கடந்த வாரம் நடந்த சில சம்பவங்கள் நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்கிற சந்தேகத்தை மட்டுமல்ல, அச்சத்தையும் ஏற்படுத்தின. பள்ளிக்கூடங்களில் படிக்கிற சிறுவயது பெண் குழந்தைகளிடம் ஆசிரியர்கள் பாலியல்ரீதியாக மிகக் கீழ்த்தரமாக நடந்துகொண்ட விதம் நம்மைப் பதற வைத்தது.
அது மட்டுமல்ல; வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கர்ப்பிணியிடம் காமக் கொடூரன் ஒருவன் தவறாக நடக்க முயன்று அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருந்தான். அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு அந்தத் தாக்குதலில் தன் உயிரை இழந்துவிட்டது. உலகத்தைக் காணும் முன்பே அந்தக் குழந்தையைக் கொல்லும் அளவுக்கு அவனைக் காமம் அலைகழித்திருப்பதை அந்தச் சிசு அறிந்திருக்காது. அந்தப் பெண் தலையில் 20 தையல்களுடனும் காயங்களுடனும் மருத்துவமனையில் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார். ஜோலார்பேட்டையில்தான் அந்தக் காமுகன் பெண்கள் பெட்டியில் ஏறியதாகத் தெரிகிறது. முதலில் தான் தவறாக ஏறிவிட்டதற்காக வருந்திய அவன் முப்பது நிமிடங்கள் கழித்து ஆடையின்றி அந்தப் பெண் முன் வந்து நின்றிருக்கிறான். அந்தப் பெட்டியில் வேற எந்தப் பயணியும் இல்லை என்பது அந்தப் பெண்ணின் வாக்குமூலம்.
இதற்குப் பிறகு அடுத்த 30 நிமிடங்கள் திரைப்படங்களில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமானவை. அவன் அந்தப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான். அந்தப் பெண் மிகவும் கெஞ்சி, “நான் உன் தங்கையைப் போன்றவள். கர்ப்பமாக இருக்கிறேன்” என்றெல்லாம் சொன்ன பிறகும் மனம் இறங்காமல் அந்தப் பெண்ணின் கையை உடைத்திருக்கிறான். உடனடியாக அந்தப் பெண் ரயிலின் அபாயச் சங்கலியைப் பிடித்து இழுக்க முயன்றபோது அவரை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறான். அங்கும் அவர் கைப்பிடியைப் பிடித்துகொண்டு தொங்கியதால் காலை வைத்து எத்தி கீழே விழ வைத்திருக்கிறான்.
விழிப்புணர்வு அவசியம்: இந்தக் கொடூர சம்பவத்தைச் செய்திருக்கிற ஹேமந்த்ராஜ் என்கிற அந்தக் காமுகன் ஏற்கெனவே தீபா என்னும் பெண்ணை கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. விவாகரத்து ஆன தீபாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி அவருடன் இருந்த ஹேமந்த்ராஜ், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி தீபா வற்புறுத்தியதால் அவரைக் கொலை செய்திருக்கிறான். மூன்று மாதங்கள் முன்புதான் உயர் நீதிமன்றத்தில் அவனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்திருக்கிறது.
இன்னொரு புறம் எட்டாம் வகுப்பு படித்த மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர்கள் குறித்த செய்தியையும் நாம் பார்க்கிறோம். அந்தச் செய்தியைப் படிக்கும் நிமிடம், மனம் பதறிவிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவியருக்குத் தங்களுடைய உடல் குறித்த பிரக்ஞையை ஒரு விழிப்புணர்வு இயக்கமாகத் தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும். அதன் நோக்கம் குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும். அப்படியொரு சூழல் இருந்தால்தான் அவர்களுக்கு உடலும் காம உணர்வும் கையாளக்கூடியவை என்பதும் அது அசிங்கமான அருவருவக்கத்தக்க விஷயம் அல்ல என்பதும் புரியவரும்.
அரசுக்குக் கோரிக்கை: விடுதியில் தங்கிப் படிக்கும் பெண்கள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக ஒரு பக்கம் செய்தி வந்து, அது மறைந்துவிட்டது. அந்தப் பெண்ணை இழந்த குடும்பம் மட்டுமே இன்னும் அந்தச் சோகத்தைச் சுமந்து கொண்டிருக்கும். மற்றபடி ஈரம் காய்வதற்குள் அடுத்தடுத்த செய்திகளில் மனமும் வேறு வேறு விஷயங்களுக்கு அலைபாய்ந்து விடுகிறது.
காட்பாடியில் அந்தப் பெண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட பலாத்கார முயற்சியையும் அது தொடர்பான அவருடைய குழந்தையின் மரணத்தைம் நாம் இன்னும் சில காலத்தில் மறந்துவிடுவோம். என்றாலும், இன்னொரு ரயில் பெட்டியில் இன்னொரு பெண்ணுக்கு அது நேராமல் இருக்க வேண்டுமென்றால் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக, தண்டனையின் வீரியம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். அதற்கு மத்திய அரசின் செயல்பாடுகள் எவ்வளவு தூரம் இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மாநில அரசு உடனடியாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
காட்பாடியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தமிழக முதல்வர் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். அந்த அரை மணி நேரப் போராட்டத்திற்கும் குழந்தையை இழந்த வலிக்கும் இந்தப் பணம் மிகச் சொற்பமான தொகை. பணம் அல்ல இங்கு விஷயம்; பெண்களுக்கான பாதுகாப்பே நாம் வேண்டிக் கேட்கும் விஷயம். தமிழக முதல்வரிடம் தமிழ்ப் பெண்கள் வைக்கும் கோரிக்கையும் இதுதான்!
(உரையாடுவோம்)
- தொடர்புக்கு: dhamayanthihfm@gmail.com