பள்ளிப் பருவத்திலேயே புத்தக வாசிப்பைத் தொடங்கிவிட்டேன். எங்கள் வீட்டில் அப்போது சிறு நூலகமே இருந்தது. டாக்டர் மு.வரதராசனின் ‘நெஞ்சில் ஒரு முள்’ நூலில் இருந்துதான் வாசிப்பைத் தொடங்கினேன். அவரது ‘அகல் விளக்கு’ சாகித்ய அகாடமிக்குத் தேர்வாகும் முன்பே படித்து வியந்திருக்கிறேன். அவரது ‘கள்ளோ? காவியமோ?’, ‘கரித்துண்டு’, ‘தம்பிக்கு’ ஆகியவை மறக்க முடியாத நூல்கள். அதன் பின் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகியவை தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள். அவரைப் போலவே சரித்திரக் கதைகளை எழுதிய சாண்டில்யன் தனது வர்ணனைகளால் கவர்ந்தவர்.
இந்தக் காலக்கட்டத்தில் ஜெயகாந்தன் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படித்தேன். அவரது கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளும் எதார்த்தமான நடை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. அதன் பின் அவரது தீவிர ரசிகையாக மாறி அவரது அனைத்து நூல்களையும் வாங்கிப் படித்தேன்.
ஒரு புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய சுஜாதா எழுதிய ‘தலைமைச் செயலகம்’, ‘ஏன்? எதற்கு? எப்படி?’ ஆகியவை அவரது புதிய, மாறுபட்ட நடையழகைக் காட்டி வியப்பில் ஆழ்த்தின. அதேபோல் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’, ஓர் அரிய நூலாக அமைந்தது. அதன் பிறகே அவரது கவிதைத் தொகுப்புகளை வாங்கினேன்.
படிப்பதற்காகச் செலவு செய்ய யோசிக்கக் கூடாது என்று என் கணவர் கூறுவதுண்டு. நல்ல நூல்களை வாங்கிச் சேகரித்து என் வீட்டிலும் சிறு நூலகம் ஒன்றை அமைத்துக்கொண்டேன். இன்றைக்கும் வாசித்து மகிழ தமிழ்கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் நூல்கள் உள்ளன. அவற்றைத் தேடிப்பித்து வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.- இந்திரா தணிகாசலம், கோபிசெட்டி பாளையம்.
அன்புத் தோழிகளே, உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in.