பெண் இன்று

இறப்புக்குப் பிறகும் போராட்டம்

எஸ்.வி.வேணுகோபாலன்

சற்று தொலைவான இடத்தில் வேலையிலில் இருக்கும் மகளை அன்று (செப்டம்பர் 18, 2022) எத்தனை முறை அழைத்தும் தொடர்புகொள்ள இயலவில்லை என்று பதறிப்போனார் பிரேந்திர சிங். தன் மகள் அங்கிதா பண்டாரி பணிபுரிந்த ரெசார்ட் ஓட்டலுக்குப் போனார். மகள் அங்கு இல்லை. அந்தப் பரிதாபத்திற்குரிய தந்தை மூன்று காவல் நிலையங்களுக்கு அலைந்தார். தட்டிக் கழித்து விரட்டி அனுப்பினர். ஆறு நாள் கழித்து, செப்டம்பர் 24, 2022 அன்று ஊருக்குப் புறத்தே ஓடும் சில்லா கால்வாயில் இருந்து சடலமாகத்தான் கிடைத்தார் அங்கிதா. பேரிடர் நிவாரணப் படையினர்தான் சடலத்தை மீட்டனர்.

அங்கிதா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்துக் கொல்லப் பட்டார் என்பதை கோத்வார் அமர்வு நீதிமன்றம் கடந்த மே 29ஆம் தேதி உறுதிசெய்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அவரது கூட்டாளிகளான மேலாளர் சௌரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், மொத்தமாக 4 லட்சம் ரூபாய் அபராதம் இவர்களிடமிருந்து வசூலித்து, அங்கிதாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று காத்திருந்து பெறப்பட்ட தீர்ப்பு அல்ல, இது! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. வழக்குத் தொடராதீர்கள் என்று குடும்பத்தாருக்கு வலுவான அழுத்தம் தரப்பட்டது. உடல்நலம் சரியில்லை என்று அங்கிதாவின் தாயை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மகளின் சடலத்தை அவர் பார்க்கவிடாமல் எரித்து முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம்.

ஏன் இவ்வளவு குறுக்கீடுகள்? ரெசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகன். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். அது மட்டுமல்ல; அவருடைய சகோதரர் அங்கித் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில பிற்படுத்தப்பட்டோர் வாரியத் தலைவர். பிரச்சினை தெரியவந்ததும், யமகேஷ்வர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரேணு பிஷ்ட், மாவட்ட நிர்வாகத்தின் துணையோடு ரிசார்ட்டில் அங்கிதா தங்கி இருந்த அறையை இடித்துத் தள்ளுமாறு செய்தார். கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்தும் ஏற்பட்டது. ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய தீபக், நீதிமன்றத்தில் துணிந்து வந்து சாட்சி சொன்னது முக்கியமானது.

காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்று பிரேந்திர சிங் குடும்பத்தார் புகார் எழுப்ப, நாடு தழுவிய அளவில் செய்தி பரவியது. எனவே சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. விஷயங்கள் அம்பலமாகவே, வினோத் ஆர்யாவைத் தற்காலிக நீக்கம் செய்தது பாஜக. சட்டமன்ற உறுப்பினர் ரேணு கட்சியில் தொடரவே செய்கிறார், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், நீதி கேட்டுக் குரல் கொடுத்த பத்திரிகையாளர் அஷுதோஷ் நேகி மீது வேறு புகார்கள் ஜோடிக்கப்பட்டு 2023 மார்ச் 5இல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது காவல் துறை. பின்னர் பிணையில் அவர் வெளியே வந்தாலும், வழக்குகள் நீடிக்கின்றன.

ரெசார்ட்டில் தங்கும் விஐபி வாடிக்கையாளர்களிடம் ‘பக்குவமாக’ நடந்துகொள்ள வேண்டும் என்று ரிசார்ட் உரிமையாளர் அங்கிதாவை வற்புறுத்தியிருக்கிறார். அதை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததாலும், இது குறித்து வெளியே அம்பலப்படுத்தப் போவதாகச் சொன்னதாலும் கூட்டாளிகளோடு சேர்ந்து அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கிப் படுகொலையும் செய்துவிட்டிருக்கின்றனர். பிளஸ் 2 முடித்துவிட்டு மேற்கல்வி ஒன்றிற்குப் பணம் செலுத்தியிருந்த அங்கிதா, தந்தைக்கு வேலை பறிபோய் விட்ட கஷ்ட நேரத்தில் படிப்பை உதறித் தள்ளிவிட்டு வரவேற்பாளர் வேலைக்கு வந்திருந்தார். தனது வாழ்க்கைக் கனவுகள் எல்லாம் கலைந்து போனவர், இப்போது இல்லாமலே போய்விட்டார்.

அங்கிதாவின் திறன்பேசியில் வாட்ஸ் அப் உரையாடல்கள், ரிசார்ட் பணியாளர்களிடம் அங்கிதா பேசியது உள்ளிட்டவை குற்றவாளிகள் தப்பிக்க முடியாத வலுவான சாட்சியங்களாக நின்று பேசின. வாட்ஸ் அப்பில் அங்கிதா வலியோடு, ஆனால் துணிவோடு இப்படிப் பதிவு செய்திருக்கிறார்: ‘நான் ஏழைப் பெண்தான்... ஆனால், பத்தாயிரம் ரூபாய்க்காக என்னை விற்று விடுவேனா, என்ன?’ எளிய பின்னணி கொண்ட பெண்கள் இறந்த பிறகும் போராட வேண்டியிருக்கிறது என்பதைத்தான் அங்கிதாவின் இந்த வழக்கும் உணர்த்துகிறது.

SCROLL FOR NEXT