சிறு வயதில் வார இதழ்களில் வரும் படக் கதைகளை மட்டும்தான் ஆர்வமாகப் படிப்பேன். என் இரண்டாவது அண்ணா நிறைய கதைப் புத்தகங்கள் படிப்பார். வார இதழ்களில் வரும் தொடர்கதைப் பக்கங்களைக் கிழித்து, அழகாக அடுக்கி அவரே ஊசி, நூல் கொண்டு தைத்துவிடுவார். தடிமனான அட்டை போட்டு, மேலே வண்ணப் பேனாக்களால் தொடர்கதையின் பெயர் எழுதி அருமையாக வைத்து இருப்பார். நான் பள்ளியில் படித்தபோது இந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன். ‘படித்துத்தான் பார்ப்போமே...’ என்று ஒரு கோடை விடுமுறை நாளில் எழுத்தாளர் மணியனின் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ நாவலைப் படித்தேன். அதுதான் நான் முதலில் படித்த நாவல். மிகவும் சுவாரசியமாக இருந்தது.
பிறகு ‘தேக்கடி ராஜா’ என்கிற சிறுவர் நாவலைப் படித்தேன். ஒரு சிறுவனும் யானையும் எப்படி நட்புடன் பழகி வாழ்கிறார்கள் என்பதை ஆசிரியர் அற்புதமாக எழுதியிருந்தார். சுவாரசியமாக எழுதுகிறாரே என வியந்துபோனேன். அந்தக் கதைக்கு ஓவியர் வரைந்த படங்களும் அருமையாக இருந்தன.
பிறகு வேறு ஏதாவது புத்தகங்கள் இருந்தால் வாங்கிக் கொடுக்கும்படி அண்ணனிடம் கேட்டேன். சில நாள்கள் கழித்து அவர் ஒரு புத்தகம் வாங்கி வந்து என்னிடம் கொடுத்தார். சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகம்தான் அது! அதை எத்தனை தடவை படித்துப் படித்து வயிறு வலிக்கச் சிரித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. நகைச்சுவையுடன் கற்பனையிலேயே ஒரு கல்யாணம் நடத்தியிருப்பார் சாவி.
1980இல் எனக்குத் திருமணம் நடந்தது. கணவர் வேலை பார்த்தது குஜராத் மாநிலத்தில். மொழி, மக்கள், கலாச்சாரம் எல்லாமே புதிது. கணவர் காலையில் வேலைக்குப் போனால் வீடு திரும்ப இரவு ஆகிவிடும் என்பதால் மதுரையில் இருந்து குஜராத் செல்லும்போதே சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா, அனுராதா ரமணன் ஆகியோரது நாவல்களை அண்ணா வாங்கிக் கொடுத்துவிட்டார்.
அங்கு இருந்த வரைக்கும் புத்தகங்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பகல் நேரத்தில் தனிமை மறந்து மனதுக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தந்தவை புத்தகங்கள்தான். நாகப்பட்டினத்தில் வசித்தபோது, ‘லெண்டிங் லைப்ரரி’யில் வார, மாத இதழ்கள் வாங்கிப் படித்தேன். இப்போது வீட்டுக்கு அருகில் உள்ள கடையிலும் இணையத்திலும் படித்து மகிழ்கிறேன். - ச.ஜெயலட்சுமி, கொரட்டூர், சென்னை.