பெண் இன்று

பெண் என்னும் உணர்வற்ற பொம்மை? | உரையாடும் மழைத்துளி 33

தமயந்தி

சென்ற வாரம் பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றியும் அதன் தீர்ப்பைப் பற்றியும் எழுதியதற்கு ஏராளமான மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ‘பெண்கள் இயல்பாக ஓர் ஆணைச் சந்திக்க இயலாத சூழ்நிலை இருக்கிறது. அதுதான் இத்தகைய குற்றங்களுக்கான முதல் புள்ளி’ என்று நான் எழுதியதைப் பெண்கள் பலரும் ஆமோதித்து அடிக்கோடிட்டு எழுதி இருந்தார்கள்.

பொதுவாகவே ஆண்கள் அவர் களுக்கான இடத்தைச் சமூகரீதியாக அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பெண்களுக்கான வெளியைப் பெண்களே எடுத்துக்கொள்ளவோ உருவாக்கவோ இந்தச் சமூகம் விடுவதில்லை. சின்ன சின்ன விஷயங் களில்கூடத் தங்கள் ஆசைப்படி வாழ முடியாத துர்பாக்கியமான நிலைக்குத்தான் பெரும்பாலான பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு தோழிக்குப் புளிக்குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடைய கணவருக்கோ புளிக்குழம்பு என்றால் அலர்ஜி. எனவே, அவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய தோழிகள் யாராவது புளிக்குழம்பு வைத்தால் அதைக் கொண்டுவந்து கொடுக்க முடியுமா என்று அவர் ரகசியமாகத் தயங்கித் தயங்கிக் கேட்பார். முதலில் எல்லாம் எனக்கு அவர் ஏன் இப்படிக் கேட்கிறார் என்பது பிடிபடவே இல்லை.

சின்ன சின்ன ஆசைகள்: ஒரு நாள் நாங்கள் அனைவரும் டிரெக்கிங் போகலாம் என்று தோழிகள் அனைவரையும் அலைபேசியில் அழைத்துச் சொன்னபோது, அவரது கண்கள் விரிவதை என்னால் உணர முடிந்தது. “என்னாச்சு” என்று கேட்டேன். “எனக்கு மலைன்னா ரொம்பப் பிடிக்கும். மலையேறுவது எப்படி இருக்கும்னு நான் பார்க்காமலே செத்துப் போயிருவேனோன்னு பயமா இருக்கு” என்றார். குரூப்பில் மற்ற அனைவரும் அலைபேசி அழைப்பைத் துண்டித்த பிறகு அவரிடம் புளிக்குழம்பு ரகசியத்தைக் கேட்டேன். “எனக்குப் புளிக்குழம்புன்னா ரொம்பப் பிடிக்கும். அதுல நல்லெண்ணெய் விட்டு அப்பளத்தை மேல ஒடச்சுப் போட்டு சாப்பிடுற ருசி இருக்கே. ப்பா... புளிக்குழம்போட புளிப்பும் நல்லெண்ணெய் வாசனையும் லேசான கசப்பும் அப்பளத்தோட மொறுமொறுப்பும் சேரும்போது சொர்க்கமே என் வாயில வந்து உட்காரும். ஆனா, என் புருஷனுக்குப் பிடிக்காதே. அதே மாதிரி எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும். மழை நேரத்துல சூடா புளிக்குழம்பு சாப்பிடுறதுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்பல்லாம் மழை பெஞ்சா துணி எடுக்கணும்னு மட்டும்தான் தோணுது” என்று கண்களில் நீர் மின்னச் சொன்னார்.

எனக்கு அவரது சின்ன சின்ன ஆசைகள் நன்றாகவே புரிந்தன. என்றாலும் அதை அவர் ஏதோ ஒரு சமூக கட்டுக்கோப்பினால் நிறைவேற்ற முடியாமல் தத்தளிப்பதுபோல் இருந்தது. முதலில் அவர்தான் தன்னைச் சுற்றி ஒரு விலங்கு போட்டிருக்கிறார் என்று தோன்றியது. அது உண்மையும்கூட. ஏனெனில், அவர் அப்படி ஒரு சிறையை விலங்குபோல மாட்டிக் கொண்டிருக்காவிட்டால் இந்தச் சமூகமும் அவருடைய குடும்பமும் அவரை மதிக்காது, தனிமைப்படுத்தும்.

தனிமைப்படுத்துதல் எனும் கொடுமை: ஒருவரைத் தனிமைப்படுத்துவது என்பது மிகக் கொடூரமான செயல். அது கொலைக்கு நிகரானது. ஆனால், இந்தச் சமூகம் தன்னுடைய குரலை வெளிக்காட்டும் பெண்களுக்கு, அநீதிகளுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் பெண்களுக்குத் தனிமைப்படுத்தலையே மிக முக்கியமான பரிசாகத் திருப்பி அளிக்கிறது. அதைப் பெரும்பாலும் எந்தப் பெண்ணும் சமாளிக்கத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் தங்களுடைய ஆசைகள் எல்லாவற்றையும் மனதுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள்.

அந்தத் தோழி எங்களுடன் டிரெக்கிங் வரவில்லை. அவளுடைய கணவர் அந்த நேரம் வேலை காரணமாகப் பயணத்தில் இருந்ததால் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அப்போது இருந்ததாகக் காரணம் சொன்னாள். அவளுடைய மாமனார், மாமியார் இருவரும் அவளுடன் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்கள் என்று ஒரு முறை சொல்லியிருந்தாள். பல குடும்பங்களில் வாழவந்த மருமகள், வேலை செய்யும் ஒரு பெண்ணாக மட்டுமே தெரிகிறாள். சில இடங்களில் மருமகளுக்கு மாமியார், மாமனார் வேலை செய்யும் ஆள்களாக இருக்கின்றனர்.

இந்தச் சமூகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு குடும்பத்துக்குள் நடத்தப்படும் அநீதிகளைக் கண்டுகொள்ளாமல், உரையாடாமல் போவதுதான். குடும்பம் என்கிற அமைப்பு ஒரு பல்கலைக்கழகம் என்று காலம் காலமாக இருக்கும் வழக்காடல்களை முன்வைத்து நாம் போலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதில் பெரிதும் தொலைந்துபோவது பெண்களே. பெண்களின் ஆசைகளைப் பற்றி உரையாடக்கூடிய ஒரு குடும்பமே பல்வேறு விதமாகப் பெருகி ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும்.

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT