தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2024இல் எத்தனை பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றன என்கிற புள்ளி விவரங்கள் 2025 ஏப்ரல் மாதம் தொடங்கியும் இன்னும் வெளியாகவில்லை. புள்ளி விவரக் கணக்குப்படி சொல்லப்போனால் 2022ஆம் வருடத்து அறிக்கையே தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையாக நமக்குக் காணக் கிடைக்கிறது. அதில்கூடப் பெண்களுக்கு எதிராகச் சுமார் 36,677 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 86 குற்றங்கள் நடந்ததாக நாம் புரிந்துகொள்ளலாம்.
பாலியல் குற்றங்களைப் பதிவுசெய்யாமல் இருப்பதற்கு இந்தச் சமூகத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. சிறுமிகளாக இருக்கும்போது தங்களுக்கு நேர்ந்தது பாலியல் வன்முறையா என்றுகூடச் சில நேரம் அவர்களுக்குப் புரிவதில்லை என்பதுதான் முதல் காரணம். ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில் என்னுடைய உறவினர் வீட்டில் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது அங்கு இருந்த 50 வயது நபர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். இதை என்னுடைய இருபதாவது வயதில்தான் நான் புரிந்துகொண்டேன். அந்தத் தொடுதல் எனக்குப் பிடிக்காமல் இருந்தபோதும் என்னால் அதை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. பல பெண்களுக்கு இதுவே கதியாக இருந்திருக்கிறது.
குடும்பத்தின் ஆதரவு: பாலியல் வறட்சி நிறைந்து கிடக்கும் நம் சமூகத்தில் இது போன்ற செய்கைகள் ‘அன்பு, பாசம்’ என்கிற போர்வையில் நிகழ்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாகப் பேசும் பெண்களிடமிருந்து பல நேரத்தில் அறிந்துகொள்ளலாம். நெருங்கிய சொந்தத்தில் இருக்கிறவரே தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் என்னிடம் சொன்னபோது என் காலுக்குக் கீழே பூமி சுற்றவே இல்லை. உறைந்துபோன என் மனதைப் பல நிமிடங்கள் கழித்துத்தான் மீட்டெடுக்க முடிந்தது. இப்படியான ஒரு சூழலில் ஒரு பெண் தனக்கு எதிராக நடக்கும் குற்றத்தை பதிவு செய்கிறாள் என்றால், அது மிகப் பெரிய சமூகப் புரட்சி என்றே நான் கருதுவேன். அதற்கு அவளது குடும்பம் உடன் நின்றால் மட்டுமே அவளால் அதைச் செய்ய இயலும்.
பதிவுசெய்வது அவசியம்: சமீபத்தில் ஒரு மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தேன். முன்னணி நடிகர் நடித்திருந்த திரைப்படம் அது. அதில் பார்வைக் குறைபாடு கொண்ட பெண்ணை ஒருவன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறான். அப்போது அவனைக் கண்டுபிடிப்பதற்காகக் கதாநாயகன் அதை விசாரணை செய்யும்போது அந்தப் பெண்ணின் தந்தை எவ்வளவு துயரைக் கடக்கிறார் என்பதைக் காட்சிரீதியாக நாம் காணமுடிகிறது. தமிழில் ‘சித்தா’ என்னும் திரைப்படம் ஏன் நம் தமிழ்ச் சமூகத்தில் அவ்வளவு முக்கியமான படம் என்பதற்கு, இத்தகைய பாலியல் குற்றங்கள் நிறைந்திருப்பதே சாட்சி.
எதையெல்லாமோ குறித்துத் தினம் தினம் நாம் சமூக ஊடகங்களில் எழுதுகிறோம். இது போன்ற நல்ல திரைப்படங்களை நாம் ஒரு பயிற்சி போல அல்லது வேலை போலத் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். இது நம்முடைய கடமை. ஆனால், எங்காவது ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்து விட்டால் உடனே பொங்கி எழுந்து நாம் ஒரு புரட்சியாளர் போலக் காண்பித்துக் கொள்வதற் காகவே பல பதிவுகளைச் சமூக ஊடகத்தில் எழுதியபடி இருக்கிறோம். மற்றபடி அது குறித்து நாமும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் போலவே பதிவுசெய்ய மறந்துவிடுகிறோம்.
தொடர்ந்து பேசுவோம்: ‘ஓ... ஒரு தென்றல் புயலாகி வருதே’ அல்லது ‘கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா’ போன்ற திரைப்படப் பாடல்களை நாம் கேட்கும்போது நமது ஒவ்வொரு நரம்பும் தெறிக்க பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகிறோம். அதற்குப் பிறகு மௌனமாகிவிடுகிறோம். இந்த மௌனம்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான மேடையாகிவிடுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு எதிராக நாம் தினமும் குரல் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவே தீர்வை நோக்கி நம் சமூகத்தை நகர்த்தும்.
பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய விழிப்புணர்வு சமீப காலமாக மிக அதிகமாக இருக்கிறது என்றாலும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் குழந்தைகள் வேறு யாரிடமாவது சிறிது நேரமாவது இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அத்தகைய சூழலில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா, இல்லையா என்பதைப் பெற்றோர்தான் உரையாடி அறிந்துகொள்ள வேண்டும். அதேநேரம் குழந்தைகள் பயிலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் அந்தக் கடமை இருக்கிறது. குழந்தைக்கு எதிராக ஒரு பாலியல் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு அந்தக் குழந்தையின் பெற்றோரும், உடன் இருந்தவர்களும் எத்தகைய காரணிகளாக இருந்தார்கள் என்பது தீவிர விசாரிக்கப்பட்டே தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
பாலினப் பாகுபாடு - பாலினச் சமத்துவம் குறித்த உரையாடல் குழந்தைகள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பாகுபாடு இட்டுப் பிரித்துவைத்து வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. எதிர்காலச் சந்ததி மீது அக்கறை கொண்ட ஓர் அரசால் இதைப் பள்ளிகளில் நிகழ்த்திவிட முடியும். மாற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.
(உரையாடுவோம்)