பசியால் வாடும் பச்சிளம் குழந்தைகளின் பசிப் பிணி போக்குபவர் விசித்ரா செந்தில்குமார். பிபிஎம் பட்டதாரி. திருப்பூரைச் சேர்ந்தவர். தாய்ப்பால் தான விழிப்புணர்வைத் தனிநபராகத் தொடங்கி இன்றைக்குத் தாய், தந்தை, கணவர், மகன், சகோதரி, நண்பர்கள் ஆகியோரையும் இணைத்துக்கொண்டு அதை ஓர் இயக்கமாக மாற்றியிருக்கிறார்.
கண் தானம், ரத்த தானம், உடல் தானம் போன்றவை குறித்துச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்துவரும் நிலையில், தாய்ப்பால் கிடைக்காமல் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவும் தாய்ப்பால் தானம் குறித்துப் பரவலான விழிப்புணர்வு இல்லை. அதை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் விசித்ரா.
“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியைத் தொடங்கினார்கள். அப்போது நான் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவராக இருந்தேன். தாய்ப்பால் வங்கிக்குத் தேவையான கருவிகளை வாங்கித்தரவே அங்கே சென்றிருந்தேன். குழந்தைகள் வார்டில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
மிகக் குறைவான எடையில் அதாவது 600, 700 கிராமில்கூடக் குழந்தைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அவர்களுக்குத் தாய்ப்பால்தான் முக்கிய உணவு. தாய்ப்பால் தானமாகக் கிடைத்தால் நிறைய குழந்தைகள் பயன்பெறுவார்கள் என அங்கிருந்த செவிலியர்கள் சொன்னார்கள். அதுவரை தாய்ப்பால் வங்கி பற்றி எனக்குத் தெரியாது. செவிலியர்கள் சொன்னதைத் தொடர்ந்து தாய்ப்பாலைத் தானமாகப் பெற்றுத்தரலாம் என்று தோன்றியது. பால் புகட்டும் நிலையில் இருந்த தாய்மார்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ஆரம்பத்தில் சிலர் தயங்கினார்கள். பலர் மனமுவந்து உதவினர். மகப்பேறு முடிந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள், நோய்வாய்ப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கும் இந்தத் தாய்ப்பால் பசியாற்றியதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். அதேபோல் அங்கிருந்த கைவிடப்பட்ட குழந்தை களும் பயன்பெறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்பு 2 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு வழங்கினோம். இதைத் தொடர்ந்துதான், தாய்ப்பால் தான விழிப்புணர்வைப் பெண்களிடம் எடுத்துச்செல்வதுடன், அவர்களிடம் இருந்து பெறும் தாய்ப்பாலை வங்கிக்குத் தொடர்ந்து வழங்கிவருகிறேன்” என்று சொல்லும் விசித்ரா, ஆரம்பத்தில் பல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
“பாலூட்டும் தாய்மார்களைக் கண்டறிவது, தாய்ப்பால் தானத்துக்கு அவர்களிடம் ஒப்புதல் பெறுவது எனப் பல்வேறு சிரமங்கள் இருந்தன. ஆனால், நாள்தோறும் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தைகளின் நிலையை நினைத்தபோது, அந்தக் குழந்தைகளுக்காகச் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே இன்றுவரை உந்துவிசையாக என்னை இயக்குகிறது. வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூகவலை தளங்களில் பலரும் தொடர்புகொள்ளத் தொடங்கியபிறகு, இன்றைக்கு இந்தப் பணி சற்று எளிதாகி உள்ளது.
குழந்தை பெற்றெடுத்த நிலையில் பல பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் பலவீனமாக இருக்கும் சூழலில், தாய்ப்பால் தானம் தருவதே பெரும் விஷயம். இதனால், தாய்ப்பால் தானம் தருவதற்குத் தேவையான பிரத்யேக கருவிகளை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். இதற்கான செலவை மாதந்தோறும் நானே ஏற்றுக்கொள்கிறேன். பெண்கள் இதன்மூலம் தாய்ப்பால் எடுத்து எங்களிடம் தருகிறார்கள். குளிர்சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் தாய்மார்கள் தரும் பாலை 4 மணிநேரத்துக்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்க ஏற்பாடு செய்துவிடுவேன். அதேபோல் மின்தடை நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்து வைக்கவும் சொல்லிவிடுவேன். பிளாஸ்டிக் பவுச்களில் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட தாய்ப்பாலை மொத்தமாக மாதம் ஒருமுறை தாய்ப்பால் வங்கிக்குத் தருகிறோம்.
திருப்பூர் தாய்ப்பால் வங்கியில் தாய்ப்பால் தட்டுப்பாடு எனத் தொடர்புகொண்டால், கையில் இருக்கும் தாய்ப்பாலை உடனடியாகக் கொண்டு போய் கொடுத்துவிடுவேன். சில நேரம் தேவைக்கு அதிகமாகப் பால் இருக்கும்போது திருப்பூர் மட்டுமன்றி திருச்சி, மணப்பாறை, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்குகிறோம். தானமாகப் பெறும் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்கு கிறேன். அரசு மருத்துவமனையிலும் தூய்மை, பாதுகாப்பு, நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, உறைநிலையில் இருக்கும் தாய்ப்பால் இயல்பான வெப்பநிலைக்கு மாற்றிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தானம் தரும் பெண்களின் உடல்நிலை மருத்துவ அறிக்கை உள்ளிட்டவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தானமாக தந்த தாய்ப்பால், ஏராளமான பச்சிளம் குழந்தைகளின் பசியைப் போக்கியிருப்பது, மனதுக்குப் பெரும் ஆறுதல்!
கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, பெங்களூரு எனப் பல்வேறு இடங்களுக்குச் சென்றும் தாய்ப்பாலைப் பெற்றுள்ளோம். நாம் நேரில் செல்லும்போது, தானம் தரும் தாய்மார்களுக்கும் ஒரு பெரும் நம்பிக்கை கிடைக்கிறது. ‘உதவி என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், தாய்ப்பால் தானம் என்பது, எல்லாக் காலத்திலும் தர முடியாத ஒன்று. குழந்தைகளுக்குப் பால் புகட்டும் நிலையில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமே, அதிகபட்சம் ஓராண்டுக்குள் தரக்கூடிய ஒருவிஷயம்’ என்பதைத்தான் தாய்மார்களுக்குத் தொடர்ந்து சொல்லி புரியவைக்கிறோம்” என்கிறார் விசித்ரா.
“தாய்ப்பால் இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தைகளுக்கு பவுடர் பால் தருவதைச் சிலர் மாற்று ஏற்பாடாகச் செய்யும் நிலை இருக்கிறது. தற்போது தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பதால், இந்த நிலை மாறிவருகிறது. திருப்பூர் மட்டுமன்றி சேலம், திருச்சி என நாங்கள் பால் வழங்கும் அனைத்து இடங்களிலும் பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுகிறது. தானம் தரும் தாய்மார்கள் இல்லையென்றால் இதைச் சாதித்திருக்க முடியாது. குழந்தைகளின் பசியாற்றிய புண்ணியம் அனைத்தும் அவர்களுக்கே சென்றுசேர வேண்டும்” என்று அழுத்திச் சொல்கிறார் விசித்ரா.