பெண் இன்று

பரிசுமழையில் நனைந்த சேலம் வாசகியர் | மகளிர் திருவிழா

வி.சீனிவாசன்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் ஏப்ரல் 27 அன்று சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழாவை வாசகியர் கொண்டாடித் தீர்த்தனர்.

மகளிருக்கான தனியொரு நாளாகத் தொடங்கிய சேலம் மகளிர் திருவிழா, சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியரின் பரதநாட்டியம், பறையிசை, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளால் களைகட்டியது. கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி மோகன சங்கரி நாட்டுப்புற நடனம், பரதம், சிலம்பாட்டம், சிலா ஆட்டம் எனப் பல்வேறு நடனங்களைக் கலவையாக்கி, தீச்சட்டிகளை இரண்டு கைகளில் மட்டுமல்லாமல் தலையிலும் சுமந்து ருத்ர தாண்டவம் ஆடி, பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தார். இவர், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நடத்திய மாநில அளவிலான நடனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைக்கு விருது: மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்யும் பணியை 25 ஆண்டுகளாகச் செய்துவரும் சீதா, கிராமப்புறப் பெண்களுக்கான மருத்துவச் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சேலம் கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையச் செவிலி சுசீலா ஆகிய இருவரும் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில், சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.செண்பக லெட்சுமி பேசும்போது, “பெண்களாகிய நாம் சுய மரியாதையுடனும் சுய சிந்தனையுடனும் செய லாற்றுவது முக்கியம். கல்வியே பெண்களை உச்சத்துக்குக் கொண்டு சென்று சாதனைகள் பல படைக்க உதவும்” என்றார்.

தொடர்ந்து சேலம் ஆரோக்கியா மருத்துவ மனை தலைவர் டாக்டர் ராணி வரதராஜு பேசும்போது, “ஆரோக்கியத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கும் வகையில், இரும்பு, நார்ச்சத்துள்ள உணவு வகைகளைப் பெண்கள் சாப்பிட வேண்டும். யோகா, உடற்பயிற்சி, மன மகிழ்ச்சி மூலம் பெண்கள் எப்பொழுதும் ஆரோக்கியத்துடன் இனிமையாக வழ முடியும்” என்றார். உத்தரப் பிரதேசம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ, வாசகியரை வாழ்த்திப் பேசினார்.

கலகலப்பான போட்டிகள்: பின்னர், வாசகியருக்குக் கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வென்றவர்களுக்கு மட்டு மல்லாமல் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வாரி வழங்கப்பட்டன. மேலும் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இரண்டு வாசகியர் பம்பர் பரிசுகளை வென்றனர். சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. லலிதா ஜூவல்லரி, எஸ்கேஎம் பூர்ணா, சத்யா ஏஜென்சீஸ், சக்தி மசாலா, கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்சஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி, மெரிடா கேக், ஹெல்த் பாஸ்கட், ஒபே தி ரூல்ஸ், கோல்டு பிரியம் ரீபைண்டு சன் பிளவர் ஆயில், வாக் பக்ரி டீ உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.

அறுபதிலும் ஆட்டம் வரும்: அறுபது வயதைக் கடந்த பெண் களுக்கான ‘ஒயில் நடை’ போட்டியில் பங்கேற்று, இசைக்கு ஏற்ப நடை பயின்ற வாசகியர், அரங்கை ஆரவாரத்தால் அதிரச் செய்தனர். அனைத்து வயதுப் பெண்களுமே மனத்தடையின்றி ஆர்வத் துடன் போட்டிகளில் பங்கேற்றதுதான் இந்த மகளிர் திருவிழாவின் சிறப்பம்சம். வாய்ப்பு கிடைத்தால் நாங்களும் குழந்தையாக மாறி விளையாடி மகிழ்வோம் என்பதை மகளிர் திருவிழாவில் கலந்து கொண்ட வாசகியர் உணர்த்தினர். பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்த பெண்கள் எல்லாருமே, தங்களின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி, மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

SCROLL FOR NEXT