ஆறு வருடங்களாக ஒரு பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பது என்பதே குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவியின் தீர்ப்பைக் கேட்கும் வரைக்கும் அவர்கள் அனைவருக்குமே நெஞ்சம் பதைபதைத்திருக்கும். பொள்ளாச்சி வீடியோவில் ஒலித்த, ‘அண்ணே என்ன விட்ருங்கண்ணே’ என்கிற அந்தக் குரல் நீண்ட காலமாக நம் சமூகத்தின் காதுகளில் ஒலித்தபடிதான் இருந்திருக்கும். அந்த வீடியோவைப் பார்க்க நேர்கையில் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து ஒரு நிமிடம் கதி கலங்கி இருப்போம்.
பொதுவாகவே காதல் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் இயல்பாகப் பழகுவதைக் கூடச் சிலர் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால் அடையாளப்படுத்துவதால், ரகசியமாக யாருக்கும் தெரியாமல்தான் ஓர் ஆணை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஒரு பெண்ணுக்கு நேர்கிறது. ஆனால், அப்படிப்பட்ட ஆண்களில் சிலர் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பெண்ணை எவ்வளவு தூரத்துக்குத் துன்புறுத்தி உபயோகித்துக்கொள்கிறான் என்பதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவமும் உணர்த்துகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தில் முதல் புகாரைக் கொடுத்தவர் 19 வயது நிரம்பிய இளம்பெண் என்று தெரியவந்தபோது மனம் பதறியது. அந்த வயதில் அந்தப் பெண் ஒரு காவல் நிலையத்தில் போய் புகார் கொடுப்பதற்கு, குடும்பத்தில் அவர் எவ்வளவு விவாதங்களை, கோபங்களை, வலிகளை எதிர்கொண்டு இருப்பார் என்பதுதான் என் முதல் சிந்தனையாக இருந்தது. இதைச் சட்டபூர்வமான ஒரு விஷயமாகப் பார்ப்பதைக் காட்டிலும் 19 வயதில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணின் எதிர் பாலினம் சார்ந்த ஈர்ப்பை இந்தச் சமூகம் எப்படிப் புரிந்துகொண்டுள்ளது என்னும் நோக்கிலேயே இந்த வழக்கை நான் பார்க்க விரும்புகிறேன்.
குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் பெரிய பொருளாதாரப் பின்புலம் இல்லை என்றாலும் அதில் மூன்று பேர் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது. அதில் ஒருவர் அந்த அரசியல் கட்சியிலிருந்து அவரை நீக்கிய அடுத்த நாளே அவர் கைது செய்யப்படுகிறார் என்பதையும் அறிகிறோம். இதில் சட்டபூர்வமான தீர்வு கிடைக்க ஊடகங்களும் உதவியிருக்கின்றன.
ஒரு காவல் நிலையத்தில் இது போன்ற பாலியல் புகாரை உணர்வுபூர்வமாக உணர்ந்து அதற்கான சி.எஸ்.ஆர். கொடுக்கப் படுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அந்தச் சூழலில் நின்று செயல்படும்போதுதான் நம்மில் பலருக்கும் புரியும். புகார் கொடுத்த அந்தப் பெண் இந்தத் தீர்ப்பு வந்த நிமிடம் ஒருவேளை தனியாக உடைந்து அழுதிருக்கலாம். ஒரு நதி கடலில் கலந்த பின் அதன் திசையைப் பற்றிய பாரம் நீங்கிய உணர்வு ஏற்பட்டிருக்கலாம். புகார் கொடுத்த அந்தப் பெண்ணின் சகோதரர்களை இந்த ஒன்பது பேரும் தாக்கியதாக ஓர் உப வழக்கும் இதில் இணைந்திருக்கிறது. அதையும் மீறி அந்தக் குடும்பம் அந்தப் பெண்ணுடன் ஆத்மரீதியாக மிகப்பெரிய பக்கபலமாக நின்றிருக்கிறது என்பது மிகப் பெரிய விஷயம். அவர்களின் செயல் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியது.
ஆரம்பத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட அத்தனை பெண் களையும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கச் செய்ததோடு ஒரு சாட்சிகூடப் பிறழ்சாட்சியாக மாறாத வகையில் சிபிஐ செயல்பட்டது. இந்த வழக்கில் நுணுக்கமான ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேகரித்து சிறப்பாக சிபிஐ செயல்பட்டதால்தான் குற்றவாளிகள் அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர முடிந்தது. இந்த வழக்குக்காக மாதர் சங்கங்கள் பல போராடியதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இதே போல 13 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தப்பிக்க வைக்கப்பட்டார். அரசுத் தரப்பு மிகப் பலவீனமாக இருந்ததால் நடந்த விஷயம் அது. ஆனால், பொள்ளாச்சி வழக்கில் அது போல நடக்காமல் பாதிக்கப் பட்டவர்களுக்காக மிக நேர்மையாக வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இதில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சிகளில் ஒருவர்கூடப் பிறழ்சாட்சியம் அளிக்கவில்லை என்பது சமூகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
மதுரையில் உஷாராணி என்கிற பெண்ணுக்கு நடந்த அநீதிக்கு முதல் முறையாக இந்தியாவில் ஐபிசி 100 உபயோகப்படுத்தியதை நீதிபதி சந்துரு எந்த அளவுக்கு ஆழமாக ஆதரித்துத் தீர்ப்பு வழங்கினாரோ அதுபோல பொள்ளாச்சி வழக்கில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதி நந்தினிதேவியின் உறுதி பாராட்டுக்குரியது.
பொருளாதார ரீதியில் மேம்பட்டு நிற்கிற பெரும்பாலான குடும்பங்களிலும் மத்திய தரக் குடும்பங்களிலும்கூடத் தங்கள் பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியை மறைக்கவே முற்படுவர். அப்படி மறைப்பதன் முக்கியமான பிரச்சினை அந்தக் குற்றவாளிகள் தைரியமாக நம்மோடு ஒருவராக இந்தச் சமூகத்தில் வந்து கொண்டிருப் பார்கள். பொள்ளாச்சியில் தகர்க்கப்பட்ட அந்தக் குற்றச் சங்கிலி தமிழ்நாடு எங்கும் பரவ வேண்டும். பெண்களின் குற்றசாட்டுகளை யாரும் கிண்டலாக எடுத்துக்கொள்ளாமல் அதற்கான உரிய இடத்தைக் கொடுத்தே ஆக வேண்டும். அதற்கு இந்த பொள்ளாச்சி தீர்ப்பு மிகப்பெரிய முன்னுதாரணம்.
(உரையாடுவோம்)