எனக்கு 68 வயதாகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த நாள் முதல் இன்று வரை புத்தகம் வாசிப்பது தொடர்கிறது. என் அப்பா வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு இருந்த மனமகிழ் மன்றத்துக்கு வரும் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளையும் வீட்டுக்குக் கொண்டுவருவார்.
ஆரம்பத்தில் படிக்கத் தெரியாதபோது புத்தகத்தில் உள்ள படங்களை மட்டும் பார்ப்பேன். பிறகு படிக்கத் தெரிந்துகொண்ட பிறகு சின்ன சின்ன ஜோக்குகள் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு சிறுகதைகள், தொடர்கதைகளைப் படித்தேன். இப்படிப் படித்துப் பழக்கம் ஆன பிறகு, எங்கள் கிராமத்து நூலகத்தில் இருந்து என் தம்பியைப் புத்தகங்கள் எடுத்துவரச் சொல்லிப் படித்தேன். ஏனென்றால், வயதுக்கு வந்த பெண்கள் இந்த மாதிரி பொது இடங்களுக்குச் செல்ல எங்கள் கிராமத்தில் அப்போது அனுமதி தர மாட்டார்கள். எனவே என் தம்பியிடம் ஒரு பேப்பரில் கதையின் பெயர், ஆசிரியர் பெயரை நான் எழுதிக் கொடுத்து எடுத்து வரச் சொல்வேன்.
எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் குடியிருந்தார். அவரைக் கண்டால் எங்களுக்குப் பயம். ஆனால், அவருடைய மனைவி என்னுடன் நன்றாகப் பேசுவார். அதனால், அவரிடம் சொல்லிப் பள்ளியில் இருந்து கதைப் புத்தகங்கள் எடுத்துவரச் சொல்லிப் படிப்பேன். அப்படிப் படித்ததுதான் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவல்.
கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, மதுரைக்குக் குடிவந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் கதைப் புத்தகங்களை நாள் கணக்கில் வாடகைக்குக் கொடுத்தார்கள். அப்படிப் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படித்தேன். பிறகு மாத, வாரப் பத்திரிகைகளை நானே கடையில் வாங்கிப் படித்தேன். திங்கள்கிழமை ஒரு பத்திரிகை வருகிறது என்றால், காலை ஒரு தடவை போவேன். பகல் 10 மணிக்குத்தான் வரும் என்று கடைக்காரர் சொன்னால், திரும்பவும் 10 மணிக்குப் போவேன். நான் கடைக்குப் போகவும் பத்திரிகை ஏஜென்ட் பத்திரிகையைக் கொண்டுவந்து போடவும் சரியாக இருக்கும். உடனே வாங்கிக்கொண்டு வந்து படித்து, உடனே பத்திரிகைக்கு என் கருத்தை எழுதியும் போட்டுவிடுவேன். இப்படிச் சுடச்சுட வாங்கிப் படித்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கிறது.- ஆர். பிருந்தா, சென்னை.