ஆரோக்கியமான, எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்குக்கூட புற்றுநோய் ஏற்படுகிறதே... அதற்கு என்ன காரணம் டாக்டர்? - ஜெயப்பிரகாஷ், சென்னை.
நம் மக்கள் மது, புகைப்பழக்கம், தவறான உடலுறவு ஆகியவற்றை மட்டுமே கெட்டப் பழக்கங்களாக நினைக்கிறார்கள். இந்தக் கெட்டப் பழக்கவழக்கங்கள் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்துகள் கொண்டவை என்பது சரிதான். அதேநேரத்தில் நவீன யுகத்தில் உடல் பருமன், தேவையான உடற்பயிற்சி இல்லாமை, போதுமான உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறைகள் (Unhealthy Diet), உறக்கமின்மை, மன அழுத்தம் போன்ற நிலைகளுக்கு மனிதன் ஆட்பட்டு இருப்பதும் கெட்டப் பழக்கவழக்கங்கள்தான்!
ஏனென்றால் இவையும் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அட போங்க டாக்டர், நீங்கள் சொன்ன வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்து விட்டோம். உணவு பழக்கவழக்கங்களையும் முறையாக மேற்கொள்கிறோம். பிறகும் ஏன் புற்றுநோய் வருகிறது என்றால், அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
* புற்றுநோய்கள் பரம்பரை, மரபணு காரணங்களால் (Inheritance, genetics) ஏற்படலாம்: மார்பகம், கருப்பை, பெருங்குடல், வயிற்றுப் புற்றுநோய்கள்.
* ரெட்டினோபிளாஸ்டோமா (கண்) போன்ற சில குழந்தைப் பருவ புற்றுநோய்கள் மரபணு பிறழ்வுகளுடன் தொடர்புடையவை.
தொற்றுகளால் ஏற்படும் புற்றுநோய்கள்: ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா (H.pylori) இரைப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தும். எப்ஸ்டீன்-பார் வைரஸ் (Burkitt lymphoma and Hodgkin lymphoma) லிம்போமா வகை புற்றுநோய்களை ஏற்படுத்தலாம். ஹியூமன் பாபிலோமா வைரஸ் (Human Papilloma virus) கர்ப்பபை வாய்ப் பகுதியில் (Cervical Cancer) புற்றுநோயைப் பெண்களுக்கு ஏற்படுத்துகிறது. ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தொற்றுகள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
கதிர்வீச்சு (Radiation): புற ஊதா, அயனியாக்கும் கதிர்வீச்சின் தாக்கத்தால் லுகேமியா (ரத்தப் புற்றுநோய்), நுரையீரல், மார்பகம், கணையம், தைராய்டு, குடல் புற்றுநோய்களை ஏற்படுத்தலாம்.
* சுற்றுச்சூழல் காரணிகளால் புற்றுநோய் ஏற்படும் (Environmental Factors). காற்று மாசுபாட்டினால் நுரையீரல் புற்றுநோயுடன் கல்லீரல், கணையப் புற்றுநோய்களும் ஏற்படும்.
* காற்று, நீர் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்கள் வேதி, நச்சுப் பொருள்களால் புற்றுநோய் (Chemical carcinogens) ஏற்படும். ஆஸ்பெஸ்டாஸ், மீசோதெலியோமா போன்றவை நுரையீரல் புற்றுநோய், குரல்வளைப் புற்றுநோயையும், ‘அஃப்லாடாக்சின்' பூஞ்சை நஞ்சு கல்லீரல் புற்றுநோயையும், ‘ஆர்சனிக்' நுரையீரல், சிறுநீர்ப்பை, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்.
* ஹார்மோன் பிரச்சினைகள், உடல் எதிர்ப்பாற்றல் பிரச்சினைகள் ஆகியவையும் புற்றுநோய் உருவாக்கத்தைத் தூண்டும். உண்மையில் மரபணு, உடல் ஆரோக்கிய நிலை, உடல் எதிர்ப்பாற்றல் நிலை, வாழ்க்கை முறை, தொற்று நிலை, சுற்றுச்சூழல் பாதிப்பு எனப் பல்வேறு காரணிகளின் சேர்க்கையினைப் பொறுத்தும், அவை உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தும்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே, இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.
1. எந்தெந்தக் காரணங்களால் புற்றுநோய் வருகிறதோ அவற்றிலிருந்து ஒவ்வொருவரும் விடுவித்துக்கொள்ள வேண்டும். அவற்றால் புற்றுநோய் வராமல் தடுக்க / தவிர்க்க வேண்டும்.
2. முதியவர்கள், பரம்பரை, குடும்பக் காரணங்களால் வர வாய்ப்பு உள்ளவர்கள் ஆண்டுதோறும் ஒரு முறை பரிசோதனைகளைச் (screening) செய்துகொள்ள வேண்டும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகமிக அவசியம். பலரும் எனக்குத்தான் அறிகுறிகள் இல்லையே என்று இருப்பார்கள். இன்னும் சிலர் தோன்றும் அறி குறிகளையும் கண்டு கொள் ளாமல் அலட் சியமாக இருந்து விடு வார்கள். புற்றுநோயை ஆரம்ப நிலை யிலேயே கண்ட றியவும் முடியும்; குணப்படுத்தவும் முடியும்.
மருத்துவம் தொடர்பாக உங்களுக்கு எழும் சந்தேகங்கள், கேள்விகளை எங்களுக்கு எழுதி அனுப்பலாம். இதற்கு உரிய விளக்கங்கள், பதில்களை பேராசிரியர் டாக்டர் சு.முத்து செல்லக் குமார் அளிப்பார்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nalamvaazha@hindutamil.co.in