உறவினர்கள், நண்பர்கள் என யாரும் கை கொடுக்காத நிலையில் தன்னந்தனியாக நின்று சாதித்துக் காட்டியுள்ளார் சிதம்பரத்தைச் சேர்ந்த இந்திரா. முன்னேறத் துடிக்கும் பெண்களுக்குத் தன் வெற்றியின் மூலம் நம்பிக்கை அளித்துவருகிறார் இவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (43). சிறிய குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்துவருகிறார். இவருடைய கணவர் சங்கர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பிறகு மகனையும் மகளையும் எப்படி வளர்த்து ஆளாக்குவது எனத் தெரியாமல் திணறிப்போனார். பெரிதாகப் படிக்கவும் இல்லை என்பதால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்தார். உறவினர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வரவில்லை. திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நிலையில் தவித்தபோதும், வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கக் கூடாது என முடிவெடுத்தார். பலரது வீடுகளுக்கும் சென்று வீட்டு வேலை செய்தார். அப்போதுதான் அவருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையின் வேரைப் பிடித்துக்கொண்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காலை, மாலை இருவேளையும் வீட்டு வேலைப் பணியாளராகத் தொடர்ந்தார்.
கவரிங் நகை வேலை: வீட்டு வேலை செய்வது போகக் கிடைத்த நேரத்தில் கவரிங் நகை செய்யும் பட்டறைகளுக்கு வேலைக்குச் சென்று வந்தார். அதன் மூலம் ஓரளவு வருமானம் கிடைத்தது. மகனையும் மகளையும் படிக்க வைத்தார். தான் பட்டினி கிடந்தாலும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று இருவரையும் தொடர்ந்து படிக்வைத்தார். மகன் அருண்குமார் (21) டிப்ளமோ படித்துள்ளார். மகள் சந்தியா (20) தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துவருகிறார்.
கவரிங் பட்டறைக்கு வேலைக்குச் சென்றபோது கவரிங் தொழிலைக் கற்றுக்கொண்ட இந்திரா, தற்போது சிறிய அளவிலான கட்டிங் மிஷினை வங்கி, வீட்டில் வைத்து கவரிங் தொழில் செய்யும் தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். வீட்டு வேலைப் பணியோடு தற்போது கவரிங் நகை தொழிலும் இவருக்கு வருமானத்தைக் கொடுக்கிறது. யார் என்ன பேசினாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வேலைகளை மட்டுமே கவனித்துவந்தார் இந்திரா. தற்போது யாரிடமும் கையேந்தாமல் சுயமாகக் குடும்பத்தை நடத்திவருகிறார்.
கேலிகளைப் புறக்கணித்தேன்: தன் மகன் கடந்த ஓராண்டாக ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்துவருவதைத் தன் தன்னம்பிக் கைக்குக் கிடைத்த பரிசு என்கிறார் இந்திரா.
“என் கணவர் இறந்தவுடன் தன்னந்தனியாக விடப் பட்டேன். எந்தப் பின்புலமும் இல்லாத ஏழையாக இருந்ததால் என்ன செய்வது, பிள்ளைகளை எப்படிப் படிக்க வைப்பது, குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டேன். உறவினர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டேன். வீட்டு வேலைக்குப் போனேன். காலை 4 மணிக்கு எழுந்து கவரிங் வேலை செய்விட்டு, அதன் பிறகு வந்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அதன் பிறகு வீட்டு வேலைக்குப் போவேன்.
மறுபடியும் மதியம் 1 மணிக்கு வந்து கவரிங் வேலை செய்வேன். சொந்த, பந்தங்கள் பக்கத்தில் இருந்தும் யாரும் எனக்கு உதவவில்லை. என்னுடன் என் பிள்ளைகளும் கஷ்டப்பட்டனர். நான் யாரையும் எதிர்பார்க்காமல் கவரிங் தொழிலைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கவரிங் வேலை செய்யும் ஒரு மிஷின் வாங்கினேன். அதற்கு பிறகு வீட்டிலேயே கவரிங் தொழில் செய்தேன். பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். உறவினர்களின் நல்லது, கெட்டதுக்குச் சென்றுவந்தேன். இன்று நன்றாக இருக்கிறேன். என் பிள்ளைகளைப் படிக்க வைத்துவிட்டேன். என்னைக் கேலி செய்தார்கள், அவமானப்படுத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் தொழிலில் கவனத்தைச் செலுத்தினேன். தற்போது 10 பேருக்கு வேலை தரும் நிலையில் உள்ளேன்” என்றார் இந்திரா.