இன்று வரை மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என் ஆருயிர்த் தோழி லதாவின் அம்மா கோகிலாம்பாள்தான். அப்பப்பா என்ன ஓர் உழைப்பு, உறுதி, உற்சாகம். அவரிடம் பத்து நிமிடம் பேசினால் போதும்; நம்மையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
அவருக்கு ஐந்து மகள்கள், இரண்டு மகன்கள். கணவரின் சொற்ப சம்பளத்தில் இத்தனை பேர் எப்படி உயிர் வாழ்வது? சாப்பாடு, துணிமணி, படிப்புச் செலவு, மருத்துவம் என்று எவ்வளவு செலவு இருக்கிறது. அதனால், நன்கு யோசித்து ஒரு முடிவெடுத்தார். தனக்குத் தெரிந்த தையல் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தர எண்ணி, முதலில் ஒரு தையல் இயந்திரம் வாங்கினார். வீட்டிலேயே ஓர் அறையில் தையல் வகுப்பு எடுக்க ஆரம்பித்தார். அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வந்தனர். நானும் அவரிடம் கற்றுக்கொண்டேன். பொறுமையுடன் நிதானமாகச் சொல்லிக் கொடுப்பது அவரது சிறப்பு.
தன் மகள்களின் ஆடைகளை எல்லாம் அவரேதான் தைப்பார். அவர்கள் வீட்டில் தையல் மிஷின் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். தினமும் தலைக்குக் குளித்து, மஞ்சள் பூசிய முகத்தில் வட்டக் குங்குமம் வைத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் வளைய வருவார். ‘சமையல்ராணி’ என்றே அவரைச் சொல்லலாம்.
தோழியுடன் படிக்க, விளையாட என்று அவர்கள் வீட்டுக்கு நான் செல்லும் போதெல்லாம் தின்பண்டம், கேப்பைக் கூழ், பாசிப்பருப்புப் பாயசம் என்று பலவற்றையும் அன்புடன் கொடுப்பார். இவ்வளவு வேலைகள் இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளவே மாட்டார். கடையில் வாங்கிக் கட்டுப்படி ஆகாது என்று தட்டை, தேன்குழல், அதிரசம், பொரிவிளங்கா உருண்டை என்று வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்வார். அவர் செய்யும் பலகாரங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்.
தன்னுடைய அயராத உழைப்பினால் தன் ஐந்து பெண்களையும் பட்டப்படிப்புவரை அவர் படிக்க வைத்தார். மகன்கள் இருவரும் முதுகலைப் பட்டம் பெற்றனர். எனக்குக் கவலை, மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் கோகிலாம்மா வைத்தான் நினைத்துக்கொள்வேன். அவரது கடின உழைப்பு, பக்தி எல்லாம் மனதில் வந்து போகும். உடனடியாக உற்சாகம் வந்து, நேர்மறை எண்ணங்கள் தோன்றும். யாருக்குத்தான் கஷ்டம் இல்லை? இதுவும் கடந்து போகும் என்று நினைத்து கோகிலாம்மா போல் நாமும் வாழ்வோம் என்று தோன்றும்.- ஜெயா சம்பத், கொரட்டூர், சென்னை.