பெண் இன்று

உற்சாகம் குறையாத திருப்பூர் வாசகியர் | மகளிர் திருவிழா

இரா.கார்த்திகேயன்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பெண் இன்று சார்பில் மே 25 அன்று திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. அறக்கட்டளை பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) நடைபெற்ற மகளிர் திருவிழாவைக் கோடை வெப்பத்தைத் தணிக்கும் குளிர் மழையாகக் கொண்டாடித் தீர்த்தனர் திருப்பூர் வாசகியர்!

திருப்பூர் மட்டுமன்றி கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாசகியரும் உரிமையோடு குடும்பவிழா போன்று பங்கேற்றனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் கே.ஆர். ஜெயந்தி பேசும்போது, “பதின் பருவப் பெண்களே ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு இருக்கும் என்பதால், இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம். கீரை, வெல்லம், பேரீச்சை உள்ளிட்டவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அரசு மருத்துவ மனைகள், துணை சுகாதார நிலையங்களில் கருப்பைவாய்ப் புற்று நோய், மார்பகப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறியக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. இதைப் பெண்கள் பயன்
படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் என்.பூங்கொடி பேசும் போது, “தொலைக்காட்சி சீரியல்களில் வருவது போன்று, பெண்ணுக்குப் பெண் எதிரி அல்ல. குழந்தைகளுக்குப் பாலினச் சமத்துவத்தைத் தாய்மார்கள் சொல்லித்தர வேண்டும். பெண்களுக்குச் சுதந்திரமான சூழலை அனைத்து இடங்களிலும் ஆண்கள் உருவாக்கித்தர வேண்டும். வாழ்வில் பெண்களுக்கு மிகப்பெரிய சொத்து கல்விதான். தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் சட்டங்கள் குறித்துப் பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். பாரதியார், பெரியார், அண்ணா எனப் பலரும் பெண்கள் சுதந்திரத்துக்குக் கடந்த காலங்களில் பாடுபட்டுள்ளதை மறக்கக் கூடாது” என்றார்.

கலகலப்பான கலைநிகழ்ச்சிகள்: திருப்பூர் மகளிர் திருவிழாவில் வாசகியரை உற்சாகப்படுத்தும் வகையில் கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி மோகனசுந்தரி நாட்டுப்புற நடனம், பரதம், சிலம்பாட்டம், சிலா ஆட்டம் எனப் பல்வேறு நடனங்களை ஆடினார். சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், போதை விழிப்புணர்வுப் பாடலுக்கு நடனம் ஆடினர். உஜாலா ‘லிக்விட் டிடர்ஜென்ட்’ நிறுவனத்தின் ‘வுமன் ஆப் சப்ஸ்டன்ஸ்’ விருதும் பரிசுத் தொகையும் பசியால் வாடும் பச்சிளம் குழந்தைகளுக்காகத் தாய்ப்பால் தான விழிப்புணர்வை மேற்கொண்டுவரும் விசித்ரா செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டது.

அனைவருக்கும் பரிசு: கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் உள்படப் பல்வேறு போட்டிகளில் வாசகியர் உற்சாகமாகப் பங்கேற்றனர். வென்றவர்களுக்கு மட்டுமன்றிப் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு வாசகியர் பம்பர் பரிசுகளை வென்றனர். சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா விழாவைத் தொகுத்து வழங்கினார்.

பெண்ணின் பெருமை: அறுபது வயதைக் கடந்த வாசகியருக்கான ‘ஒயில் நடை’ போட்டியில் பங்கேற்று இசைக்கு ஏற்ப நடந்த வாசகியர் அரங்கை ஆர்ப்பரிக்க வைத்தனர். தாங்கள் பெண்ணாகப் பிறந்ததன் பெருமையைப் போட்டியாளர்கள் பேசப் பேச வாசகியர் பலரும் மகிழ்ச்சியிலும் உணர்வு மிகுதியிலும் கைதட்டி உற்சாகம் அளித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளும் மதிய உணவும் வழங்கப்பட்டன.

உஜாலா நிறுவனத்துடன் இணைந்து, ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. பிரெஸ்டா வுமன்ஸ் வியர், பிஎஸ்ஆர் சில்க்ஸ் சாரீஸ், பொன்மணி வெட்கிரைண்டர், லலிதா ஜுவல்லரி, ஒபே தி ரூல்ஸ் யூடியூப் சேனல், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், ஹெல்த் பாஸ்கெட், சத்யா ஏஜென்சீஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி மற்றும் வென்யூ பார்ட்னர் ஏ.வி.பி.அறக்கட்டளை பப்ளிக் மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்இ) உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

SCROLL FOR NEXT