தமிழ்நாட்டுக் குடும்ப அமைப்புகளில் மிக நுணுக்கமானதும் சிக்கல் நிறைந்ததும் குடும்ப உறவுமுறைகள்தான். பிற இடங்களிலும் இந்தப் பிரச்சினை பரவலாகத் தென்பட்டாலும் தமிழ்நாட்டைக் குறித்து, அதன் குடும்ப உறவுமுறைப் பின்னல்களின் சிக்கல் களைக் குறித்து ஆராய்ந்தோம் என்றால் அவை பெரும்பாலும் ஓர் ஆணைத் தங்களுடைய கைவசம் வைத்துக்கொள்ள பல பெண்கள் போராடும் ஒரு போர்க்களமாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
இரண்டு நாள்களுக்கு முன்னால் திடீரென்று என்னுடைய தோழியிடமிருந்து அழைப்பு. ஐசிசி கிரிக்கெட் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற ஊர்வலத்தின் கூட்டநெரிசலால் ஏற்பட்ட கொடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த நேரம் அது. “அவசரமாகக் கொஞ்சம் வீட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.
ஆணை விட்டுத்தராத பெண்கள்: நான் அங்கே சென்றபோது அவள் தலைமுடியெல்லாம் கலைந்துபோய் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். அவள் காதல் திருமணம் செய்துகொண்டவளாகவும் வேறு சாதியைச் சார்ந்தவளாகவும் இருப்பதால் அவளுடைய மாமியாரும் நாத்தனார்களும் அவளை வீட்டின் ஓர் அறையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் சொன்னாள். அதை எதிர்த்து அவள் கேள்வி கேட்டால் அவர்கள் சண்டையிடு வதாகவும் சொன்னாள். அவளுடைய கணவன் மட்டும் மற்ற அறைகளுக்குள் சென்று வரலாம் என்று சொன்னார்கள். ஏன் இந்தப் பாரபட்சம் என்று கேட்டபோது, “அவன் எங்க ரத்தம்ங்க” என்று அவர்கள் என்னிடம் கோபமாகச் சொன்னார்கள்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண் அவருடைய அண்ணன் மனைவி தேங்காய் சேர்த்துச் சமைப்பதாகவும் அது தங்கள் குடும்பத்துக்கு ஒத்துப்போவதில்லை என்றும் குறை சொன்னார். உடனே நிகழ்ச்சி நெறியாளர், “அப்படி என்றால் உங்கள் அண்ணனுக்கு எதற்காகத் திருமணம் செய்து வைத்தீர்கள்? உங்கள் அண்ணனை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே?” என்று கேட்டார். அந்தப் பெண் வாயடைத்துப் போனார். இப்படித்தான் பெரும்பாலான வீடுகளில் ஆண் என்பவன் குடும்பச் சொத்தாகவும் உடைமையாகவும் கருதப்படுகிறான். ‘இது என்னுடைய பென்சில்’ என்று சிறுவயதில் பேசும் சில உணர்வுகளைப் போலவே ‘இது என்னுடைய அண்ணன், என்னுடைய மகன். இவன் எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்கிற எண்ணம் பெரும்பாலான சகோதரிகளுக்கும் அம்மாவுக்கும் ஏற்படவே செய்கிறது.
இணையாத மனங்கள்: இன்னோர் உறவினரின் வீட்டில் ஒரு சகோதரி லண்டனிலும் இன்னொருவர் இலங்கையிலும் இருக்கிறார்கள். ஆனால், அந்த இரண்டு பெண்களும் தினமும் இரண்டு மணிநேரமாவது தங்கள் அம்மாவிடம் அலைபேசியில் பேசிப் பேசி அண்ணன் மனைவியைப் பற்றிக் குறைசொல்லி, அந்தப் பெண் மீது அவர்கள் அம்மாவுக்கு வெறுப்பு ஏற்படும்படி செய்து விட்டார்கள். அந்தப் பெண் விவாகரத்து வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அண்ணன் மறுமணம் முடித்த பிறகும், அவர்கள் இந்தப் போக்கைக் கைவிடுவதாக இல்லை. தொடர்ந்து இந்தப் பெண் மீதும் அவர்கள் பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைத் தினமும் வைத்து அவர்களுடைய அம்மா இறக்கும் வரை அந்தப் பெண்ணை அவர் நேசிக்க விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இத்தனைக்கும் அவர் படுக்கையில் விழுந்தபோது இந்தப் பெண்தான் அவரைச் சுத்தம்செய்து கவனித்துக்கொண்டார்.
நம் சமூகத்தில் சில பெண்களின் மனதில் ஏதோவோர் அதிகார ஆக்கிரமிப்பு குடிகொண்டிருக்கிறது. இதுவே அவர்கள் ஒரு பதவிக்கு வரும்போது தங்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஆண்களைச் சில நேரம் மரியாதை குறைவாக நடத்தச் சொல்கிறது என நினைக்கிறேன். பெண்களை இந்தச் சமூகம் நடத்தும் விதமும் கிட்டத்தட்ட அவர்களுக்குள் இத்தகைய எதிர்மறையான அதிகார போதையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
தேவையற்ற அச்சம்: ஓர் ஆணை நாம் திருமணத்தின் மூலமாக நமது குடும்பத்தில் இருந்து இழந்துவிடுவோம் என்கிற அச்சம்தான் பல பெண்களை இதுபோன்ற குடும்பச் சண்டைகளை ஏற்படுத்தும் கருவிகளாக மாற்றுகிறது. ஏனென்றால் ஒரு பெண் அந்தக் குடும்பத்து ஆணை நம்பி இருக்கிறாள். ஆயிரம் காலம் மாறி வந்தபோதும் இன்னும் மனதளவில் ஓர் ஆண் தன் வாழ்க்கையில் இருப்பதே. அவளுக்குப் பாதுகாப்பு என்று ஒரு பெண் நினைக்கிறாள். அதேபோல, தான் திருமணமாகிச் சென்ற பிறகும் தன்னுடைய சகோதரன் தனக்கு எப்போதும் மறைமுகமான பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவனுடைய மனைவியுடன் அவன் இணக்கமாக இருப்பது அந்தப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக்கூடும் என்றும் கலவரப்படுகிறாள் பெண். அந்தக் கலவரம் குடும்பத்தில் எதிரொலிக்கிறது.
தன்னை நம்பும், தன் மீது பெரும் காதல் கொண்ட பெண்கள் பெரும்பாலும் இந்தக் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. ஏனென்றால் உறவுகளை இழப்பதும், உறவுகளுக்கு நடுவில் ஒரு காலக்கட்டத்தில் சில சுவர்கள் எழுவதும் இயல்பே என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் அவர்களைப் போல் எப்போது மாறுமோ?
(உரையாடுவோம்)