாம். இது குறித்து தீவிர விசாரணை செய்யும்போதுதான் உண்மை தெரியவரும்.

தங்கள் வாழ்க்கை சார்ந்த பொருளாதாரச் சிக்கல்களை முன்வைத்து அந்தப் பெண்கள் வலிந்து ஒப்புக்கொண்ட விஷயமாக இருக்குமே அன்றி, ஒருபோதும் அவர்கள் மனம் உவந்து எடுத்த முடிவாக இருக்கவே இயலாது. தொழிலாளர்களாக வரக்கூடியவர்கள் கர்ப்பமாவதால் முதலாளிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் என்கிற ஒரு விஷயத்தை முன்வைத்து எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலும் பெண்களை நோக்கித்தான் இருக்கின்றன. வர்க்க பேதங்களும், அதேபோல இது சார்ந்த உடல் வேதனைகளும் பெண்களுக்குத்தான் பெரும்பாலும் நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. இவற்றை யாரும் கேள்வி கேட்பதே இல்லை என்பதுதான் மிக முக்கியமான காரணமாகவும் இருக்கிறது .

புறக்கணிக்கப்படும் மனநலன்: சிறுவயதிலேயே பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், தங்களுக்குப் பொறுப்பு முடிந்துவிடும் என்கிற ஒரே காரணத்தினால் 13 வயதிலேயே திருமணம் செய்துகொடுக்கப்படும் பெண்கள் நம்மிடையே இன்றைக்கும் உண்டு. என்றாலும், அவர்கள் உடனடியாகக் கர்ப்பமாகி, தான் தாய் - தன்னால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பதை இந்தச் சமூகத்தின் முன் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இளவயது தாய்மார்கள் என்றைக்குமே தாங்கள் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. இந்தக் கரும்புத் தோட்டத்துப் பெண்களும் தங்கள் கருப்பையை அகற்றி விட்டுத் தோட்டத்திற்கு உழைக்கத்தான் செல்ல வேண்டும், உடலில் மாறுதல் ஏதும் செய்யப்படாத அவர்கள் வீட்டு ஆணைப் போலவே.

கருப்பையை நீக்குவது எத்தகைய ஹார் மோன் பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என்பதை இப்போது பெருகிவரும் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மூலமாகவே நாம் அறிந்துகொள்கிறோம். இந்தப் பெண்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலை மாற்றங்களை எவ்வாறு சமன் செய்திருப்பார்கள் என்பதைப் பற்றி யோசிக்கக்கூட இயலவில்லை. அதைப் பற்றிப் பெரிதாக யாருமே யோசிக்கவில்லை என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இப்படியோர் அறுவை சிகிச்சையைச் செய்ய அந்த மருத்துவர்கள் எப்படி ஒப்புக்கொண்டார்கள்? இப்படிச் செய்வது சட்டத்திற்கு விரோதமானது அல்லவா
என்கிற கேள்விகள் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பேசப்படாத இந்தச் சம்பவம் குறுகிய வட்டப் பெண்களின் வாழ்க்கையை, உடல்நிலையை எப்படிப் பாதித்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் மிகப் பெரிய அநீதியாக இருக்கிறது. உண்மை என்ன என்று கண்டறிந்து, இது தொடர்பான விஷயங்களை நிறுத்தும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்கு தென்கோடியில் நாம் இருந்தால்கூட, இது குறித்துப் பேசவும் விவாதிக்கவும் வேண்டும். அதுவே நமது கடமை!

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT