எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அம்மாவை அவரது ஓய்வு நேரத்தில் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். வரலாற்று நாவல்கள், வார இதழ்கள் என அனைத்தையும் வாசிப்பார். அம்மாவின் வாசிப்புப் பழக்கம் எனக்கும் வந்துவிட்டது.
நான் பள்ளியில் படித்தபோது உணவு இடைவேளையிலும் ஓய்வு நேரத்திலும் பள்ளி நூலத்தில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். மு.வரதராசனார், கல்கி, அகிலன் போன்றோர் எழுதிய புத்தகங்கள்தான் நூலகத்தில் இருக்கும். இவற்றை ஒரே நேரத்தில் படித்து முடித்துவிட முடியாது என்பதால் இடைவெளி விட்டுப் படித்தேன்.
படித்து முடித்து வேலைக்குச் சென்று, திருமணம் முடிந்த பிறகும் என் வாசிப்புப் பழக்கம் மாறவே இல்லை. வாழ்க்கையில் எதையும் எதிர்கொண்டு வாழ நான் வாசித்த புத்தகங்கள்தான் முக்கியக் காரணம். டெல்லியிலும் சென்னையிலும் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்குவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சென்னையில் ‘ஹிக்கின் பாதம்ஸ்’, ‘லேண்ட் மார்க்’ புத்தகக் கடைகளைக் கடக்கும்போதெல்லாம் நாமும் ஒரு புத்தகக் கடை திறக்க வேண்டும் என்றும் வீட்டிலேயே நூலகம் அமைக்க வேண்டும் என்றும் தோன்றும்.
என் கணவர் வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்றலாகிச் சென்றதாலும் நானும் வேலை செய்துவந்ததாலும் புத்தகக் கடை கனவு நிறைவேறவில்லை. ஆனாலும், புத்தகச் சேகரிப்பையும் வாசிப்பையும் நிறுத்தவில்லை. என் மகள் சென்னையில் வீடு வாங்கியபோது புத்தகங்களை வைக்க ஓர் தனியறையை ஏற்பாடு செய்துகொடுத்தாள். அமைந்துவிட்டது எங்கள் கனவு நூலகம்!
நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எங்கள் வீட்டுச் சிறு நூலகத்துக்குச் சென்று நூல்களைப் பார்ப்பதும் ஏற்கெனவே படித்த நூல்களை மீண்டும் ஒரு முறை வாசிப்பதும் என அலாதியாகக் கழிகிறது பொழுது. கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது மின்னூல்களையும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
- கே.வேலுமணி, பள்ளிக்கரணை, சென்னை.
-------------------------------------------------------------------------------------------------------
உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.
முகவரி: பெண் இன்று, இந்து தமிழ்திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in.