‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மார்ச் 23 அன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் திருவிழா வாசகியரின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு களைகட்டியது. இளநிலாவின் வீணை இசையோடும் ப.சிவரஞ்சனியின் சிவாலயா நாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டியத்தோடும் நிகழ்ச்சி தொடங்கியது.
மதுரை சமயநல்லூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை 23 ஆண்டுகளாக நடத்திவரும் ஆர்.லதா, இயற்கை முறையில் ஸ்கின் கிரீம் தயாரிக்கும் மதுரை பரவையைச் சேர்ந்த கிருத்திகா இருவருக்கும் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பேராசிரியர். டி.சொர்ணலதா பேசும்போது, “படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் பலனளிக்க வேண்டும் என்று நான் புத்தகத்தில் படித்த ஒற்றை வரிதான் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. பெண்கள் முயன்றால் உயர்ந்த நிலையை அடையலாம். சேவல் கூவிதான் பொழுது விடியும் என்பர். ஆனால், அந்தச் சேவலை எழுப்பி விடுவதே கோழிதான். அதுபோல் ஆண்களை வெற்றி பெற எழுப்பி விடுவதே பெண்கள்தான். முயற்சிகள் இருந்தால் சரியான இலக்குகளை அடையலாம்” என்றார்.
பின்னர் கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி மோகன சங்கரியின் நடனம், பரதம், சிலம்பம் ஆகியவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. எழுத்தாளர் பாரததேவி பேசும்போது, “இப்போதைய தலைமுறையினர் சொந்த பந்தங்கள் தேவையில்லை எனத் தொலைக்காட்சியையும் தொலைபேசியையும் நண்பர்களாக்கி உள்ளனர். செல்போனில் மூழ்கியுள்ளனர். புத்தகங்களை நண்பர்களாக்க வேண்டும்” என்றார்.
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் மலைச்சாமி, காளி அம்மன் வேடமிட்டு கையில் தீப்பந்தம் ஏந்தி ருத்ர தாண்டவமாடினார். அவரது நடனத்தைப் பார்த்த பெண்கள் சிலர் அருள் இறங்கி ஆடினர். அவருடன் வந்த நடனக்கலைஞர் சுரேஷ், பெண்ணாக மாறி கரகாட்டம் ஆடியதையும் கரவொலி எழுப்பிப் பெண்கள் ரசித்தனர்.
அதன்பின்னர் மதுரை இருப்புப்பாதை டிஎஸ்பி பி.காமாட்சி பேசும்போது, “பெண்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதில் பூமாதேவியாகவும், ஆபத்து வரும்போது பத்திரகாளியாகவும் மாற வேண்டும். நமக்காகக் கடினமாக உழைத்து நம்மை முன்னேற்றிய குடும்பத்தினர்தான் நமக்கு இன்ஸ்பிரேஷன். அம்மா, பாட்டியும்கூட இன்ஸ்பிரேஷன். பெண்களின் பாதுகாப்புக்குத் தமிழக அரசு ‘எஸ்ஒஎஸ் காவலன்’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பெண்கள் அனைவரும் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.
90 வயது மாமியாரும் 50 வயது மருமகளும் மேடையேறி நடனமாடியது வாசகியரை உற்சாகப்படுத்தியது. பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், ஃபேஷன் ஷோ உள்ளிட்ட போட்டிகளில் வாசகியர் ஆர்வத்துடன் பங்கேற்றுப் பரிசுகளை வென்றனர். இரண்டு வாசகியருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவோடு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா கலகலப்பாகத் தொகுத்து வழங்கினார்.
உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. மேலும், சத்யா ஏஜென்சீஸ், தங்கமயில் ஜூவல்லர்ஸ், சாந்தாஸ் சில்க்ஸ், சாஸ்தா நல்லெண்ணெய், ரோஷன் பேக்ஸ், நவீன் மசாலா, மதுரை மீனாட்சி ஊறுகாய், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம் நிறுவனம், டோம்ஸ் ஸ்டேஷனரி, அமெரிக்கன் கல்லூரி, வாக் பக்ரி டீ உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்கின.