காங்கேயம் புத்தகத் திருவிழாவில் சிறப்புரையாற்றி விட்டு மேடையிலிருந்து இறங்கி வந்தேன். அப்போது என்னருகே வந்து கைகளைப் பிடித்துத் தோளில் சாய்ந்து அழுதார் ஒரு பெண்மணி. எனக்குக் காரணம் புரியவில்லை. அதன்பின் ‘அன்புக்காக நாலு சுவருக்குள் ஆடையிழந்தபோது, அதை அவமானமாகக் கருதவில்லை; எப்போது என் அன்பை நீ அவமதித்தாயோ அப்போது நான் ஒட்டுத் துணியின்றி இருப்பதைப் போன்ற அவமானத்தை அடைகிறேன்’ என்று ‘தூப்புக்காரி’ நாவலில் பூவரசி சொன்ன வார்த்தைக்காகவே இந்தக் கண்ணீரும் கைப்பிடித்தலும் என்பதை அவர் விளக்கினார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உடலில், பெண்ணுடல் மட்டும் எப்படி ‘ஆபாசம்’ என்கிற பொருளைப் பெற்றுவிடுகிறது என்று புரியவில்லை. கடந்த தலைமுறையினர் உடலைப் பொக்கிஷமாகப் பார்த்தார்கள், பேணினார்கள். ஆனால் இன்றோ பத்து வயது ஆண் பிள்ளைக்கும் பெண்ணின் உடல் பற்றித் தெரிகிறது. இது போலவே சிறுமிக்கும் ஆண் உடலின் ரகசியங்கள் தெரிகின்றன. நிர்வாணங்கள் மிகவும் மலிந்துபோன காலக்கட்டம் இது. ஆனாலும், இந்த நிர்வாணங்களின் மகிமையும் மகத்துவமும் உண்மையான அன்பில் மட்டுமே அழகாக இருக்கிறது; அர்த்தம் பெறுகிறது. எப்போது இந்த அன்பு கைநெகிழலாகவும் ஒருவருக்கு இன்னொருவர் காட்டிக்கொடுக்கும் துரோகமாகவும் மாறுகிறதோ அப்போதுதான் மனதில் அவமானத்தை அனுபவிக்கிறாள் பெண். தன் நம்பிக்கைக்குரிய காதல் தன்னை ஏமாற்றிவிட்டது என்கிற உணர்வே அவள் மனதை முழுவதுமாக நிர்வாணமாக்குகிறது.
பெண்ணுடல்கள் ஏதோ ஒரு வகையில் மலினப்படுத்தப்படுகின்றன நாள்தோறும். இதற்குப் பின்னால் அவள் அன்பு செய்த ஒருவனின் துரோகம் இருப்பதைவிட, வேறு என்ன வலி இருக்க முடியும்? ஆதியில் மனிதர்கள் ஆடையற்றுத்தான் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆடை மூடாதவரைக்கும் ‘ஆபாசம்’ செத்துப்போய்த்தான் கிடந்தது. மறைபொருளாகிப் போன பிறகுதான், அதன் வியூகங்களில் அதிகமான ஆச்சரியம் கூடிப்போனது. மனமொத்த ஆணும் பெண்ணும் அன்பின் மையத்தில் கூடும்போது கலைக்கப்படும் ஆடையிழப்பில் தெரியாத அவமானம், ஒருவரை இன்னொருவர் கைவிடும் போதுதான் கூசிப்போகிறது. ஆபாசம் அவசங்கை யெல்லாம் இருக்கட்டும். பிரசவ அறைக்குப் போனால் தெரியும் நிர்வாணங்களின் மகிமை. ஒட்டுத்துணி இல்லாமல்தான் பெண் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஆண் மருத்துவர்கள் முன்னி லையில்தான் நிர்வாணமாக கிடக்கிறாள். இங்கெல்லாம் எங்கே போனது ஆபாசம்?
எனக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார், தன் காதலன் அவள் உடலைக் கெடுத்துவிட்டானென்று. உடலென்ன மீனா, இறைச்சியா, காய்கறியா கெட்டுப்போவதற்கு? யாரை யார் கெடுக்க முடியும்? உடல் அவமானம் சுமக்கிறது என்பதற்காகச் சாவைத் தேடியவளிடம் ஒன்று சொன்னேன்: ‘உன் அன்புதான் சரியில்லாத வனோடு போயிருக்கிறது; தகுதியில்லாதவனைக் காதலித்த அன்புதான் காயப்பட்டுப் போயிருக்கிறது. முடிந்தால் அதற்கு மருந்து போடு. உடலை உடலே பார்த்துக்கொள்ளும்’ என்று. உடலுக்குத் தன்னை நிர்வாணமென்று தெரியாது. அன்பில் துரோகம் எழுதும் போதுதான் கையறு நிலைக்குப் போகின்றன உடலும் மனமும். பிறந்தபோதும் இறந்த பிறகும் நிர்வாணம் மட்டுமே நிஜமாகிறது. இடைப்பட்ட வாழ்க்கையில் போர்த்திக்கொள்ளும் ஆடையின் அவிழ்தலில் இல்லை நிர்வாணம். யாரை நம்பி ஒரு பெண் தன் உடையை இழந்தாளோ, அவனின் துரோகம்தான் முழு நிர்வாணம்.
ஆணின் உடல் மட்டும் ஏன் ஆபாசமென்று தீயாகப் பரவவில்லை? ஏன் அவன் உடல் வர்ணனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. என்னதான் பேசினாலும் எழுதினாலும் பெண்களுக்கான விடுதலை பரவலாகி விட்டது என்று சொன்னாலும், பெண் உடல் மீதான வன்மங்கள் ஒருவகையில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் எதிர்த்துப் பெண்களும் வாழப் பழகிவிட்டார்கள். காரணம், வாழ்க்கை என்னும் பீடத்தில் அவர்களும் வாழவேண்டாமா? உடலைக் கொல்பவர்களால் வாழ்க்கையைக் கொல்ல முடியாது அல்லவா!
- கட்டுரையாளர், எழுத்தாளர்.