பெண் இன்று

பெண்களின் மேல் வீசப்படும் அம்பு | உரையாடும் மழைத்துளி - 24

தமயந்தி

பாலியல் குற்ற வழக்குகளில் புகார் கொடுத்திருக்கும் பெண்களைக் கேவலப்படுத்துவதற்கு அவர்களது நடத்தை குறித்துப் பல்வேறு விதமான அவதூறுகள் பரப்பப்படக்கூடும். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட சீமான் - விஜயலட்சுமி பாலியல் வழக்குப் பிரச்சினைகளில் முக்கியமாகப் பேசப்பட்டிருப்பதும் இதுதான்.
தான் விசாரணைக்கு வரவேண்டும் என்று சொல்லப்பட்டதும் பதற்றமான சீமான், விஜய லட்சுமியைப் பாலியல் தொழிலாளி என்று சொன்னதன் மூலம் விஜயலட்சுமியைக் கேவலப் படுத்துவதாக நினைக்கிறார். ஆனால், அங்கு கேவலப்பட்டு நிற்பது அவர்தான் என்பதை சீமான் அறியவே இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டவசமான விஷயம்.

கண்ணியத்தைக் குலைக்கலாமா?

ஒரு பெண்ணைப் பாலியல் தொழிலாளி என்று ஒரு நிமிடத்தில் கைகாட்டிவிட்டுப் போகலாம். ஆனால், அப்படிச் சொல்வதற்கு அந்த ஆணுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். இது இந்த வழக்கில் ஒரு வாதமே இல்லை எனினும் குற்றம் சுமத்துகிறவரின் ஒழுக்கக் கோட்பாடுகளைத் சிதைப்பது ஒரு குரூர உத்தி.
தான் நெருங்கிப் பழகிய ஒரு பெண்ணைப் பாலியல் தொழிலாளி என்று சொல்லும் ஒரு மனிதர் எப்படித் தன் மனைவிக்கு நேர்மையானவராக வாழ்ந்துவிட முடியும்? சமூக ஊடகங்களில் பலரும் சீமானுக்கு ஆதரவாக விஜயலட்சுமியை எதிர்த்துக் கொந்தளித்து நின்றனர். அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் விஜயலட்சுமியை வெவ்வேறு விதமான கேவலமான சொற்களில் அழைத்தபடி இருந்தனர். ஒரு பெண், தான் காதலித்த நபரின் வாயிலிருந்தே தன்னைப் பாலியியல் தொழிலாளி என்று அழைக்கப்படுவதில் வலியும் ரணமும் மிகுந்திருக்கும். விஜயலட்சுமி அது சம்பந்தமாகப் பேசிய வீடியோ ஒன்றில், சீமான் தன்னைப் பாலியல் தொழிலாளி என்று சொன்னதை ஒப்புக்கொள்ள முடியாத வலியோடு பேசினார். அரசியல் சதுரங்கமாய்த் தெரியும் இந்த விஷயத்தில் முக்கிய மையப் புள்ளி தேர்தல் அரசியல் அல்ல; பெண்ணுடல் மேலும் அவளது பண்புகள் பற்றியுமான ஆணாதிக்கத்தின் அதிகாரக் கட்டமைப்பே.

உடையும் நம்பிக்கை

ஒரு பெண்ணை மணந்துகொள்வதாகப் பேசிப் பின் ஏமாற்றிய ஒருவர்தான் பாலியல் தொழிலாளராகக் கருதப்பட வேண்டுமே தவிர, தன்னைக் கல்யாணம் செய்துகொள்வான் என்று நம்பி ஏமாந்துபோன பெண்ணைப் பழிகூறுவது நியாயமல்ல. சீமானுக்கு ஒருபக்கம் மனசாட்சியின் உறுத்தல் நிச்சயமாக இருக்கும். இன்னொரு பக்கம் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் இப்போது இருக்கும் திருமண வாழ்க்கையைப் பாதிக்காத வண்ணம் நடந்து கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது. இவை இரண்டுக்கும் நடுவேதான் சீமானின் தடித்த வார்த்தைகள் வந்து விழுவதாக நினைக்கிறேன். இன்னொன்று, பெண்ணின் மானத்தைத் துச்சமாகக் கருதும் மனப்பான்மை. இப்படியெல்லாம் அவதூறாகப் பேசும் தருணங்களில் விஜயலட்சுமியின் மனநிலை பற்றி அவர் கிஞ்சித்தும் யோசிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படிப் பல பெண்கள் தங்கள் காதலர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற நம்பிக் கையில் அவர்களோடு நெருங்கிப் பழகுவதையும் பின் ஏமாந்து நிற்பதையும் நாம் பார்க்கிறோம். பெண்களும் காதல் விஷயத்தில் ஆண்களை ஏமாற்றுவார்கள்தான். ஆனால், எந்தப் பெண்ணும் ஓர் ஆணின் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வதில்லை.

பெண்ணுக்கே துன்பம்

திருமணம் செய்துகொள்வதாக அல்லது இருவரும் காதலிக்கும்போது நம்பிக்கை அளித்து ஒரு பெண்ணுடன் உடல்ரீதியாக நெருங்கிவிட்டுப் பிறகு விலகினால் வழக்குத் தொடுக்க முடியுமா என்றால், ஆம். அதாவது உறவுக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஏமாற்றினால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க இயலும். இது பலருக்குப் புது செய்தியாக இருக்கக்கூடும். அருணா ஷான்பாக்கின் வழக்கு பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்காது.
அவர் பாலியியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு பெண். ஆனால், காதல் அல்ல. கொடூரச் சிந்தனை கொண்ட ஒருவனின் பழிவாங்கும் நோக்கத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமை அது. நாயைக் கட்டும் சங்கிலியால் கழுத்தை நெரித்து அருணாவை வன்புணர்வு செய்தவன் தண்டனை முடிந்து விடுதலை பெற்றுத் திருமணம் செய்துகொண்டான். ஆனால், அருணா காலம் முழுவதும் நினைவிழந்து கோமாவில், தான் செவிலியாகப் பணியாற்றிய மருத்துவமனையிலேயே இருந்தார். எத்தனை வருடங்கள் தெரியுமா? 37 வருடங்கள். இதற்கு என்ன நியாயத்தை நீதிமன்றம் சொல்லும்?

பெண்களை மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ சாகடிக்காதீர்கள். பாலியல் இன்பம் உங்களுக்கு நீடிப்பது சில நிமிடங்களுக்குத்தான். ஆனால், பெண்கள் தொலைப்பது அவர்களின் வாழ்க்கையை. அதற்குப் பொறுப்பானவர்கள் பதில் சொல்லியே
ஆக வேண்டும்.

(உரையாடுவோம்)

- தொடர்புக்கு: dhamayanthihfm@gmail.com

SCROLL FOR NEXT