இயற்கை முறையில் தாவர வெண்ணெய்கள், எண்ணெய்கள், பூக்கள் மூலம் ‘ஆர்கானிக் ஸ்கின் கிரீம்’ தயாரித்து இணையதளம் மூலம் விற்பனை செய்து பெண் தொழில்முனைவோராகத் தடம்பதித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த கிருத்திகா.
சென்னையைச் சேர்ந்தவர் கிருத்திகா. இன்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங், எம்பிஏ படித்துள்ளார். லண்டனில் ‘ஆர்கானிக் ஸ்கின் கேர் ஃபார்முலேஷன்’ டிப்ளமோ படித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு கணவர் கார்த்திக் கணக்குத் தணிக்கையாளராக வேலை செய்துவந்த பஹ்ரைன் நாட்டில் 2009இல் குடியேறினார். அங்கே எட்டு ஆண்டுகள் ஐ.டி. துறையில் கிருத்திகா வேலைசெய்தார்.
2014இல் இரண்டாவது குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஒன்றரை வயதானபோது சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டது. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் களிம்புகள் தடவியும் சரியாகவில்லை. இதற்குப் பாரம்பரிய, இயற்கை முறைப்படி தாவர எண்ணெய்கள், வெண்ணெய்கள் மூலம் தீர்வு காண நிறைய படித்தார். பிறகு கணவரின் சொந்த ஊரான மதுரைக்குத் திரும்பியவர், தன் படிப்பு அனுபவம் மூலம் ‘டிவிஷி ஹேண்ட்மேடு’ (Tvishi Handmade) என்கிற பெயரில் ஆர்கானிக் ஸ்கின் கிரீம்களைத் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.
“என் மகள் சகானாவின் தோல் அலர்ஜிதான் இதன் தொடக்கப்புள்ளி. அவளது சருமப் பிரச்சினையை இயற்கை முறையில் தீர்ப்பதற்காகப் படித்தேன். அப்போது என் கணவர் தொழில் விஷயமாக அடிக்கடி லண்டன் சென்று வருவார். தாவர எண்ணெய், வெண்ணெய் பொருள்களை வாங்கி வருவார். அதிலிருந்து கிரீம் தயாரித்து உடல் முழுவதும் பூசியதால் மகளுக்குக் குணமடைந்தது. ‘மூன்று ஆண்டுகள் படிப்பும் ஆய்வும் வீணாகக் கூடாது; இது மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்’ என்று என் கணவர் ஊக்கப்படுத்தினார். நாம் தயாரிக்கும் ஆர்கானிக் ஸ்கின் கிரீம்கள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். மதுரையில் என் கணவரின் சகோதரி சசிகலா ஆதரவோடு 2019இல் ‘டிவிஷி’யைத் தொடங்கினோம்” எனப் புன்னகைக்கிறார் கிருத்திகா.
2020இல் கரோனா காலத்தில் வேதிப்பொருள்கள் கலக்காத இயற்கை உணவுப் பொருள்கள் குறித்து மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு, தங்கள் விற்பனைக்கும் உதவியதாகச் சொல்கிறார்.
“இயற்கை முறையில் தயாரான எங்கள் கிரீம் குறித்து சமூக வலைத்தளங்களில் எழுதினோம். முதலில் இரண்டு வகை கிரீம்களைத் தயாரித்தோம். வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது 40க்கும் மேலான கிரீம்களைத் தயாரித்துவருகிறோம். இவை அழகு சாதனப் பொருள்கள் அல்ல. சருமத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும் கிரீம்கள். எங்களது தாழம்பூ குங்குமத்துக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு. மதுரைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆர்கானிக் மல்லிகை சோப்பை அறிமுகப்படுத்தியுள்ளோம். தாழம்பூ குங்குமம், அமேசான் ரேட்டிங்கில் 6ஆவது இடத்தில் உள்ளது.
இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து தாவர எண்ணெய்கள், வெண்ணெய்கள் தருவித்து கிரீம்களைத் தயாரிக் கிறோம். எங்களது வலைதளம், இன்ஸ்டகிராம் போன்றவற்றின் மூலம் ஆர்டர் கொடுக்கலாம்” என்றவர், தற்போது தங்களது நிறுவனம் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப் பதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். இவர்களிடம் தற்போது எட்டுப் பெண்கள் வேலை பார்க்கின்றனர். கல்லூரி மாணவியர் பலர் பகுதி நேர வேலை செய்தபடியே உயர்கல்வியும் படித்துவருகின்றனர்.