பெண் இன்று

பாசம் எங்கே போனது? | உரையாடும் மழைத்துளி - 26

தமயந்தி

பெண்களுக்குச் சமையலைத் தவிர, கோலம் போடுவதைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது என்று நினைக்கிறவர்களும் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதையும் தேர்ந்தெடுக்கத் தெரியாது என்கிற அவர்களது எண்ணத்தின் விளைவுதான் அவளுக்கு அவளுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது என்று ஒரு குடும்பம் மிகத் தீர்மானமாக நம்புவது. அதன் சாட்சியாகத்தான் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் வித்யா என்கிற இளம்பெண் இப்படித்தான் தலையில் அடிபட்டு இறந்துபோனாள் என்று சொல்லப்பட்டது.

அறிக்கையும் விவாதமும்: வித்யாவின் அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குச் சென்று வந்ததாகச் சொல்லப்படும் சில மணித்துளிகளில்தான் பீரோ அவருடைய தலையில் விழுந்து அவர் இறந்துபோனதாக முதலில் சொன்னார்கள். அதற்கடுத்த சில மணி நேரத்திலேயே வித்யாவின் சடலத்தைப் புதைத்துவிட்டனர். வித்யாவின் அக்கம் பக்கத்து வீட்டினரும் அவரது காதலரும் கொடுத்த புகாரின் பேரிலேயே வித்யாவின் மரணத்தின் மீது விசாரணையைக் காவல்துறை தொடங்கியது. அப்போதுதான் வித்யாவின் அண்ணனே அவளைக் கொலை செய்தது தெரியவந்தது. தன் தங்கையைக் கொலை செய்ததாக அந்தச் சகோதரனே ஒப்புக்கொண்ட போதும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அது குறித்து வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய விவாதத்திற்குள்ளானது. வித்யா சரியாகப் படிக்காததால் அவருடைய அண்ணன் அவரை அடித்ததாகவும் அதனால் அவர் இறந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்தச் சமூகம் இப்படித்தான் பல மரணங்களை எதார்த்தமான மரணங்களாக மாற்ற முயன்றுவருகிறது. ஒரு பெண் அவளுடைய வாழ்க்கைத் துணையைத் தேடுவது என்பது இன்றுவரை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. தான் அதுவரை நேசித்துவந்த ஓர் உறவை எந்தவொரு நிமிடத்தில் அவர்கள் கொல்லத் தீர்மானிக்கிறார்கள் என்பது எனக்குச் சத்தியமாகப் புரிபடவே இல்லை. பாசத்தைக் காட்டிலும் அந்த அளவிற்குச் சாதியின் கொடூரம் ஏன் நம் சமூகத்தில் அளவிட முடியாத சதவீதத்தில் கோலோச்சிக் கிடக்கிறது என்பதும் புரியவில்லை.

அதிகரிக்கும் ஆணவக் கொலைகள்: இப்படிப் புரியாத விஷயங்கள் நிரம்பிக் கிடக்கிற ஒரு காடாகத்தான் இந்தச் சமூகம் இருக்கிறது; இந்தச் சமூகத்தில் மனிதன் இன்னும் காட்டுமிராண்டியாகத்தான் உயிர் பறிக்கும் ஆயுதங்களுடன் அலைந்தபடி இருக்கிறான். சட்டங்கள் இத்தகையவர்களுக்குப் பிற்காலத்தில் தண்டனை கொடுக்கலாம். ஆனால் போன உயிரையோ, இறந்து போன காதலையோ யார் மீட்டெடுப்பார்கள்? இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என்னுடன் இருந்த ஒரு நபர், ‘பெற்றோருக்குப் பிடிக்காத திருமணத்தைச் செய்துகொள்ளும் பிள்ளைகள் மேல் அவர்களுக்கு இயல்பாகவே ஒரு கோபம் எழும். அதன் நீட்சியாகத்தான் இந்தக் கொடூர கொலைகளைப் பார்க்க வேண்டும்’ என்று அர்த்தப்படுத்திப் பேசியது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவர் அவ்வாறு பேசியதே வார்த்தைகளின் மூலம் நிகழும் ஒரு கொலையாகத் தோன்றியது மட்டுமன்றி ஆணவக்கொலைக்கு நிகரான ஒரு செயலாகவும் தெரிந்தது.

கொல்லப்பட்டவர்களுக்கு என்ன பதில்?- தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் அதிகமாக நடப்பதாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர். ‘எவிடென்ஸ்’ அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி தஞ்சாவூர் மாவட்டம் ஐஸ்வர்யா, மதுரை கொம்பாடி கிராமத்தில் சதீஷ்குமார் - மகாலட்சுமி, சென்னையைச் சேர்ந்த ஜீவா, பள்ளிக்கரணையைச் சேர்ந்த பிரவீன், ஈரோடு மாவட்டம் சுபாஷ் மற்றும் அவரது தங்கை ஹாசினி (சுபாஷ் காதலித்த பெண்ணின் பெற்றோர் விபத்து போல ஏற்பாடு செய்து சுபாஷின் இருசக்கர வாகனத்தின் மீது நான்கு சக்கர வாகனத்தை மோத வைத்தபோது அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அவரது தங்கை ஹாசினி இறந்துவிட்டார்) மதுரை அவனியாபுரம் கார்த்திக், விருதுநகர் மாவட்டம் அழகேந்திரன், திருவில்லிபுத்தூர் கார்த்திக், தர்மபுரி மாவட்டத்தில் முகமது ஆசிக், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் 2024ஆம் ஆண்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டவர்கள். இவர்கள் சாதியின் காரணமாக மிகக் கொடூரமான முறைகளில் கொலை செய்யப்பட்டவர்கள். இவர்களை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் மேல் சட்டப்படி வழக்கு இருக்கிறது. ஆனால், சட்டம் எப்போது தனது தீர்ப்பைச் சொல்லி ஆணவக் கொலைக்குப் பலியான இந்த உயிர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினரின் துயருக்கும் பதில் சொல்லும் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லவே இயலாது.

தமிழக அரசு இந்தத் தீவிரமான, யதார்த்தமான உண்மைகளை ஒப்புக்கொண்டு அது சார்ந்த நிபுணர்களையும் அவர்கள் தரக்கூடிய புள்ளி விவரங்களையும் முன்வைத்து, பெண்கள் தங்களுடைய துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும். புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். அதுவே ஆணவக் கொலைகளின் முடிவாக இருக்கும்.

(உரையாடுவோம்)

SCROLL FOR NEXT