கரோனா தாக்குதல்: அச்சுறுத்தும் வைரஸ் - அன்றும் இன்றும்

By செய்திப்பிரிவு

முகமது ஹுசைன்

மனித குலத்துக்கு வைரஸ் தாக்குதல்கள் புதியவையல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு, 1918-ல் கொடூரமாகப் பரவிய ஸ்பானிய ஃபுளு 50 கோடிக்கும் அதிகமா னோரை பாதித்து, ஐந்து கோடிக்கும் அதிகமா னோர் பலியாகக் காரணமாக இருந்தது.

அறிவியலும் தொழில்நுட்பமும் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்றைக்கு வளர்ந்துள்ளன. மரபணுத் திருத்தம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பிக் டேட்டா போன்றவற்றால் மனிதர்கள் தாங்களே உலகை ஆட்டுவிப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மரணத்துக்கே சவால்விடக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக மனித இனம் மார்தட்டிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் கரோனா என்ற கோவிட் 19 தாக்குதல், மனிதகுல அறிவின் வீச்சை மட்டுமல்லாமல், அறிவியல் தொட்ட எல்லைகளையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. வல்லரசு என்று மார் தட்டிக்கொண்ட பல நாடுகள் கரோனாவை எதிர்க்கத் திராணியற்று மண்டியிட்டு நிற்கின்றன.

உலகெங்கும் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உலகில் பல நாடுகள் முற்றிலும் முடங்கிவிட்டன. உலகெங்கும் விமான நிலையங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 181-க்கும் மேலான நாடுகள், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 2,45,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 88,465 பேர் குணமடைந்துள்ளனர். 10,048 பேர் வியாழக்கிழமைவரை இறந்துள்ளனர்.

இந்தியாவின் நிலை

இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் குணமடைந்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், பெரும் வணிக மையங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. பொது இடங்களில் கூட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை நோய் (Epidemic) என்றால் என்ன?

கொள்ளை நோய் (Epidemic) என்பது குறிப்பிட்ட பகுதியிலோ குறிப்பிட்ட சமூகத்திலோ பரவும் ஒரு தொற்றுநோய். அந்த நோயானது புதிதாகப் பரவத் தொடங்கும்போது, எதிர்பார்ப்பதைவிட தீவிரமானதாக இருக்கும். இந்த வகை அறிவிப்பில், அந்த நோய் பரவும் காலம், பகுதி அல்லது சமூகம் போன்றவை துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

உலகளாவிய தொற்றுநோய் (Pandemic) என்றால் என்ன?

Pan, demos ஆகிய கிரேக்கச் சொற்களி லிருந்து உருவான சொல் இது. Pan என்றால் ‘எல்லாம்’, demos என்றால் ‘மக்கள்’, அதாவது எல்லா மக்களுக்கும் என்று பொருள். எந்த ஒரு புதுத் தொற்று நோயும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கினால், அது உலகளாவிய தொற்றுநோய் என்று அழைக்கப்படும்.

நோயின் தீவிரத்தின் அடிப்படையில் அல்லாமல்; நோய் பரவும் இயல்பின் / வேகத்தின் அடிப்படையில் உலகளாவிய தொற்றுநோய் அறிவிக்கப்படுகிறது. 110-க்கும் மேற்பட்ட நாடுகளில், 1,18,000 பேருக்கும் மேலானோரை கோவிட்-19 பாதித்துள்ளதால், 2020 மார்ச் 11-ல் இது ஓர் உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

கோவிட்-19

உலக சுகாதார நிறுவனத்தால், உலகளாவிய தொற்றுநோய் என இந்த நோய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண் இமைக்கும் நேரத்தில், உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிய கோவிட்-19, வரலாறு காணாத வகையில் உலகையே முடக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவரின் மூக்கிலிருந்தோ வாயிலிருந்தோ வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாக, இந்த நோய் மனிதர்களிடையே வேகமாகப் பரவுகிறது.

கோவிட்-19: எப்படி மாறுபட்டிருக்கிறது?

புதுமைக் காரணி

இது ஒரு புது வைரஸ். எனவே, இது ஒரு புரியாத புதிர். இந்த நோய்க்கான எதிர்ப்பாற்றால் யாருடைய உடலிலும் இன்னும் உருவாகவில்லை.

தீவிரத் தொற்று

இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவும் தன்மையுடையது. சுவாசப்பாதையிலிருந்து வெளியேறும் சிறிய நீர்த்துளிகளின் மூலம் பரவுவதால், இதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

உலகளாவிய பரவல்

நோயின் தொடக்கப்புள்ளியான வூகான் நகரம், ஒரு வர்த்தக மையம். இன்றைய உலகம், உலகமயமாக்கப்பட்டு நன்கு பிணைக்கப்பட்டிருப்பதால், இந்தத் தொற்றும் வேகமாகப் பரவுகிறது.

இறப்பு விகிதம்

இந்த நோயின் இறப்பு விகிதம் 4.1 சதவீதம் என உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது இன்ஃபுளூயன்ஸா இறப்பு விகிதத்தைவிட அதிகம்.

அறிகுறியின்மை

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், மிக லேசான அறிகுறிகளுடனோ அறிகுறிகளற்றோ இருக்கின்றனர். இதனால், இந்த நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவதோ கட்டுப்படுத்துவதோ சவாலானது.

பிற தொற்றுகள்

1918-ல் ஐந்து கோடி பேரைப் பலி வாங்கிய ஸ்பானிஷ் ஃபுளுவிலிருந்து நூற்றுக் கணக்கானோரின் உயிரைப் பறித்த சார்ஸ்/மெர்ஸ் போன்ற சில வைரஸ் தொற்றுநோய்கள் இதற்கு முன்பு மனித குலத்தைக் கடுமையாக பாதித்துள்ளன.

ஸ்பானிஷ் ஃபுளு

உலக வரலாற்றில் மிகக் கொடூரமான தொற்றுநோயாக இது கருதப்படுகிறது. முதலாம் உலகப் போரைவிட அதிகமானோர் இந்தத் தொற்றுநோய்க்குப் பலியாகியுள்ளனர். பறவையின வழித்தோன்றலின் மரபணுக்களைக்கொண்ட ஹெச்1என்1 வைரஸால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டது. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.

சார்ஸ்

(சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்)

காற்றில் பரவும் சார்ஸ் என்ற கரோனா வகை வைரஸால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட்டது. இன்ஃபுளுயன்ஸா நோயின் ஒத்த அறிகுறிகளை இது கொண்டிருக்கும். இதன் காரணமாக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், தீவிரமாகத் தொற்றும் தன்மையுடைய நிமோனியா ஏற்படும்.

ஹெச்1என்1

ஸ்வைன் ஃபுளு என்றும் இது அழைக்கப் படுகிறது. வைரஸின் துணையினம் உலகம் முழுவதும் பரவியதால் இந்த நோய் ஏற்பட்டது. இதுவே, 21-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட, இன்ஃபுளுயென்சா நோயின் முதல் உலகளாவிய தொற்று. அமெரிக்காவே இந்த நோயின் தொடக்கப்புள்ளியாக இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டன.

மெர்ஸ் (மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம்)

விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய இந்தக் கரோனா வகை வைரஸால், சுவாச நோய் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஒட்டகத்திலிருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவையே இதன் அறிகுறிகள்.

எபோலா

எபோலா வைரஸ் தொற்று அரிதானது. உக்கிரமாகத் தாக்கும் இந்த நோய், பெரும்பாலும் உயிரைப் பறிக்கும் அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வௌவால்கள் போன்ற காட்டுயிர்களிட மிருந்து இந்த வைரஸ் மனிதனுக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவத்துடனோ ரத்தத்துடனோ அசுத்தமான பொருட்களுடனோ ஏற்படும் நேரடி தொடர்பு மூலமாக இது மனிதர்களிடையே பரவுகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்