எழுபதுகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு மாமியின் வாழ்க்கை என்னை வெகுவாகக் கவர்ந்தது. தென்திருப்பேரை பார்வதி ஸ்டோர்ஸ் அருகில் வசிக்கும் கிருஷ்ணம்மாள் மாமி என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். புன்முறுவல் பூத்த முகத்துடன் பணிவும் தன்னடக்கமும் ஒருங்கே கொண்டிருக்கும் மாமியின் ஒவ்வொரு செயலும் என்னை வியக்க வைக்கத் தவறியதில்லை.
தினமும் காலையில் சிறிது நேரம் கோயிலுக்குச் சென்று தன்னால் இயன்றவரை பூமாலை தொடுத்துத் தருகிறார். பின்னர் வீடு திரும்பியதும் முறுக்கு, தட்டை, ரிப்பன் பக்கோடா போன்ற பலகாரங்களைச் செய்வது, கறிவேப்பிலை பொடி, எலுமிச்சைப் பொடி போன்ற பொடி வகைகளைத் தயார் செய்வது, பிரசவித்த பெண்களுக்கும் பருவமடைந்த பெண்களுக்கும் ஆரோக்கியமான உணவு வகைகளைச் செய்துகொடுப்பது என்று பலப் பல வேலைகளைச் செய்கிறார். இவற்றோடு நிறுத்திக்கொள்ளாமல் குளியல் பொடி, ஆவாரம்பூ டீத்தூள் தயாரிப்பது என எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்.
தேவையில்லாத அரட்டைகளில் ஈடுபடுவதில்லை. தொலைக்காட்சி நெடுந்தொடர்களைப் பார்ப்பது, கைபேசியில் பொழுதைக் கழிப்பது போன்றவற்றில் நேரத்தை வீணடிக்காமல் பள்ளிக் குழந்தைகளுக்குப் பக்திப் பாடல்களை அவற்றின் விளக்கத்தோடு கற்றுத்தருகிறார். உடல்ரீதியாக எவ்வளவோ வேதனைகளைக் கடந்து வந்தபோதும், புன்முறுவல் மாறாத அவரது முகத்தைப் பார்க்கும்போது எழுபது வயதைக் கடந்தவர் என்று நம்மால் சொல்ல முடியாது.
அவரது இந்தச் சுறுசுறுப்பையும் தன்னடக்கத்தையும் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு அவருக்கே உரிய பாணியில், “அஸ்தினாபுரத்தில் உள்ள எல்லாருமே ‘இது என் வீடு கிருஷ்ணா! உள்ளே வா’ என்று கூறியபோது விதுரர் மட்டும், ‘இது உன் வீடு கிருஷ்ணா! உள்ளே வா’ என்று வரவேற்றார். அத்தகைய விதுரரே தன்னடக்கத்துடன் இருக்கும்போது நான் எல்லாம் ஒரு பொருட்டா?” என்று துளிகூடக் கர்வம் இல்லாமல் அவர் கூறியவிதம் என்னை ஈர்த்தது.
‘என்ன வாழ்க்கை இது.. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ என்றெல்லாம் சலித்துக்கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன். சிறு சிறு பின்னடைவுகளுக்கே துவண்டு போய்விட்டால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது. இளமைப் பருவத்திலேயே நாம் சோர்ந்துபோகிறோம். ஆனால், முதுமையிலும் தன்னால் இயன்ற வரை பிறருக்கு உதவிசெய்து எளிமையாக வாழ்ந்துவரும் கிருஷ்ணம்மாள் மாமியின் வாழ்க்கையை நாம் ஒரு முன்னுதாரணமாகக் கொள்வோம் தோழிகளே!- ஏ. சாந்தி பிரபு, தூத்துக்குடி.
நீங்களும் சொல்லுங்கள்: தோழிகளே, உங்களை வியக்கவைத்த அல்லது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய நபர் குறித்து நீங்களும் எழுதி அனுப்புங்கள். அவர்களது வாழ்க்கை அனுபவம் பலருக்கும் பாடமாக அமையும் அல்லவா!
முகவரி: பெண் இன்று, இந்து தமிழ் திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in