அதிகரிக்கும் நீரிழிவு நோய்: கட்டுப்படுத்தும் வழிகள் என்ன?

By செய்திப்பிரிவு

ஓர் இளம் நடிகர், சில ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் ஆகியோரின் சமீபத்திய எதிர்பாரா மரணங்கள், எப்படி, எவ்வாறு, ஏன் நடைபெற்றன என்பது குறித்து சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏராளமான விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதைவிடக் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும் பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

புகை பிடித்தல், அதீத உடல் எடை, அதிக ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகப்படியான மன அழுத்தம், நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், பரம்பரை அம்சங்கள் போன்றவை நமது அன்றாட வாழ்க்கையையும், வாழ்க்கைத் தரத்தையும் பெரும் அபாயத்தில் தள்ளியுள்ளன. முக்கியமாக, நீரிழிவு நோய். இன்னும் பல தலைமுறைகளுக்குத் தொடரப்போகும் நீரிழிவு நோயின் அபாய அம்சங்கள், அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது அல்லது தடுப்பது குறித்த விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியமாகும்.

அதற்கான எளிமையான ஆலோசனைகள் இங்கே:

உங்கள் உடல்நிலை குறித்த பரிசோதனைகளை வாழ்க்கையின் இளம் வயது அதாவது 25 அல்லது 30 வயது முதற்கொண்டு, லைஃப் ஸ்டைல் மாறிக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிடுங்கள்.

உங்கள் மருத்துவ ஆலோசகர் அல்லது குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஏற்கெனவே இருக்கும் மருத்துவப் பிரச்சினைகள், வாழ்க்கை முறை, குடும்ப வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் விவாதியுங்கள். நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதை விட வருமுன் கண்டுபிடிப்பது அல்லது தடுப்பதே சிறந்ததாகும்.

மிதமான உடற்பயிற்சி அவசியம் ஆகும். அதிக உடற்பயிற்சி தேவையில்லை. தினசரி 20 - 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி போதுமானது. அதற்காக தினசரி உடற்பயிற்சி செய்வோர்க்கு எந்த நோய்க்குறியும் இல்லாத காரணத்தால், இதய நோய் அல்லது மாரடைப்பு வராது என்று பொருளல்ல. இதய ரத்தக் குழாய்களில் கடுமையான அடைப்புள்ள பெரும்பான்மை நோயாளிகளுக்கு, எந்த விதமான நோய்க்குறியோ, மருத்துவப் பரிசோதனையோ இல்லாமலும் இதயத் தமனி நோய் வரலாம். எனவே, இந்த முக்கியக் காரணத்துக்காக மருத்துவ ஆலோசகரையோ, குடும்ப மருத்துவரையோ அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

நீரிழிவுத் தடுப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் சீரான உணவு முறை முக்கியப் பங்களிக்கிறது. சீருணவு நிபுணரைச் சந்தித்து, ஆரோக்கிய உணவு, குறைந்த க்ளைசெமிக் குறியீடுள்ள சீரான உணவு முறை குறித்த ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. மேலும், அதீத எடை, கொழுப்புக் கோளாறுகள், அடிவயிறு கொழுப்பு ஆகியவற்றைத் தவிர்க்க எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சீருணவு மருத்துவர் கூறுவார்.

சில நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசியும், சிலருக்கு மாத்திரைகளும், சிலருக்கு ஊசிகளும் மாத்திரைகளும் தேவைப்படலாம். சிலருக்குத் தினசரியும், சிலருக்கு வாரம் ஒரு முறையும் இன்சுலின் ஊசி செலுத்தப்படும். நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், பிரச்சினைகளைத் தடுக்கவும், இன்சுலின் செலுத்திக்கொள்ள வேண்டிய சரியான முறை, உடலுக்கு ஏற்ற சரியான மருந்து மாத்திரைகள் ஆகியவை குறித்து மருத்துவர் அளிக்கும் வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் நீரிழிவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி நீரிழிவின் தாக்கம் 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களிடம் அதிகம் காணப்படுவதாகவும், பெரும்பான்மையோரின் பிஎம்ஐ 23 kg/m2 அதிகம் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உங்கள் உடல்நிலை குறித்த அபாய அம்சங்களை வாழ்க்கையின் இளம் வயது- அதாவது 25 அல்லது 30 வயதிலேயே அடையாளம் காணுங்கள். நோய்ப் பரிசோதனைகளை விரைவில் மேற்கொண்டு முறையான சிகிச்சையையும் தொடங்குங்கள்.

புகை பிடித்தல், அதீத உடல் எடை, அதிக ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை குறை, அதிகப்படியான மன அழுத்தம், நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், அடிவயிற்றில் கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, குடும்ப வரலாறு ஆகியவை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய அபாய அம்சங்களாகும். அதிக உடல் எடைகொண்ட நீரிழிவு நோயாளிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சையைத் தொடங்குவது பாதிப்பைக் குறைக்க உதவும்.

கட்டுரையாளர்- டாக்டர் தாமஸ் ஜார்ஜ்,

நீரிழிவு மற்றும் பொது மருத்துவர்,
வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்