எழுத்தும் வாசிப்பும் பெண்களுக்கு எட்டாக் கனியாக இருந்த நிலை இன்று ஓரளவுக்கு மாறியிருக்கிறது. பெண்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை, தனித்துவமான பிரச்சினைகளை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை, பெண்களின் அக உணர்வுகளைப் பெண்களின் கரங்கள் எழுதுகையில் அவை உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படும். பெண்ணுலகின் சாதனைப் பக்கங்களை உலகுக்குக் காட்சிப்படுத்துவதில் அரிதாக ஆண்களும் பங்களித்திருக்கிறார்கள். பெண்களால் எழுதப்பட்டவையும் பெண்கள் சார்ந்து எழுதப்பட்டவையும் ஒப்பீட்டளவில் குறைவு என்கிறபோதும் அவை நம் வாசிப்பின் தளத்தை விசாலப்படுத்தத் தவறுவதில்லை. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றிருக்கும் அப்படியான புத்தகங்களில் சில இவை:
ரீட்டாவின் கல்வி
l பிருந்தா காரத்
தமிழில்: அபிநவ் சூர்யா ல.தி,
சித்தார்த் கோ.மு.
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.220
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிறுவனர்களுள் ஒருவருமான பிருந்தா காரத் கடந்து வந்த பாதையின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தைப் பற்றிய சிறு குறிப்பு இந்நூல்.
சிறுமி, பெண், மற்றையவர்
l பெர்னடின் எவரிஸ்டொ
தமிழில்: பாலா கருப்பசாமி
எதிர் வெளியீடு
விலை: ரூ. 699
புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் பெர்னடின் எவரிஸ் டொவின் நாவல். நவீன பிரிட்டனும் அதன் நூற்றாண்டு கால மாற்றமும் வளர்ச்சியும் போராட்டமும் பெண்ணியப் பார்வையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கலைக்கும் புரட்சிக்கும் இடையில்
நான்கு இலத்தீனமெரிக்கப்
பெண் போராளிகள்
l யமுனா ராஜேந்திரன்
உயிர் பதிப்பகம்
விலை: ரூ.160
கியூபாவின் முதல் கெரில்லாப் பெண் போராளி சீலியா சாஞ்சஸ், சே குவேராவின் குழுவில் இணைந்து போரிட்டு மடிந்த ஒரே பெண் போராளி தான்யா, உடல் முடங்கிய நிலையிலும் தனது வலிகளையும் அரசியலையும் ஓவியங்களாக்கிய மெக்சிக கம்யூனிஸ்ட் போராளி ஃபிரிடா கலோ, உலக ஒளிப்படக் கலையின் உன்னதப் படைப்பாளி டினா மொடாட்டி ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரங்கள் அடங்கிய நூல்.
அம்மாவின் கதை
நலிந்தோர் வாழ்வோடு கலந்த நட்சத்திரம்
l என்.ராமகிருஷ்ணன்
சவுத் விஷன் புக்ஸ்
விலை: ரூ.50
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான கே.பி.ஜானகி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.
சிவப்புச் சட்டை சிறுமி
l ஸர்மிளா ஸெய்யித்
காலச்சுவடு
விலை: ரூ.260
உறக்கத்திலும் உயிர்ப்புடன் இருக்கும் கனவுகளைக் கொண்ட மர்ஜானியின் கதை இது. பிணிக்கும் மீட்புக்கும் இடையிலான அனுபவத்தைச் சொல்கிறது.
செந்நிலம்
l ஜெயராணி
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.300
சமூகம் சார்ந்தும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் எழுதிவரும் ஜெயராணியின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
தென்றிசை மாதெய்வங்கள்
l மா.சிந்தனா
சிந்தன் புக்ஸ்
விலை: ரூ.120
சமூகக் கட்டமைப்புகளால் அடை யாளங்கள் அழிக்கப்பட்டு முற்றிலும் தடம் மாற்றப்பட்ட செவ்விலக்கிய மகளிர் சிலருள் ஒருவரான ஒரு தொன்ம நாயகியின் உரையாடல் இது.
இவள் சரித்திரம்
ஆளுமைகள் அரசிகள்
அற்புத மனுஷிகள்
l முகில்
சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு
விலை: ரூ.444
தங்கள் சாதனைகளாலும் போராட்டங்களாலும் சரித்திரத்தில் இடம்பெற்ற பெண் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் இந்நூல்.
தாயைத்தின்னி
l தில்லை
தாயதி வெளியீடு
தனக்குள் வசித்த மூவரில் ஒருவரான தாயைத்தின்னியை மையமாக வைத்து கதைபின்னியிருக்கிறார் தில்லை. மரங்களோடும் வெற்று அறைகளோடும் தான் பேசியதை இந்த நாவலுக்குள் புதைத்துவைத்திருக்கிறாள் தாயைத்தின்னி.
ருக்மிணி தேவி ஒரு கலை வாழ்க்கை
l வி.ஆர்.தேவிகா
தமிழில்: ஜனனி ரமேஷ்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.250
தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும் சென்னையில் ‘கலாக்ஷேத்ரா’ நடனப் பள்ளியை நிறுவியவருமான ருக்மிணி தேவியின் வரலாற்றைச் சொல்லும் நூல்.
பாதையில் பதிந்த அடிகள்
l ராஜம் கிருஷ்ணன்
பரிசல் வெளியீடு
விலை: ரூ.250
விடுதலைப் போராட்ட வீராங்கனையும் சாதித்தீண்டாமைக்கு எதிராகப் போராடியவரும் இடதுசாரி இயக்கப் போராளியுமான மணலூர் மணியம்மையின் தீரமிக்க வாழ்க்கையைப் பதிவுசெய்கிறது இந்நூல்.