தத்தெடுத்தல், குழந்தைக்கு வாழ்க்கையைப் பரிசளிக்கிறதா, தத்தெடுக்கிறவருக்கு குழந்தை வாழ்க்கையைப் பரிசாகக் கொண்டுவருகிறதா? பின்னதுதான் பொருள் பொதிந்த உண்மை. இந்த உண்மை சுந்தரிக்குப் புரியுமா என்பதுதான் கங்காவின் கவலை. குழந்தை கங்காவுக்குப் பிறந்தது என்பதே இந்தக் கவலைக்குக் காரணம்.
இருப்பினும் சட்டம் தரும் தீர்வுகளை நோக்கி நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினாள் கங்கா. முதல்படியாக, குழந்தை பிறந்தவுடனேயே அருகில் உள்ள இளைஞர் நீதிச் சட்டம் 2015-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள தன்னுடைய சொந்த மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுவிடம் குழந்தையை ஒப்படைத்தாள். அவர்களிடம் குழந்தையைப் பிறருக்குத் தத்துக்கொடுப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்று எழுதிக் கொடுத்தாள். அந்தக் குழந்தையை ஒப்படைத்த 60 நாட்களுக்குப் பிறகு தனக்கும் அந்தக் குழந்தைக்கும் உள்ள உறவு நிரந்தரமாக அற்றுப் போய்விடும் என்பதும் அந்த உறவு தத்து எடுக்கும் பெற்றோருக்கும் அந்தக் குழந்தைக்கும் இடையில் நிரந்தரமாகிவிடும் என்பதும் அதன் பின் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதும் தனக்கு நன்கு தெரியும் என்று உறுதியளித்து, ஒப்புதல் பத்திரமும் எழுதிக் கொடுத்தாள்.
சுந்தரி எதிர்கொண்ட புறக்கணிப்பு
சுந்தரி தன் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தாள். அவளுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. வீட்டுக்கு வந்தவர்கள் வெட்கமேயின்றி சுந்தரியின் மாதவிடாய் வரலாற்றைக் கேட்டுச் சங்கடப்படுத்தினார்கள். கேட்டுவிட்டுப்போய் ‘குழந்தை பெறத் தகுதியற்றவள்’ என்று அவளைத் தூற்றினார்கள். சுந்தரியும் அவளுடைய கணவனும் தங்களுக்கிருந்த சொத்து, சுகம் அனைத்தையும் மருத்துவருக்கும் மருந்துக்குமாகச் செலவு செய்து நிம்மதி இழந்து தவித்ததோடு, சமுதாயத்தின் புறக்கணிப்பையும் நிந்திப்பையும் சந்திக்க முடியாமல் மனம் உடைந்தார்கள்.
சுந்தரியின் சொந்த பந்தத்தில் இருந்த தம்பதியருக்கு ஒன்றுக்கு இரண்டாகக் குழந்தைகள் இருந்தும்கூட, அந்த உறவினர்கள் யாருக்கும் தங்கள் குழந்தைகளில் ஒருவரைத் தத்து கொடுக்க விருப்பமில்லை. சட்டப்படி அப்படிச் செய்ய முடியும் என்ற விழிப்புணர்வும் இல்லை. மனம் நொந்தாள் சுந்தரி. பூங்காவில் திரியும் குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அடையலாமே என்று அங்கு வந்தபோதுதான் கங்காவைச் சந்தித்தாள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
கங்காவின் குழந்தையைத் தத்து எடுக்கலாம் என்று சுந்தரி தன் கணவரிடம் சொன்னபோது, அவர் அதற்கு உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. அதுவும் அந்தக் குழந்தை, கல்யாணம் ஆகாமலேயே தாயான ஒரு பெண்ணின் குழந்தை என்ற எண்ணம் அவன் சம்மதம் தரத் தடையாக இருந்தது. உலகத்துக்கே வராத, உலகத்தையே பார்க்காத, கருவறையில் உள்ள குழந்தை என்ன தவறு செய்தது? அந்தக் குழந்தைக்கு என்ன பொறுப்பு இருக்க முடியும்? இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி, வாதாடி கணவனின் சம்மதத்தைப் பெற்று அதை கங்காவுக்கும் தெரியப்படுத்தினாள் சுந்தரி.
சட்டப்படி விசாரணையை முடித்து குழந்தைகள் நலக்குழுவினர் அந்தக் குழந்தையைத் தத்து கொடுப்பதில் தடையேதும் இல்லை என்று அறிவித்தார்கள். அப்போது கங்காவுக்கு மனம் வலித்தாலும், தன் கர்ப்பப் பையில் இருந்த குழந்தை சுந்தரியின் இதயத்தில்தானே இருக்கப்போகிறது என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
மாற்றமடையும் குழந்தையின் உலகம்
குழந்தை என்பதன் ஆதார சுருதி மரபணு மட்டுமல்ல; அன்பும் அரவணைப்பும்கூட சேர்ந்த ஒரு கூட்டுத் தயாரிப்பு. சுந்தரியும் அவளுடைய கணவனும் இந்தத் தெளிவுடன் தத்தெடுப்புக்குத் தயாரானார்கள். தத்தெடுப்புக்கு மனுச் செய்தபோது நீதிமன்றம், சுந்தரி தம்பதியிடம் தத்தெடுப்பதன் காரணத்தைத் தெரிந்துகொண்டது. ‘ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கொண்டால் உலகம் ஒன்றும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை. ஆனால், அந்தக் குழந்தையின் உலகத்தையே தத்தெடுப்பு ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்துவிடுகிறது. அதாவது ஆபத்துகளால் மட்டுமே சூழப்பட்டிருந்த குழந்தையின் உலகத்தில் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றால் அரண் அமைக்கப்படுகிறது. நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். அதுபோல் குப்பைத்தொட்டியில் கிடந்தாலும்கூடக் குழந்தை குழந்தைதானே. தேவை குழந்தைதானே தவிர அதன் பின்னணி அல்ல’ என்பதை நீதிமன்றம் விளக்கிச் சொல்லி தத்தெடுப்புக்கு அனுமதி அளித்தது. தத்து எடுத்துவந்த குழந்தை வீட்டில் தவழ்ந்து பின்னர் தத்தி தத்தி நடை போட்டபோதெல்லாம் தன்னைத்தானே சுந்தரி பாராட்டிக்கொண்டாள்.
தத்தெடுப்பின் மகத்துவம்
தத்தெடுப்பின் மகத்துவம் அரிதாகவே உணரப்படுகிறது. முந்தைய காலங்களில் தத்தெடுப்பு என்பது உறவினர் வீட்டுக் குழந்தைகளை அழைத்துவந்து வளர்த்து, பிள்ளைப்பேறு இல்லாத ஏக்கத்தை, சமூகத்தின் ஏச்சு பேச்சுக்களால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் ஒரு ஏற்பாடாக இருந்தது. மேலும், சமயச் சடங்குகளில் ஆண் வாரிசுகளின் பங்கைச் சாத்திரங்களும் சடங்குகளும் வலியுறுத்தின. முக்கியமாக இந்து மதத்தில் பெற்றோர் இறந்துவிட்டால் கொள்ளி வைப்பதற்கு ஆண் மகன் இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இதனால் பெரும்பாலும் தத்து எடுக்கப்படும் குழந்தைகள் ஆண் குழந்தைகளாகவே இருந்தனர்.
பெண்களுக்கு மகப்பேறு வாய்க்காத காரணத்தால் அவர்கள் திருமண வாழ்க்கை முறிந்துபோகும் அளவுக்குப் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. இதற்கு மருத்துவம், மனவியல், வயது சார்ந்த பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஆண்களை அப்பாவிகள் என்று விட்டுவிட்டுப் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் சமூகக் போக்கு இன்னும் மாறவில்லை. ஆண்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள மறுப்பதும், பெண்களை மட்டுமே மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மருத்துவப் பரிசோதனையில் பெண்ணால்தான் பிள்ளைப்பேறுக்கு வாய்ப்பில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால், இதையே காரணமாக வைத்துக்கொண்டு, அவளை மணவிலக்கு செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. இவற்றுக்கெல்லாம் மானுடம் கண்டறிந்த மருந்தாகவும் தத்தெடுப்பு இருக்கிறது.
(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago